ஞாயிறு, 10 ஜூலை, 2011

"விஜய் நடித்த படம் ஓடவில்லை என்றால் பணத்தை திருப்பித் தாருங்கள்’ என விஜய்யிடம் கேட்க முடியுமா?

இது பொய் வழக்கு-போலீஸ் அதிகாரிகள் மிரட்டு கிறார்கள்- சக்ஸேனா

சினிமா விநியோகஸ்தர் சேலம் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் சன் டி.வி. மற்றும் சன் ஃபிக்ஸர்ஸின் நிர்வாகி சக்ஸேனா கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டதையும், அவர்மீது மேலும் சில எஃப்.ஐ.ஆர்.களை பதிவு செய்து போலீஸார் முயற்சிப்பதையும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.

5-ந் தேதி சைதை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சக்ஸேனாவை போலீஸ் கஸ்டடி யில் எடுக்க அனுமதி கேட்டார் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை. போலீஸ் கஸ்டடிக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் ஜாமீன் கோரியும் சக்ஸேனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

"விமான நிலையத்தில் காரணமே சொல்லாமல் என்னை கைது செய்த போலீஸார், சென்னை நகர் முழுக்க காரில் வைத்து சுற்றினார் கள். விசாரணை என்ற பெயரில் நாங்கள் சொல்கிறபடி கேட்கணும் என என்னைச் சுற்றிலும் போலீஸ் அதிகாரிகள் நின்றுகொண்டு மிரட்டு கிறார்கள். செல்வராஜ் என்பவருடன் நான் நேரிடையாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை. இது பொய் வழக்கு. அதனால் போலீஸ் காவலுக்கு என்னை அனுப்பக்கூடாது'’என நீதிபதி அகிலா ஷாலினி முன் கோரிக்கை வைத்தார் சக்ஸேனா.

சக்ஸேனாவை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக்கூடாது என வாதிட்ட அவரின் வக்கீல் கே.எஸ்.தினகரன்... தனது வாதத்தின்போது... ""விஜய் நடித்த படம் ஓடவில்லை என்றால் ‘பணத்தை திருப்பித் தாருங்கள்’ என விஜய்யிடம் கேட்க முடியுமா? ரஜினி நடித்த ‘சிவாஜி’படம் கூட ஓடவில்லை. அதற்காக ரஜினியிடம் நஷ்டஈடு கேட்க முடியுமா? இது சிவில் வழக்கு. புகாரில் கூறப்பட்டுள்ள 82 லட்ச ரூபாய் பணத்தை டி.டி.யாக எடுத்து இப்போதே கோர்ட்டில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம். சக்ஸேனாவின் பாஸ்போர்ட்டையும் நீதிமன்றத்தில் சரண்டர் செய்கிறோம். நாங்கள் தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனுவின் விபரங்கள் இன்னும் அரசு வக்கீலுக்கு வந்து சேரவில்லை எனச் சொல்வது கோர்ட்டை திசை திருப்பும் முயற்சி'' என வாதிட்டார்.

ஒரு படத்தை வாங்கி விநியோகம் செய்யும் போது அதிக லாபம் கிடைத்தால் அந்த லாபத்தை எப்படி மற்றவர்களுக்கு தருவார் விநியோகஸ்தர்? அதேபோல நஷ்டம் ஏற்பட்டாலும் அவரேதான் ஏற்க வேண்டும். இது இரண்டுபேர்கள் போடும் ஒப்பந்தத் தின் அடிப்படையிலான விஷயம். போலீஸ் தரப்பில் இதுவரை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வில்லை’’என குறிப்பிட்ட நீதிபதி, ‘சக்ஸேனாவை மன ரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது’என்கிற நிபந்தனையுடன் இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்தார். உயர் போலீஸ் அதிகாரிகள் டீம், அடுத்தகட்ட அதிகாரிகள் டீம்... என இரண்டு குழுக்களாக கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சக்ஸேனாவை விசாரித்தார்கள். விசாரணை விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டோம்.

""விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் சக்ஸேனா. அவர் எங்கள்ட்ட சொல்லிருக்க தகவல்கள் என்னன்னா.... ‘"1983-லயிருந்து கலாநிதிமாறனோட எனக்கு பழக்கம். பூமாலை வீடியோ மேகஸின், குங்குமம் பத்திரிகை, சன் டி.வி., எஃப்.எம். சேனல்கள்னு சன் நிறுவனத்தோட ஒவ்வொரு உருவாக்கத்திலும் என்னோட உழைப்பும், மூளையும் இருக்கு. சன் குழுமத் துக்கு முதுகெலும்பா செயல்பட்டு வர்றேன். சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தொடங்கியதும் என்னை நிர் வாகியா நியமிச்சாங்க. என்னோட ஐயப்பன், சாதிக் பாட்ஷா ஆகிய நண்பர்கள் படங்களை விலை பேசி வாங்குறதுக்கு உதவியா இருந்தாங்க. இதுவரை 19 படங்களை பேரம் பேசி வாங்கிக் கொடுத்திருக்கேன். விலை பேசி முடிப்பது மட்டும்தான் என்னோட வேலை. ஃபைனல் பண்ணி செட்டில்மெண்ட் பண்றது சன் பிக்ஸர்ஸோட ஃபைனான்ஸ் கண்ட் ரோலர்தான். எல்லாமே செக் டீலிங்தான். நான் கடுமையா உழைப்பதால் மாசம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம், கார் வசதி, வெளியூர் செல்ல விமான டிக்கெட்னு வசதி செஞ்சு குடுத்திருக்காங்க. சன் டி.வி.ன்னா சாக்ஸ்னு சினிமா வட்டாரங்களில் ஒரு வெளித்தோற்றம் ஏற்பட்டிருக்கு. ஆனா கலாநிதி மாறனோட அசைவில்லாம எதுவும் நடக்காது. எனக்கு ஒத்தாசையா இருக்க ஐயப்பனும், சாதிக் பாட்ஷாவும் தப்பு பண்ணீருக்கலாம். அவங்க செஞ்ச தப்புகளில் பிரச்சினை ஏற்பட்டு அதில் என் பெயர் அடிபடுது. செல்வராஜுக்கு செட்டில் மெண்ட் பண்ண ஏற்பாடு செஞ்சபோதும் அதை வாங்காம இழுத்தடிச்சு என்னை சிக்க வச்சிருக்கார். நான் அரெஸ்ட் ஆன பிறகு சன் நிர்வாகம் சார் பில் என்னை யாரும் வந்து பார்க்கல. என் பாது காப்புக்கு நானேதான் வக்கீல் வச்சிருக்கேன்'னு சக்ஸேனா சொல்லிருக்கார்.

புகார் கொடுத்த செல்வராஜையும், சக்ஸே னாவையும் நேரில் உட்கார வச்சும் விசாரணை நடத்தினோம்'' என்றனர் விசாரணை அதிகாரிகள்.

சக்ஸேனா மீது மேலும் புகார்களை வாங்க திட்டமிட்டு வருகிறது காவல்துறை. கடந்த வருடம் சைதாப்பேட்டையிலுள்ள செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஓட்டல் நிர்வாகமும், சக்ஸேனாவும் அப்போதே சமாதானமாகப் போய்விட்ட நிலையில், திரும்பவும் சக்ஸேனா மீது புகார் கொடுக்க போலீஸார் நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஓட்டல் நிர்வாகம் மறுத்து வருகிறது.

இந்நிலையில்... சன் பிக்ஸர்ஸின் "எந்திரன்', "சுறா'’படங்களை திரையிட்டதில் ஏற்பட்ட நஷ்டத்தை அக்ரிமெண்ட்படி திருப்பித் தர வில்லை’என சக்ஸேனா மீது புதிய புகார் கிளம்பியிருக்கிறது.

பொள்ளாச்சி ஏ.டி.ஆர்.எஸ்.சி., ராஜபாளை யம் ஆனந்த், ராமநாதபுரம் ரமேஷ், பழநி சினி வள்ளுவர், திருப்பூர் கே.எஸ். ஆகிய திரையரங் கங்களின் சார்பில் 7-ந் தேதி மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யச் சென்றனர். ஆனால் மறுநாள் வரச் சொல்லி யிருக்கிறார் கமிஷனர்’ எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர் தியேட்டர்காரர்கள்.

இரண்டு நாள் கஸ்டடிக்குப் பின் 7-ந் தேதி சைதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சக்ஸேனாவை திரும்பவும் கஸ்டடியில் எடுக்கக் கேட்டது போலீஸ். ஆனால் அதை ஏற்காத மாஜிஸ்திரேட், நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதோடு... 8-ந் தேதி ஆஜர் செய்ய உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக