சனி, 23 ஜூலை, 2011

அழகிரியை கைது செய்ய முயற்சி?எஸ் ஆர் கோபி எழுதிய ஒரு கடிதத்தை வைத்து

மத்திய அமைச்சர் முக அழகிரியின் வலது கரமாக செயல்பட்டு இப்போது தலைமறைவாக உள்ள எஸ் ஆர் கோபி எழுதிய ஒரு கடிதத்தை வைத்து அழகிரியை கைது செய்ய போலீசார் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரையில் நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி.

இவரது வீடு- தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை புறநகர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை விட முக்கியமாக மத்திய அமைச்சர் முக அழகிரிக்கு எதிரான ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தகவல் கசிய விட்டுள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில் எஸ் ஆர். கோபி குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பு சில விஷயங்களைத் தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில், "என் உயிராக நினைத்து கொண்டிருக்கும் என் அண்ணன் அழகிரிக்கு... என் குடும்பமே கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப்படாமலேயே சிக்கியதால் மருதுவையும், மாமா முத்துராமலிங்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் ஒரு வெறியுடன் தங்களின் கட்டளையை செய்ய முடிந்தது.

அருப்புக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றிபெற செய்தோம். நான் பதவி கேட்கும் போதெல்லாம் நண்பர் சுரேஷ் (பொட்டு சுரேஷ்) “உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கொடுத்தாகி விட்டது என்று திரும்ப திரும்ப சொல்வார். அப்படி பார்த்தால் தளபதியின் தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு எம்.எல்.ஏ. சீட், மாநகர் மாவட்ட செயலாளர் பதவி, துணைமேயராக இருந்த கவுஸ்பாட்சாவுக்கு எம். எல்.ஏ. சீட் அவர்களெல்லாம் உங்களுக்கு என்ன தியாகம் செய்தார்கள்.

நான் செய்த தியாகத்தில் ஒரு சதவீதமாவது விசுவாசமாக நடந்திருப்பார்களா? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன். ஆவின் சேர்மன் பதவி கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா? எனக்கு மட்டும் பதவியில் அமர ஆசை இருக்காதா? யாரையோ திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள்?," என்று கோபி கூறியுள்ளாராம்.

மேலும் அந்த கடிதத்தில் பஸ் எரிப்பு, இடைத்தேர்தல் வன்முறை, அக்னி ராஜ், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வீடுகளில் நடந்த தாக்குதல், தா. கிருஷ்ணன் கொலை ஆகியவை பற்றி அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அப்படிப் பார்த்தால் முதல் விசாரணை மற்றும் கைது அழகிரியிலிருந்தே ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

ஆனால் அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். "எஸ்ஆர்.கோபி எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. போலீசார் போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து அவதூறு பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்," என்றார்.

இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக