ஞாயிறு, 10 ஜூலை, 2011

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3 கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான திருப்பதி ஏழுமலையான் கோயிலையும் இந்த கோயில் முந்தி விட்டது. 6வது அறையில் ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த அறையை திறந்தால் கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராஜா மார்த்தாண்ட வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு 6வது அறையை திறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பத்மநாபசாமி கோயில் குளத்திலும் ஏராளமான புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான பிரதாப் கிழக்கே மடம் கூறி இருக்கிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:
பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்ட ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9 கோட்டைகள் உள்ளன. கோயிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்குள் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோயிலுக்குள் உள்ளன.
கோயில் குளத்துக்குள் 3 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளே மீதி 3 ரகசிய அறைகளாக இருந்துள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியிலிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சால கிராமம் என்ற புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. ஏராளமான யானைகள் மீது வைத்து இந்த கற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களை நேபாளத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆகின.
இந்த கற்களை வைத்துதான் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள சால கிராம் கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே, கோயில் ரகசிய அறைகளில் ஏராளமான நகைகள் இருப்பது போல் இந்த கிணறுகளிலும் புதையல் இருக்கக் கூடும்.
இவ்வாறு பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார்.
கூட்டம் அதிகரிப்பு: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலை போல, பத்மநாப சுவாமி கோயிலில் எந்த நேரமும் கூட்டம் இருக்காது. பெரும்பாலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே காணப்படுவர். சபரிமலை சீசன், விடுமுறை காலங்களில் மட்டுமே வெளிமாநில பக்தர்கள் கூட்டம் ஓரளவு இருக்கும்.
இந்த நிலையில், ரகசிய அறைகளில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பத்மநாபசுவாமி கோயிலின் புகழ் உலகளவில் பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கோயிலில் வெளிமாநில பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக