புதன், 20 ஜூலை, 2011

கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர்க் கல்விதான் செல்லும்... ஜெயலலிதா

 ஜெயலலிதா கொண்டுவந்த சமச்சீர்க் கல்வித் திருத்தச் சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்து இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. இதைக் கேள்விப்பட்டதும் ஜெயலலிதாவின் முகம் சிவந்ததாம்!'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்.

''தேன் கூட்டில் கையைவைத்து மாட்டிக் கொண்டார் முதல்வர் என்றுதான் அதிகாரிகள் பலரும் நினைக்கிறார்கள். 'கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த சமச்சீர்க் கல்வியில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து அந்தத் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்து​வோம்’ என்று சொல்லி இருந்தால், இத்தனை சிக்கல்​கள் வந்திருக்காது என்கிறார்கள் அதிகாரிகள்.

'முதல்வருக்கு இந்த விஷயத்தில் யாரும் சரியாக அட்வைஸ் செய்யவில்லை. தேர்தல் முடிவு வருவதற்கு முன்னதாகவே, ஜெயலலிதாவைத் தனியார் பள்ளி ஒன்றின் உரிமையாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்து, சமச்சீர்க் கல்விக்கு எதிராக பல விஷயங்களைச் சொன்னார். அப்போதே, 'நான் முதல்வராக வந்தால், சமச்சீர்க் கல்வி இருக்காது’ என்று ஜெயலலிதா வாக்கு கொடுத்தாராம். அந்தத் தனியார் பள்ளி உரிமையாளர் சொன்ன விஷயங்களை, பின்னர் க்ராஸ்செக் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. இந்தத் திட்டத்தை ஆதரித்து கருத்து சொன்னால், 'கருணாநிதி ஆள்’ என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று பயந்தார்கள் அதிகாரிகள். அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்களாவது ஜெயலலிதாவைச் சந்தித்து இந்த திட்டத்தின் உண்மை நிலையைச் சொல்லி வாதாடி இருக்கலாம். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசின் திருத்தச் சட்டத்துக்காக வாதாடிய அரசு வக்கீலும், அரசின் கொள்கைகளைத் தெளிவாக விளக்கவில்லை. இத்தனையும் சேர்ந்துதான் முதல்வருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது’ என்கிறார்கள் கோட்டையில்!''

''கருணாநிதி கொண்டுவந்ததை எல்லாம் நிறுத்தி​விட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால், இப்படித்தானே ஆகும்?''

''இந்தத் தீர்ப்பு வரும்போது, முதல்வர் போயஸ் கார்டனில் இருந்தார். 11 மணிக்கு கோட்டைக்கு வந்திருக்க வேண்டும். 12 மணிக்கு, சென்னை நிருபர்கள் சங்கக் கட்டடம், 9 கலைக் கல்லூரிகளை வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாகத் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு ஜெயலலிதா ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் 12.45-க்கு சமச்சீர்க் கல்வி பற்றிய வழக்கில் தீர்ப்பு என்பது தெரிய வந்ததும், மதியம் 1.30-க்கு நிகழ்ச்சிகளை மாற்றச் சொன்னாராம் முதல்வர். அதன் பிறகு 1.25 மணிக்குத்தான் கோட்டைக்கு வந்தார். ஜெ. முடிவுக்கு முரணான தீர்ப்பு வந்ததால், அடுத்து நடந்த நிகழ்வுகளில் அதிக உற்சாகம் இல்லாதவராக ஜெயலலிதா காட்டிக்கொண்டார். அடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த சப்ஜெக்ட்தான் ஓடியதாம்.''

''அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்?''

''உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போவார்கள். இப்படியே போனால், பிள்ளைகள் எப்போது படிப்பது? எப்போது தேர்வு நடத்துவது? என்ற குழப்பங்கள்தான் மிஞ்சும். பொதுவாகவே, கல்வி விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சறுக்கல்தான். ஜூலை 15-ம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள். அன்றைய தினத்தை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சட்டமாகவே கொண்டுவந்தார். தி.மு.க. ஆட்சியில் விமரிசையாகவே கொண்டா​டினார்கள். ஆனால், கடந்த 15-ம் தேதி அப்படி எந்த ஏற்பாடும் இல்லை.

'அ.தி.மு.க-வினர் இதைக் கொண்டாட மாட்டார்கள். எனவே, தி.மு.க-வினர் கொண்டா​டுங்கள்’ என்று கருணாநிதி முந்தைய நாளே அறிக்கைவிட்டார். அவர் சொன்னது மாதிரியே ஆளும் கட்சி நடந்துகொண்டது. 15-ம் தேதி காலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் காமராஜர் சிலைக்கு செய்தித் துறை அமைச்சர் செந்தமிழன் உள்ளிட்டோர் சென்று மாலை அணிவித்தார்கள். முதல்வர் இதில் கலந்துகொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் இதைக் கொண்டாடினார்கள் என்ற தகவல் கிடைத்ததும்தான்... கல்வி வளர்ச்சி நாள் அறிவிப்பு சமாசாரமே முதல்வருக்குத் தெரிய வந்ததாம். உடனே அவசர அவசரமாக காமராஜர் ஞாபகம் வந்தது. மதியம் 2.15 மணிக்கு உச்சி வெயிலில் வந்து மாலை அணிவித்தார். 'முதல்வருக்கு முன்கூட்டியே இதுமாதிரியான தகவல்களைச் சொல்லாதது அவரது செயலாளர்களின் குறைபாடு’ என்று கோட்டை அதிகாரிகள் மத்தியில் பேச்சு உள்ளது!'' என்ற கழுகார்,

''இதைவைத்து 'முரசொலி’ அடித்த கிண்டல்​தான் சூப்பர். '2.15 மணிக்கு ஜெயலலிதாவே வந்து மலர் தூவி இருக்கிறாரே அது போதாதா? காமராஜர் கொடுத்துவைத்தவர்தான்’ என்கிறது அந்த பாக்ஸ் செய்தி!'' என்று சொல்லிவிட்டு அடுத்த சப்ஜெக்ட் தாவினார் கழுகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக