வியாழன், 28 ஜூலை, 2011

கலைஞர் டெலிபோனையே ஒட்டுக்கேட்ட ஜாபர் சேட் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: ஜாபர் சேட் வீட்டில் நடத்திய சோதனையில், பெருமளவிலான சி.டி.,க்கள் சிக்கின. இவற்றை ஆய்வு செய்ததில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் சிலரின் உரையாடல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையினர், "ஷாக்' ஆகியுள்ளனர். கடந்த, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்து கோலோச்சியவர் ஜாபர் சேட். மிக முக்கிய பதவியில் இருந்ததால், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, பல வகைகளில் தனக்கு தேவையானதை செய்து கொண்டவர். ஆட்சி மாறியதும், இவரது காட்சியும் மாறியது. மண்டபம் அகதிகள் முகாமை கவனிக்கும் அதிகாரியாக மாற்றப்பட்டார். தொடர்ந்து, இவர் மீது புகார்கள் குவியத் துவங்கின. அதில் ஒன்று தான், சென்னை திருவான்மியூர் பகுதிகளில், வீட்டு வசதி வாரிய மனையை, உண்மைகளை மறைத்து ஒதுக்கீடு பெற்று, அவற்றை வீடுகளாக கட்டி விற்பனை செய்து, வாரியத்தை ஏமாற்றியது.
சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர், தலைமைச் செயலரிடம் கொடுத்த புகார், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆட்டம் போட்ட ஜாபர் சேட் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது. நேற்று முன்தினம், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனையிட்டனர். சென்னையில் எட்டு இடங்கள், பெரிய குளத்தில் ஒன்று என, ஒன்பது இடங்களில் ரெய்டு நடந்தது. இதில், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் டிபன்ஸ் காலனி வீடு, பெரிய குளத்தில் உள்ள ஜாபரின் மாமனார் சலீமின் வீடு ஆகியவை முக்கியமானவை. மற்ற வீடுகளில் ஒன்றும் சிக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஜாபரின் அண்ணாநகர் வீட்டில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சுப்பையா, ஜெயலட்சுமி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஐந்து மணி நேரத்திற்கும் மேல் சோதனையிட்டனர். இதில், இரண்டு லேப்-டாப்கள், எட்டு, "ஐ-பாட்'கள் மற்றும் 35 சி.டி.,க்கள் மற்றும் மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்துக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், இரவு 9 மணிக்கு, திருவான்மியூரில் உள்ள ஜாபரின் வீடு, கே.கே.நகர் ராமசாமி சாலையில் உள்ள ராஜமாணிக்கத்தின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். இரண்டு வீடுகளும் காலியாக இருந்தாலும், அவற்றை உரியவர்கள் முன்னிலையில் திறந்து, இரவு 12 மணி வரை சோதனையிட்டுள்ளனர். ஆனால், அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜாபர் சேட்டின் வீட்டில் கைப்பற்றப்பட்ட, சி.டி.,க்களில் உள்ள தகவல்கள் குறித்து, அதற்கென போலீசில் உள்ள பிரத்யேக,"லேப்'பில் ரகசியமாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், கடந்த ஐந்தாண்டுகளில் உளவுத்துறையில் அவர் இருந்த போது, பதிவு செய்த டெலிபோன் உரையாடல்கள் இருந்தது. அதில், குறிப்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரின் உரையாடல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த சி.டி.,க்களில் வேறு யாருடைய உரையாடல்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஜாபருடைய, "ஐ-பாட்கள், லேப்-டாப்'களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்த போது, கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முக்கிய சில நிகழ்வுகளுக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளன. பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, ஜாபர் மற்றும் துர்கா சங்கரின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அவற்றின் மூலம் வழக்கு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக