வெள்ளி, 8 ஜூலை, 2011

கூட்டணி சிக்கல்-கருணாநிதியை சந்திக்கும் பிரணாப்

சென்னை: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவிருக்கிறார்.

2ஜி விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக இதே 2ஜி ஊழலி்ல் சிக்கிய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக முக்கியத் தலைகள் கைதாகி வருவதும், விலகி வருவதாலும், திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டது.

திமுக தலைவர் கருணாநிதி 2 முறை டெல்லி போயும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்திக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடமாகியுள்ளது. இந்த நிலையில் திமுக தலைமையை சந்தித்து உறவு குறித்து நம்பிக்கை கொடுப்பதற்காக பிரணாப் முகர்ஜியை சோனியா காந்தி சென்னைக்கு அனுப்பவுள்ளார்.

தயாநிதி மாறன் ராஜினாமா செய்த பிறகு காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் சந்தித்து பேசவிருப்பது இது தான் முதல் முறை.

தயாநிதி மாறன் ராஜினாமாவால் காங்கிரஸ்-திமுக உறவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. 2ஜி விவகாரத்தில் மாறன் பெயர் அடிபட்டதுமே அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸுக்கு வேலை கொடுக்காமல் தயாநிதி மாறனே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

அதே நேரத்தில் தயாநிதி மாறனின் ராஜினாமாவால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிகிறது.

திமுக மத்தியிலும், மாநிலத்திலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் ராசா, எம்.பி. கனிமொழி ஆகியோர் திஹார் சிறையில் உள்ளனர்.

தமிழகத்திலும் நாளும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வரும் நிலையில் திமுக, காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக