ஞாயிறு, 3 ஜூலை, 2011

இலங்கை எல்லைக்குள் கிடைக்கிற மீன்களை நினைத்து, நாகப்பட்டினம், ராமேஸ்வரம்

மீனவர்களின் பிரச்சனை!
– துர்வாசர்
சில தினங்களுக்கு முன்னால், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியது என்ற செய்தி வெளியானதும், ராமதாஸ் முதல் சகல அரசியல் வாதிகளும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இலங்கையுடன் இந்திய அரசுக்கு இதுவரை ராஜரீக உறவு சுமூகமாகத்தான் உள்ளது. தமிழகம் தவிர இதர மாநிலங்களில் உள்ள அரசியல் வாதிகளும் இந்த உறவை அங்கீகரித்துதான் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் அண்ணாதுரை காலத்திலிருந்தே இலங்கை அரசையும், சிங்களவர்களையும் வில்லன்களாகச் சித்தரிக்கிற ஒரு பழக்கம் இருந்து வருகிறது.

இந்தத் திராவிட அரசியல்வாதிகள் பாகிஸ்தான் பிடித்துச் செல்லும் குஜராத் மீனவர்களைப் பற்றி பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதில்லை. காஷ்மீரில் குண்டுகளை வெடிக்கிற முஸ்லிம் தீவிரவாதிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. பாகிஸ்தானையும், காஷ்மீர் முஸ்லிம் தீவிரவாதிகளையும் கண்டிக்கப் போக, தமிழக முஸ்லிம் ஓட்டுக்கள் பறிபோனால் என்ன செய்வது என்று பயம்!

இலங்கை அரசுடன் மோதுவது என்கிற தமிழ்நாட்டு அரசியலின் பாரம்பரியக் கொள்கையின்படிதான், தமிழக மீனவர்கள் பிரச்சனையையும் இவர்கள் அணுகுகிறார்கள். ‘ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆளுக்கு ஒரு கைத்துப்பாக்கி கொடுக்க வேண்டும்’ என்று ஒரு அரசியல்வாதி பேசுகிறார். இன்னொருத்தர் ‘ராமேஸ்வரம் மீனவர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார். மீனவர்களின் பாதுகாப்புக்காக, அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மீன் பிடிக்க வழி செய்ய வேண்டும் என்று ஒருவர் திருவாய் மலர்கிறார்.

மீனவர் பிரச்சனையின் அடி வேர் என்ன? இலங்கை கடற்படை சென்னை, பாண்டிச்சேரி மீனவர்களையோ, ராமேஸ்வரத்துக்குக் கீழே இருக்கிற தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்களையோ சிறை பிடித்துச் செல்வதில்லை. நாகப்பட்டினத்திலிருந்து ராமேஸ்வரம் வரை இலங்கையின் கடல் எல்லை இந்தியக் கடல் எல்லைக்குச் சமீபமாக வருகிறது. இந்தியக் கடல் எல்லை எவ்வளவு தூரம் என்பது, காலம் காலமாக மீன் பிடித்து வருகிற இந்தப் பகுதி மீனவர்களுக்குத் தெரியாமல் இல்லை.

ஆனாலும், இலங்கை எல்லை பகுதியினுள் கிடைக்கிற மீன்களை நினைத்து, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் எல்லையை தாண்டிச் சென்று விடுகிறார்கள். அங்கே ஏராளமான இறால்கள் கிடைக்கும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பு. இதை ராமேஸ்வரம் மீனவர் ஒருவரே முன்பு என்னிடம் கூறினார்.

இலங்கையின் வடபகுதியில் இன்னும் உள்நாட்டுத் தீவிரவாதிகளுடைய பிரச்சனையின் அச்சம் தணியவில்லை. இந்த நிலையில் இந்தியக் கடல் எல்லையுடன் மிக நெருங்கி வருகிற தன் நாட்டின் கடல் பகுதியை, அந்நாட்டு அரசு விழிப்புடன் கண்காணிப்பதை தவறு என்று சொல்ல முடியாது.

சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் இலங்கைக் கடலின் வட பகுதியில் கிடைக்கிற மீன்களுக்காக ஆசைப்பட்டு அத்து மீறுவதில்லை. ஆனால், நாகப்பட்டினத்திலிருந்து ராமேஸ்வரம் வரையுள்ள மீனவர்கள்தான் இந்தியக் கடல் பகுதியைத் தாண்டி விடுகின்றனர். அப்படிச் செய்துவிட்டு, பின்னர் ‘இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்து விட்டது, தமிழக மீனவர்களின் மீன்களைக் கொள்ளை அடித்துவிட்டது’ என்று குற்றம் சாட்டுவதில் என்ன அர்த்தம்?

ஒன்று, நமது கடல் எல்லைக்குள் கிடைக்கிற மீன்களுடன் இப்பகுதி மீனவர்கள் திருப்தி அடைய வேண்டும். அல்லது இலங்கை – இந்திய அரசுகள் கடலில் எல்லைகளைக் குறிக்கும் மிதவைகளை அமைக்க வேண்டும்.

நன்றி: துக்ளக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக