வியாழன், 28 ஜூலை, 2011

புலி வேட்டைக்கு போன கோட்டா மஹாராஜா கார் ஏலம்




ஜெய்ப்பூர்: ஒரு சமயத்தில் இந்தியாவில் இருந்த மஹாராஜாக்கள் மத்தியில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பிரசித்தம். தங்களது ஆடம்பரத்தை பரைசாற்ற ரோல்ஸ்ராய்ஸ் கார்களை அவர்கள் பிரிட்டனில் இறக்குமதி செய்தனர்.

தவிர, தாங்கள் விரும்பும் வகையில் அந்த கார்களை சிறப்பு வசதிகள் கொண்டதாக வடிவமைத்துக்கொடுக்க சொல்லி ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கினர்.

இதுபோன்று, ராஜஸ்தானில், கோட்டாவை ஆண்டு வந்த மஹாராஜாவான சாஹிப் பகதூர் சிங்கும், சிவப்பு நிறம் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் பாண்டம் காரை கடந்த 1925ம் ஆண்டு வாங்கினார்.

திறந்து மூடும் வசதி கொண்ட காரில், வேட்டையாடுவதற்கு வசதியாக விஷேச டார்ச் லைட்டுகள், இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகியவை பொருத்தப்பட்டு இந்த கார் கோட்டா மஹாராஜவுக்காக பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

கரடு முரடான காட்டுப்பாதையில் செல்வதற்காக பெரிய சக்கரங்கள், கூடுதல் தடிமன் கொண்ட டயர்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த கார் வந்தது. இந்த காரை மஹாராஜா வேட்டையாட செல்வதற்கு மட்டுமே பயன்படுத்துவாராம்.

குறிப்பாக, புலி வேட்டைக்கு மஹாராஜா இந்த காரை அதிகம் பயன்படுத்துவாராம். இதனால், இந்த காருக்கு "டைகர் கார்" என்றே மஹாராஜா பெயரிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த கார் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. கடந்த 1970ம் ஆண்டு மஹாராஜாவிடமிருந்து பிரிட்டனை சேர்ந்தவர் இந்த காரை வாங்கி சென்றுள்ளார்.

இதன்பின், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்த காரை வாங்கி இருந்தார். அவர் தற்போது இந்த காரை ஏலத்தில் விட அவர் முடிவு செய்துள்ளார். லண்டனை சேர்ந்த பிரபல போன்ஹாம்ஸ் ஏல நிறுவனம் மூலம் இந்த கார் ஏலம் விடப்பட இருக்கிறது.

அடுத்த மாதம் 17ந் தேதி இந்த கார் லண்டனில் ஏலம் விடப்படும் என்று போன்ஹாம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் ரூ.33 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பதற்காக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக