திங்கள், 25 ஜூலை, 2011

அரசியல் தீர்வுக்கு முதலே புலிகள் நிர்மூலமாக்கப் படுவதை சோனியா காந்தி விரும்பினார்.

-  சாம் ராஜப்பா
ஆலோசனைகளுக்காக தற்சமயம் கொழும்பில் உள்ள இந்தியாவுக்கான ஸ்ரீலங்காத் தூதுவர் பிரசாத் காரியவாசம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை ஸ்ரீலங்காவுக்கு வருகை தருமாறு விடுத்துள்ள தனிப்பட்ட அழைப்பை விரிவு படுத்துவதற்காக, சென்னையில் அவருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதற்காக முயன்று வருகிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் செயற்பட்டியலுக்கு ஏற்ப சேவை புரிவதற்கு அவரது செல்லப்பிள்ளையான ராஜபக்ஸ மேற்கொள்ளும் முயற்சியே இது, பெரும்பான்மையான சிங்களவர்களைப்போல சம உரிமைக்காகப் போராடும் ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கு இந்தியா துரோகமிழைத்து விட்டது.

வெளியுறவுச் செயலர்களின் பிரதேசமான புது தில்லியின் சவுத் பிளக் வெறும் பார்வையாளர்களைப்போல செயலற்றிருக்கிறது. அதன் முன்முயற்சியை சென்னை கைப்பற்றியுள்ளது போலத் தெரிகிறது. அதனால் ராஜபக்ஸ கவலையடைந்திருக்கிறார். தமிழ்நாட்டு சட்டசபையில் 1974ல் இந்திரா காந்தியினால் சட்டவிரோதமாக ஸ்ரீலங்காவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய கச்சதீவை திரும்பப் பெறவேண்டும் என்றும், ராஜபக்ஸவுக்கு எதிரான யுத்தக்குற்றங்களை ஐநா விசாரணை செய்வதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டபோது, அந்த முழு விடயங்களையும் வெளிவிவகார நியமப் பாதையியில் நிற்கத தகுதியற்ற ஒரு முதலமைச்சரின் வெறும் கூப்பாடு, என அப்போது கொழும்பு அதை நிராகரித்திருந்தது.

சனல் - 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய “ஸ்ரீலங்காவின் கொலைக்களம்” எனும் ஆவணப்படம் கடந்தவாரம் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக ஒளிபரப்பானது. 

அந்தக் காட்சிகளின் உண்மைத்தன்மை தடயவியல் நோயியல் நிபுணர்களாலும், காணொளித் தடயவியல் பகுப்பாய்வாளர்களாலும், சுடுகலன் சான்று நிபுணர்களாலும் மற்றும் ஒரு சர்வதேசப் புகழ்வாய்ந்த காணொளித் தடயவியல் நிபுணராலும் நிரூபிக்கப் பட்டிருந்தன. சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகள் தொடர்பான சிரேட்ட நிறைவேற்று அதிகாரி டொரத்தி பேனர்; “ அது மிகவும் கொடூரமானது அந்தக் காட்சிகள் உங்கள் நினைவுகளில் பல வருடங்கள் அழியாது நிலைத்திருக்கும்” என்று பார்வையாளர்களை எச்சரிக்கை செய்து அதனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படியும் கேட்டிருந்தார். அடுத்த சில நாட்களில் 53 நிமிடங்கள் திரையில் ஓடும் அந்தக்காட்சிகள் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஜெயாதொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்வதற்காக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. 

சனல் - 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் மிருகத்தனமான கொடூரங்களை வெளிக் கொண்டுவருவதற்கு புதுதில்லி எப்படி ஒரு ஆயுதமாக மாறியது என்வதைப்பற்றிச் சொல்லப்படாத ஒரு கதையும் உண்டு.

2005 ஜனாதிபதித் தேர்தலின்போது அப்போது ஸ்ரீலங்காவில் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்காதான் வெற்றியடைவார் என இந்தியா நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் எஸ்.எல்.எப்.பியின் அறியப்பட்ட ராஜபக்ஸ மிகக் குறுகிய பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாகத் தெரிவானார். தேர்தலைப் புறக்கணிக்கும்படி எல்.ரீ.ரீ.ஈயினர் வேண்டிக் கொண்டதற்கு தமிழ் மக்கள் பதிலளித்திருக்காமல் போயிருந்தால் விக்கிரமசிங்க வெகு சுலபமாக வெற்றி பெற்றிருப்பார். ராஜபக்ஸ தனது பருந்துக் குணத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க எண்ணி இந்திய அரசியல் தலைமைகளுடன் ஒத்துணர்வை நிறுவினார். ஆனால் புது தில்லியோ மீண்டும் மீண்டும் அவரைத் தகர்க்கவே முயன்றது.

தனது நாட்டில் நிலவும் கட்டுப்படுத்த முடியாத இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள குடியியல் அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தை இது அவருக்கு உணர்த்தியது. அவரது தூதுவர்கள் இரு நாட்டுக்கும் பாலம்போல செயற்படக் கூடியவர்களைத் தமிழ்நாட்டில் வலைவீசித் தேடத் தொடங்கினார்கள்.
கொழும்பினால் மேற்கொள்ளப்பட்ட தீவிர இணக்கப்பாடுகளுக்குப் பின்னர், முன்னாள் இந்திய நிர்வாகசேவை உத்தியோகத்தரும், ஜெயப்பிரகாஸ் நாராயணனின் நெருங்கிய சகாவும்  மற்றும் சபையின் உறுப்பினர் என்கிற வகையில் அன்னை தெரேசாவுடன் நெருக்கமும் உடைய எம்.ஜி. தேவசகாயம், தமிழ்நாட்டின் உட்துறைச் செயலர் மற்றும் இந்திய அரசாங்கச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்து ஓய்வு பெற்ற  முன்னாள் இந்திய நிர்வாகசேவை உத்தியோகத்தரான எஸ்.பி. அம்புறோஸ், ஒரு தேசிய தினசரியின் மூத்த பத்திரிகையாளர், மற்றும் ஸ்ரீலங்கா விவகாரங்களில் நல்ல அனுபவம் மிக்க ஒரு இராணுவ அனுபவஸ்தர் ஆகிய நான்கு பேரைக் கொண்ட சிறிய குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் முதலாவது கூட்டம் சென்னையில் 10 மே,2007ல் ஜனாதிபதி ராஜபக்ஸவின் ஆலோசகரான சுனில் பெர்னாண்டோவின் பங்குபற்றலோடு நடந்தேறியது.
தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்க்கக்கூடியதான அரசியல் மூலோபாயங்களுடன் கூடிய இனப்பிரச்சினைக்கு நீண்டு நிலைத்திருக்கும் தீர்வினை ஒருபக்க இராணுவ வெற்றிமூலம் பெறமுடியாது என அந்தக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் குழுவானது, 17 ஜூலை 2007ல் ஜனாதிபதி ராஜபக்ஸ மற்றும் அவரது செயலாளர் லலித் வீரதுங்க, உதவிச் செயலர் வருண ஸ்ரீ தனபால மற்றும் ஆலோசகர் பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட குழுவுடன் கொழும்பில் தனது முதலாவது சந்திப்பை நடத்தியது. இரண்டு மணித்தியாலங்களாக நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி ராஜபக்ஸ தனது ஆட்சிக்கு ஏற்படும் சர்வதேச கண்டனங்களைக் குறித்து தான் தேலையில்லாமல் கவலைப்படப் போவதில்லை என்றும் ஆனால் இந்தியாவின் கருத்தைப்பற்றித்தான் அதிகம் கவலைப்படுவதாகவும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு  ஸ்ரீலங்காவுக்கு உள்ளேயே எழவேண்டும் என்றும், அது சர்வதேசக் கருத்துகளால் குறிப்பாக இந்தியாவால் சுத்திகரிக்கப்பட்டதாக அமையவேண்டும் என்று இந்தக் குழுவினரின் கருத்தாக தேவசகாயம் தெரிவித்ததை ஜனாதிபதி ராஜபக்ஸ முற்றாக அங்கீகரித்தார்.
தமிழ்நாட்டுக் குழவினருடன் நடந்த இரண்டுநாள் சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ ஒரு பொது வைபவத்தில் பேசும்போது தமிழர்களின் பாரம்பரிய தாயகமான ” வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் உண்மையான குறைகளைக் களைவதில் உண்மையான உணர்வு உள்ளவர்களாகவும், முழுப் பொறுப்பு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்” என்றார்.

ஒரு நீண்ட கதையை சுருக்கமாக்குவதற்காக சிலவற்றை வெட்டிக் குறைக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டு குடியியல் அமைப்பு ஜனாதிபதி ராஜபக்ஸவின் அதிகாரிகள் குழுவுடனும் மற்றும் சில அமைச்சர்களுடனும் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், மோதலைத் தீர்ப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட முயற்சிகளையும் தொடருவதற்காகவும் ஸ்ரீலங்காவிலும் சென்னையிலும் பல தொடர் சந்திப்புகளை நிகழ்த்தியது. இந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து 25 மார்ச் 2008ல் கொழும்பில் ஜனாதிபதி ராஜபக்ஸ மற்றும் அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் டியு குணசேகரா, அரசகரும மொழி ஆணைக்குழுத் தலைவர் ராஜா கொள்ளுரே, மற்றும் பலர் அடங்கிய குழவினருடன் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் சம்பந்தமான முக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. நடவடிக்கைகளுக்கான செயற்பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு அமைப்புகளின் செயற்பாட்டால் கொழும்பிலிலுள்ள இந்தியத் தூதுவர் ஆத்திரமடைந்தார். மற்றும் உதவி உயர் ஸ்தானிகர் ஏ.மாணிக்கம் தேவசகாயத்துடனான ஒரு சந்திப்புக்கான நேரத்தைக் கோரியிருந்தார். மாணிக்கத்தின் அலுவலகத்துக்கு அருகில் தேவசகாயம் தங்கியிருந்த விடுதியில் பி.ப. 5 மணிக்கு அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணிக்கம் அந்தச் சந்திப்பிற்கு சமூகமளிக்கவேயில்லை ஆனால் பிற்பாடு இந்தியத் தூதுவர் ‘அங்கீகாரமற்ற நபர்களுடன்’ சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்ததுக்காக ஜனாதிபதி ராஜபக்ஸ குழுவினரைக் கடிந்துரைத்திருந்தார். தமிழ்நாட்டு குடியியல் அமைப்புகளின் முயற்சிகளைப்பற்றி தமிழ்நாட்டில் இருந்து லோகசபைக்கு தெரிவான ஒரு காங்கிரஸ் உறுப்பினர் மூலம் சோனியா காந்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த உறுப்பினர் இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தனது எண்ணமான பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு விற்பனை செய்ய எண்ணியிருந்தார்.

புது தில்லியில் இத்தகைய அபிவிருத்திகள் ஏற்படுவதை அறியாத தேவசகாயம் தனது முன்னாள் சகாக்களில் ஒருவரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் கொள்கைச் செயலர் பதவியை வகித்து வருபவருமான  ரி.பி நாயர் அவர்களுக்கு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் வருடாந்த அறிக்கையில் “ இராணுவ நடவடிக்கை தேவையில்லை என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தேவைப்படுவதெல்லாம் ஐக்கிய ஸ்ரீலங்காவின் கட்டமைப்புக்குள் அரசியல், அரசியலமைப்பு, மற்றும் சகல இனங்களினதும் விசேடமாக சிறுபான்மையினத்தின் குறைகளை அக்கறைப் படுத்தியதான ஒரு தீர்வே” எனக் குறிப்பிட்டிருந்ததைப்பற்றி 1 ஏப்ரல் 2008ல் ஒரு கடிதம் எழுதினார்.
தேவசகாயம் தமிழ்நாட்டுக் குழுவினரால் மேற்கொண்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றியும், அமைக்கப்பட்டிருந்த செயல்திட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில் ஸ்ரீலங்காவுக்கு ஆயுத வகைகளையும் மற்றும் இராணுவ பயிற்சி உதவிகளையும் வழங்கிக் கொண்டு சமாதான பேரத்துக்கான தீர்வுகள் எதனையும் ஏற்படுத்தும் முயற்சிகளைச் செய்யாது தனியாக விலகியிருப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் மீது வருத்தம் தெரிவிக்கப் பட்டிருந்தது. தமிழ்நாட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி நீண்டகாலமாக வதைத்துக் கொண்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடியை தீர்த்து வைக்கும்படி அரசாங்கத்துக்கு அந்தக் கடிதத்தில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. இன்றுவரை பதிலளிக்கப் படாமலேய அந்தக்கடிதம் தேங்கிக் கிடக்கிறது.

இந்தக் குழுவினரின் வெற்றிகரமான ஆரம்ப முயற்சிகளுக்குப் பின்னர்தான் இந்தியா தனது பாதையை மாற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு மேற்கொள்வதை வலியுறுத்தாமல் புலிகளை நிர்மூலமாக்குவதற்கு எந்த வழியை வேண்டுமானாலும் கடைப்பிடிக்கும்படி பச்சைக்கொடி காட்டியது. கொழும்பு வழங்கிய ஆதாரங்களின்படி, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனையும்,மற்றும் அதன் புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானையும் அழித்து தனது இலட்சியத்தை அடைவதற்காக சோனியா காந்தி ஸ்ரீலங்காவுக்கு சகல இராணுவ உதவி ஒத்தாசைகளையும் வழங்குவதாக உறுதியளித்தாராம்.
பிரதமரின் அலுவலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கூட்டமாகிய அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்கே.நாராயணனும், வெளியுறவு அமைச்சர் சிவ்சங்கர் மேனனும், தேசிய நலனைக் காட்டிலும் சோனியா காந்தியின் நலன்களுக்கு முன்னுரிமை தவி செய்தார்கள். அந்த ஆவணப்படத்தில் தாங்கள் பார்த்ததை எண்ணி இந்திய அரசாங்கம் பதில் பேச முடியாதவாறு ஆழ்ந்த மௌனம் அனுட்டிப்பதே இந்த உண்மைக்குத் தக்க சான்றாகும்.

- தமிழில் எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக