செவ்வாய், 26 ஜூலை, 2011

கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற மூன்று கலைப்புயல்கள் தமிழ்நாட்டிலும் திமுகவிலும்

குளித்தலை அழைக்கிறது!


  1956ல் உண்மையான புயல் ஒன்று தமிழ்நாட்டைத் தாக்கியது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியது திமுக. சிவாஜிக்குக் கூடுதல் ஆர்வம். சாலையில் துண்டை விரித்து பராசக்தி வசனங்களைப் பேசினார். தியேட்டரில் வசூலைக் கொடுத்த கருணாநிதியின் வசனங்கள் இங்கும் பலன் கொடுத்தன. திரட்டப்பட்ட நிதியை அரசிடம் சேர்த்தபிறகு நிதி திரட்டிய நட்சத்திரங்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினார் அண்ணா.
அதிக நிதி திரட்டியவர் என்ற முறையில் தனக்குப் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சிவாஜி. ஆனால் அந்தப் பாராட்டு எம்.ஜி.ஆருக்குச் சென்றுவிட்டது. போதாக்குறைக்கு அந்த விழாவில் கலந்துகொள்ள சிவாஜி அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரை முன்னிறுத்த விரும்பியவர்கள் செய்த வேலைதான் இது என்பதை சிவாஜி உணர்ந்தபோதும் அதைக் கருணாநிதி தடுக்கவில்லை என்பது சிவாஜியை வருத்தியது.
அதிருப்தியில் இருந்த சிவாஜியைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றார் இயக்குனர் பீம்சிங். மீண்டும் சென்னை திரும்பிய அவரை திருப்பதி கணேசனுக்கு கோவிந்தா என்ற சுவரொட்டிகள் வரவேற்றன. அதிருப்தி ஆத்திரமாக மாறியது. திமுகவில் இருந்து தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சிவாஜி. வெள்ளித் திரைக்கு அறிமுகமாவதற்கு முன்பே திமுகவுடன் நெருக்கமாக இருந்த சிவாஜி, தேர்தல் அரசியலுக்குள் திமுக நுழைவதற்கு முன்பு விலகியிருந்தார்.
நட்சத்திரங்கள் நிறைந்த இயக்கமாக திமுக இருந்ததால் சிவாஜியின் விலகல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் தொண்டர்களுக்கு வேறொரு குறை இருந்தது. தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது அவர்களுக்குள் சோர்வை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தணிக்கும் வகையில் 17 மே 1956 அன்று திருச்சியில் திமுக மாநாடு கூடியது. அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
மாநாட்டின் இறுதிநாள் அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அண்ணா. எதிர்வரும் பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடுவதா, வேண்டாமா என்ற முடிவை மாநாட்டுக்கு வந்துள்ள தொண்டர்களே தீர்மானிக்கட்டும். தொண்டர்கள் மத்தியில் உற்சாக அலை. கனவு நிறைவேறப்போகிறது என்ற மகிழ்ச்சி.
20 மே 1956 அன்று வாக்கெடுப்பு தொடங்கியது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவோர் சிவப்பு நிறப்பெட்டியில் வாக்களிக்கவேண்டும்; விரும்பாதோர் கறுப்பு நிறப் பெட்டியில் வாக்களிக்கவேண்டும். மாலை நான்கு மணிக்கு வாக்கெடுப்பு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிடுவதை
ஆதரித்து 56942 வாக்குகளும், எதிர்த்து 4203 வாக்குகளும் விழுந்தன. தேர்தல் களத்தில் திமுக இறங்கியது.
நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் கருணாநிதி. அதை அண்ணாவிடம் சொல்லிவிட்டு நாகை சென்று தொகுதி நிலவரங்களைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பினார் கருணாநிதி. அப்போது நம் நாடு பத்திரிகை அச்சாகித் தயாராக இருந்த்து. அதை எடுத்துப் பார்த்த கருணாநிதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திமுக வேட்பாளர் பட்டியல் அதில் அச்சாகியிருந்தது. குளித்தலை தொகுதி வேட்பாளராக கருணாநிதி அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஏழு வயதுகூட ஆகாத குழந்தை திமுக. அதிலும், குளித்தலை போன்ற இடங்களில் திமுக அவ்வளவாக அறிமுகம் ஆகாத சூழல். கிளைக்கழகங்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். திமுகவின் கறுப்பு சிவப்பு கொடி அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்ட தொகுதி. இருப்பினும் களத்துக்குத் தயாராகிவிட்டார் கருணாநிதி.
பயணம் செய்ய ஃபியட் கார், பிரசாரம் செய்ய வேன், அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சகிதம் குளித்தலையில் வந்திறங்கினார் கருணாநிதி. ஒத்தாசைக்கு பராங்குசம், தென்னன், ஆனந்தம், இளமுருகு, பொற்செல்வி உள்ளிட்ட சில நண்பர்கள் வந்திருந்தனர். பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் கருணாநிதி. ஆனால் கூட்ட்த்துக்கு எவரும் வரவில்லை. காரணம், குளித்தலை மக்களுக்கு கருணாநிதியையும் தெரியவில்லை; திமுகவையும் தெரியவில்லை.
என்ன செய்வது? மக்களை அழைப்பதைக் காட்டிலும் நேரில் சென்று சந்தித்துப் பேசுவது சரியாக இருக்கும் என்று நினைத்தார். வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். அந்த மக்களுக்குத் தெரிந்த தொழில், விவசாயம். அதில்தான் அநேக பிரச்னைகளும் இருந்தன. பிடித்துக்கொள்ள கொம்பு கிடைத்துவிட்டது கருணாநிதிக்கு.
விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தார். அவர்களை பிரச்னைகளைக் கவனமாகக் கேட்டார். சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டல் விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்தார். மக்கள் மத்தியில் நம்பிக்கை லேசாகத் துளிர்விட்டது. வீட்டு வாசல்களில் கோலத்துக்குப் பதிலாக உதயசூரியன் சின்னம் வரைந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர் வாக்காளர்கள்.
திமுகவின் பிரசார பீரங்கிகளான நட்சத்திரங்கள் வராமல் இருப்பார்களா? அதுவும் கருணாநிதியின் குளித்தலைக்கு. வந்தனர். முக்கியமாக, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் இருவரும். திமுகவின் பிரசார பீரங்கிகளுள் கருணாநிதியும் ஒருவர் என்பதால் திமுகவின் மற்ற வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்யவேண்டியிருந்தது. முக்கியமாக, அண்ணாவுக்காக காஞ்சிபுரம், எஸ்.எஸ்.ஆருக்காக தேனி, நெடுஞ்செழியனுக்காக சேலம், அன்பழகனுக்காக எழும்பூர், சத்தியவாணி முத்துவுக்காக பெரம்பூர், ஆசைத்தம்பிக்காக ஆயிரம் விளக்கு, கண்ணதாசனுக்காக திருக்கோஷ்டியூர் என்று பல தொகுதிகளுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் ஒருசேரக் கொடுத்த முடிவுகள் அவை. போட்டியிட்ட 204 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 151 இடங்கள் கிடைத்தன. திமுக சார்பாகப் போட்டியிட்ட 112 வேட்பாளர்களில் பதினைந்து பேர் வெற்றிபெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக