ஞாயிறு, 3 ஜூலை, 2011

திமுகவின் தோல்வி யாரால்? தயாநிதி தயாநிதி தயாநிதி

சோலை .

முந்தைய கலைஞர் ஆட்சி செய்யாத சாதனைகள் எதுவும் இல்லை. வேறு மாநிலங்கள் இந்தச் சாதனைகளின் விளிம்பைக்கூட எட்டிப் பிடித்ததில்லை. மக்கள் நலத் திட்டங்கள் ஏழைகளின் வீடுகளில் நந்தா விளக்குகளை ஏற்றி வைத்தன. மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி பூத்தது. ஆனாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெறவில்லை. என்ன காரணம்?

சத்தீஸ்கர் மாநிலம் ஆதி வாசிகள் கணிசமாகவுள்ள பிர தேசம். அங்கேயும் முன்னர் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிகாலையிலேயே ஆதிவாசி மக்களும் சாமானிய மக்களும் வாக்குச்சாவடிகளை மொய்த்துக்கொண்டனர். வேறு எந்தத் தேர்தலிலும் இவ்வளவு கரைபுரண்ட உற்சாகத்தைக் கண்டதில்லை.

"நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்?'

""சாவல் மகராஜிற்கு'' -அவர்கள் நன்றிப் பெருக்கோடு சொன்னார்கள்.

சாவல் என்ற இந்திச் சொல்லிற்கு தமிழில் அரிசி என்று பொருள். ஆமாம்... "அரிசியை எங்கள் கண்களில் காண்பித்து மடியை நிரப்பிய மகராசனுக்கு வாக்களித்தோம்' என்றனர்.

ஆமாம். கலைஞரின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில பி.ஜே.பி. அரசு செயல்படுத்தியது. அங்கே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று விநியோகிக்கப் படுகிறது.
தீபாவளிக்கு மட்டும் அரிசிச் சோற்றைப் பார்த்த பாமர மக்களின் பானைகள் நிரம்பி வழிகின்றன. கலைஞர் செயல்படுத்திய திட்டங்களில் ஒரே ஒரு திட்டத்தைத்தான் சத்தீஸ்கர் அரசு செயல் படுத்தியது. மீண்டும் ஆட்சி பீடம் ஏறிவிட்டது. எத்தனை எத்தனையோ திட்டங்களைச் செயல் படுத்திய கழக அரசு ஏன் மீண்டும் தமிழகத்தில் அரியணை ஏற முடியவில்லை?

இதற்கான விடை கிடைத்திருக்கிறது. கசப்பான காரணங்கள்தான். ஆனால் கோபம் கொள்ளாது ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்கவேண்டும்.

அரசியல் பணிகளில் கலைஞர் குடும்பம் செலுத்திய ஆதிக்கம்தான் தோல்விக்குப் பிரதான காரணம். பெரிய காரணம் என்று லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்புக் கூறுகிறது. ஆமாம். குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டு மக்களின் அடிமனதின் ஆழத்தில் பதிந்துவிட்டது. எனவே மக்கள் சாதனைகளை புறந் தள்ளி மாற்றம் வேண்டும் என்று வாக்களித்துவிட்டனர்.

வெண்டைக்காய் வாங்கினால் நுனியை ஒடித்துப் பார்த்து வாங்குகின்ற தாய்மார்கள் கழக அரசை நியாயத் தராசில் நிறுத்துப் பார்த்தனர். இன்றைக்கு ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் அவர்கள் மனநிறைவு கொள்ள வில்லை. ஆனால் அன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்றபோது மாறுதல் வேண்டும் என்று இறுதியாக முடிவு செய்தனர். அப்படி மாறுதல் வேண்டி வாக்களித்தவர்கள் 44 சதவிகிதத்தினர் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புக் கூறுகிறது.

ஆனால் குடும்ப ஆட்சி என்று 49.7 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தனர். அன்றைக்கு தி.மு.க.விற்கு மாற்றாக அவர்களுக்குத் தெரிந்தது அ.தி.மு.க. அணிதான். எனவே ஏறத்தாழ 50 சதவிகித வாக்காளர்கள் அந்த அணிக்கு வாக்களித்தனர் என்று அந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கள்ளத் தராசில் எடை போடாத கருத்துக் கணிப்புகள் உண்மையானவை. ஆனால் கசப்பானவை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளமைக் காலத்திலேயே முரசொலி மாறன் கழக அரசியலில் கால் ஊன்றினார். படிப்படியாக வளர்ந்தார். ஒவ்வொரு விதையிலும் ஒரு விருட்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். காலம் கனியும்போது விதை பிளந்து விருட்சம் தளிராகக் காட்சி தரும். பின்னர் அதுவே ஆல விருட்சமாகும். அப்படி அரசியலில் வளர்ந்தவர்தான் முரசொலி மாறன்.

அவருடைய உழைப்பை அண்ணாவே அங்கீகரித் தார். 1967-ம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணா மகத்தான வெற்றி பெற்றார். ஆனாலும் தமிழகம் அன்றைக்கு அவரை டெல்லிக்கு அனுப்புவதாக இல்லை. ஆம். அந்த அறிஞர் பெருமகன் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கியது. கழக வேட்பாளர் முரசொலி மாறன் என்று அண்ணாவே அறிவித்தார். அவருடைய தேர்வு மெத்தச் சரி என்பதனை சொல்லால், செயலால் முரசொலி மாறன் மெய்ப்பித்தார்.

அப்போது குடும்ப அரசியல் என்று எவரும் சொல்லவில்லை. முரசொலி மாறனின் ஏற்றத்தை எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவரால் கழகம் ஏற்றம் பெற்றதையும் கண்டனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தின் நாயகனாகத் திகழ்ந்த அவர் அவசர நிலை காலத்தில் கொடுஞ் சிறைவாசமும் ஏற்றார். அதனாலேயே அவருடைய உடல் நலமும் பாதித்தது.

அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்த லில் அவருடைய புதல்வர் தயாநிதி மாறன் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உரத்த குரலில் கண்டனத்தைத் தெரிவிக்க வில்லை யென்றாலும் உள்ளத்தால் கழகத் தொண்டர்கள் கவலை கொண்டனர்.

ஏனெனில் கழக அரசியலில் தயாநிதி மாறன் அரிச்சுவடி கூட படிக்காதவர். அவர் தொட்டியில் வளர்க்கப்பட்ட குரோட்டன் செடி.

நாடாளுமன்றத் தேர்தலில் கழகச் செல் வாக்கால் தொண்டர்களின் கடும் உழைப்பால் வெற்றி பெற்றார். மையத்தில் அமைச்சரானார். நாடாளுமன்ற உறுப்பினராக சிலகாலம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர் துணை அமைச்சராகவோ, இணை அமைச்சராகவோ பணி செய்து, கேபினட் உயரத்தை எட்டிப் பிடித்திருக்க வேண்டும்.

ஏணிப்படிகளில் ஏறாது உயரத்தில் தூக்கி உட்கார வைக்கப்பட்டவர்கள் இறக்கை முளைக்காமலே பறக்கத்தான் துடிப்பர். தயாநிதி மாறனை டெல்லிக்கு அனுப்பியது கழகத்திற்கு லாபமா, நட்டமா என்பதனை ஓய்வு நேரத்தில் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.

ஒருகட்டத்தில் அவர் அமைச்சர் பதவி யைத் துறக்க நேரிட்டது. சமரசம் ஏற்பட்டது. எனவே மீண்டும் அவர் மத்திய அமைச்ச ரானார். இந்த நிகழ்வு குடும்ப ஆட்சி என்ற வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருந்தது.

ஆனால் தொலைத்தொடர்புத்துறை இன்றுவரை தி.மு.கழகத்திற்கு தொல்லை தரும் அரங்கமானதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் யார் என்பது கழகத் தொண்டர்களுக்குத் தெரிகிறது. வெளியே சொல்ல முடியாதபடி வேதனைப்படுகிறார்கள்.

முரசொலி மாறனைப்போல் தி.மு. கழகத்தில் இயல்பாய், உழைப்பால், தியாகத்தால் வளர்ந்த இன்னொரு வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். கழகத்தின் அடிமட்டத் தொண்டனாக அறிமுகமாகி கிளைக்கழக செயலாளராகி, ஒன்றிய அளவில் வளர்ந்து கழகம் அமைத்த அத்தனை களங்களிலும் முன்னணியில் நின்று சிறை சென்றவர். மணம் முடித்த குறுகிய காலத்திலேயே எமெர்ஜென்ஸி அவருக்குப் பெரிய பரீட்சை வைத்தது. ஆமாம்! சிறைக்கொடுமைகள்தான் அவருக்கு வைக்கப்பட்ட தேர்வுகள். அத்தனை யிலும் "பாஸ்' ஆகி பழுத்த அரசியல்வாதி யாக உயர்ந்தார்.

இன்றுவரை அவர் கறைபடியாதவர்; களங் கப்படாதவர். எனவே கழகத் தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமே அவரை எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஏற்றுக்கொண்டிருக் கிறது.

அவரை எவருமே ஒரு குடும்ப அரசிய லின் வாரிசு என்று கருதுவதில்லை. அவர் இயற்கையாய் நந்த வனத்தில் வளரும் சந்தன மரம். தன்னைத் தேய்த்து மணம் தரும் தேவவிருட்சம்.

ஆனால் காலமெல்லாம் காத்திருந்ததுபோல திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அழகிரி தென்மண்டல அமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் என்னவோ தமக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வேண்டும் என்றுதான் கொடி பிடித்துக் கொண்டிருந்தார்.

திருமங்கலம் வெற்றி என்பது ஊர்கூடி தேர் இழுத்து நிலையில் நிறுத்தியதாகும். ஆனால் அதனைத் தொடர்ந்து தென்மண்டலத்திற்கு ஒரு அதிபதி என்று அறிவிக்கப்பட்டதை கழகத்தினரும் விரும்பவில்லை. மக்களும் ஏற்கவில்லை. இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தென் மண்டலம் மருண்டுபோனது. அந்த அதிர்ச்சியிலிருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்தான் மீண்டது. அழகிரியின் நியமனம், குடும்ப ஆதிக்கம், குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டிற்கு இன்னொரு அழுத்தம் கொடுத்தது.

"தினகரன்' அலுவலகம் தாக்கப்பட்டபோது ஒரு தயாநிதி  மாறன் உள்துறை செயலாளர் மாலதி அம்மையாரை தொலைபேசியில் அழைத்தார். குறிப்பிட்ட சிலரை கைது செய்யவேண்டும். இல்லையேல் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்று மிரட்டினார். அவருடைய கட்சி விசுவாசத்திற்கு இது ஒரு சான்று.
2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தி.மு.கழகத்தைத் தாக்கப்போகும் புயல், மதுரையில் மையம் கொண்டிருக்கிறது என்று முன்னரே குறிப்பிட்டோம். ஆம்... கழகத்தின் அதிகார பூர்வமான வேட்பாளர்களை எதிர்த்து 20 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

நீதிக்கட்சியின் பாரம்பரியமும், நெடிய குடும்ப பாரம்பரியமும் கொண்ட பழனி வேல்ராசனே தோற்கடிக்கப்பட்டார். கழகத்திலிருந்து நீக்கப்பட்ட அழகிரி மீண்டும் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் மதுரையில் நடந்த சம்பவங்கள் கழகத்தின் செல்வாக்கைச் சிதைக்கவே செய்தன.

அ.தி.மு.க.வை மன்னார்குடி குடும் பத்தினர் ஆட்டுவிக்கிறார்கள் என்ற பலத்த குற்றச்சாட்டு எழுந்தது. அதன் விளைவுகளை தலைமை உணர்ந்தது. இன்றைக்கு அதன் தலைமைக் கழகத்தில் கூடு கட்டியிருந்த மன்னார்குடி பறவைகள் பறந்துவிட்டன. அவர்கள் இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. கவனிக்க வேண்டிய சேதி.

சகோதரி கனிமொழி கூட நல்ல தளத்தைத்தான் தேர்ந்தெடுத்தார். சங்கமம் என்று அவர் அழிந்து வரும் கிராமியக் கலைகளுக்கு புத்துயிர் ஊட்டினார். மாவட்டம்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி பல்லாயிரம் பேருக்கு வேலைகள் தேடித்தந்தார். அத்தகைய சமூகப் பணிகளில் நாட்டம் கொண்டிருந்த அவரை டெல்லிக்கு அனுப்பியிருக்கக் கூடாது என்பது எமது கருத்து. ஏனெனில் குடும்ப அரசியல் ஆதிக்கத்தில் அவரும் ஓர் அங்கம் என்ற நிலை உருவாகிவிட்டது.

எனவே இன்றைக்கு தி.மு.கழகத் தேருக்கு ஒரு சாரதி ஒரே ஒரு சாரதிதான் தேவை. பல சாரதி என்றால் தேருக்கு ஆபத்துதான். வழிகாட்ட கலைஞர் இருக்கிறார். அந்த ஒரே சாரதி யார் என்பதனை ஏற்கனவே மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அவருக்கு முழுமையான அதிகாரம் தேவை என்பதுதான் இன்றைய கோரிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக