வெள்ளி, 1 ஜூலை, 2011

நாயன்மார்கட்டு வெயிலுகந்த பிள்ளையார் கோயில் சுற்றாடலில் இளைஞர்கள் சிலரின் அட்டகாசத்தால்

நாயன்மார்கட்டு வெயிலுகந்த பிள்ளையார் கோயில் சுற்றாடலில் இளைஞர்கள் சிலரின் அட்டகாசத்தால் அங்கு வழிபடச் செல்வோரும், வீதியால் செல்வோரும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி ஆலயச் சுற்றாடலில் தினமும் ஒன்று கூடும் இந்தக் கும்பல் அங்கு வைத்து மது அருந்துவதுடன், புகைத்தலிலும் ஈடுபட்டு வருவதாகவும், அத்துடன் வீதியால் செல்லும் யுவதிகளுடனும் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், இதுபற்றித் தட்டிக் கேட்பவர்கள் இந்தக் கும்பலால் தாக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் உலாவரும் இந்தக் கும்பலில் மாணவர்கள் சிலரும் உள்ளமை பெரும் வேதனையளிப்பதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இந்த வீதியால் சைக்கிளில் வந்த இருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இந்தக் கும்பல் மோதி சைக்கிளைச் சேதமாக்கியதுடன் நியாயம் கேட்டவர்களை நடுவீதியில் வைத்துப் பொல்லுகளால் தாக்கியதாகவும் கூறப்பட்டது.

எனவே, இந்த விடயத்தில் கோப்பாய் பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்தக் கும்பலின் அட்டகாசத்தை முற்றாகக் கட்டுப்படுத்துவதுடன் மேற்படி சுற்றாடலையும் ஆலய வழிபாட்டுக்கு ஏற்றவாறு சீர்செய்து தருமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக