வெள்ளி, 8 ஜூலை, 2011

தயாநிதி பிரச்னை .கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்பு

தயாநிதி விவகாரத்தால், தனது அரசுக்கு ஏற்படப்போகும் புதிய நெருக்கடியை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த ஜே.பி.சி., விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லியில் பாலு முகாமிட்டுள்ள சூழ்நிலையில், அவரிடம் தயாநிதி பிரச்னை குறித்து பிரதமர் பேசினார். "சி.பி.ஐ., தனது விசாரணை அறிக்கையில், தயாநிதி பங்கு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுகுறித்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையை தி.மு.க., மேற்கொள்ள வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.பிரதமரின் இந்த தகவலை உடனடியாக, டி.ஆர்.பாலு, சென்னையில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டார். அந்த இரவிலேயே தி.மு.க., தலைமையும், தயாநிதி தரப்பும் மாறி மாறி பேசி ஆலோசனை நடத்தினர். ஒரு கட்டத்தில், கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்பு கொண்டு பேசினர். நேற்று காலையில் தயாநிதி இல்லத்திற்கு டி.ஆர்.பாலு விரைந்தார். "நீங்கள் ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழியில்லை' என, அப்போது தயாநிதியிடம் பாலு தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாகனவதி ஆகியோரையும் அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில், விசாரணை அறிக்கையில் பெயர் இருந்தால் அது எப்.ஐ.ஆர்., அறிக்கை போல கருதிவிட முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.
பிறகு, மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது இல்லத்தில் இருந்து வழக்கம்போல தயாநிதி கிளம்பிச் சென்றார். கேபினட் கூட்டத்தில் இவர் பங்கேற்பது போல வெளியில் ஒரு தோற்றம் காட்டப்படவே, ராஜினாமா செய்தியில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றாரா, இல்லையா என்று கூட்டத்தின் முடிவில், அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்டபோது, அவர் பங்கேற்றார் என்றார். ஆனால், உண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்கவில்லை .
பிரதமரை நேரில் சந்தித்து தனது ராஜினாமாவை தள்ளிப்போடச் செய்ய முயற்சி எடுத்தார். "ராஜினாமா செய்ய தயார் என்றும், அதற்கு ஒரு மாதகால அவகாசம் வேண்டும்' என்று பிரதமரிடம், தயாநிதி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதே கோரிக்கையை ஏற்கனவே தி.மு.க., தலைவரான கருணாநிதியிடமும், தயாநிதி வைத்தார். அது முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடைசி முயற்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் தொடர்பு கொள்ள முயற்சித்து, அவரது ஆலோசகர் அகமது படேலுடனும், தயாநிதி தரப்பு பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அனைத்து தரப்புமே தன்னை கைவிட்டுவிட்ட நிலையில், வேறு வழியில்லை என்ற நிலை தயாநிதிக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு நேற்று பிற்பகல் தயாநிதி சென்றார். அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்த பி.எம்.டபிள்யூ., காரில் தயாநிதி சென்றார். அந்த சந்திப்பின் போது, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமரிடம், தயாநிதி அளித்தார். இந்த ராஜினாமாவால், இரண்டாவது முறையும் தயாநிதி , ஐந்து ஆண்டுகள் முழுமையாக அமைச்சராக இல்லாமல் துரதிர்ஷ்டவாசியாக வெளியேறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையின் நிலைமை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, இந்த ஊழலில் இதற்கு முன்பும் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. குறிப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் விசாரணை அறிக்கையை மட்டுமாவது தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், தயாநிதியின் பெயரை சி.பி.ஐ., குறிப்பிட்டிருந்தது. "ஏர்செல் கம்பெனியை விற்பதற்கு நெருக்கடி அளித்து, அதன் நிறுவனர் சிவசங்கரனை தயாநிதி மிரட்டியது உண்மைதான்' என்று குற்றம்சாட்டியிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பங்கு இருப்பதை சி.பி.ஐ., உறுதி செய்தது.இந்த குற்றச்சாட்டை அடுத்து தயாநிதி மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர்.

-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக