புதன், 20 ஜூலை, 2011

‘81 யாழ் நூலக எரிப்புடன் ‘உதயன்’ பத்திரிகை உரிமையாளர் சரவணபவானின் தந்தையும் தொடர்புபட்டவர்

ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் அம்பலமாகிய அதிர்ச்சிச் செய்தி ! 

நமது யாழ் நிருபர்

1981ம் ஆண்டு யாழ் பொதுசன நூல்நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் ‘உதயன’; பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் திரு சரவணபவானின் தந்தை ஈஸ்வரபாதமும் தொடர்புபட்டிருந்த செய்தி இன்று சாவகச்சேரியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண ஆகியோர் கலந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் அம்பலத்திற்குவந்து பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திரு சரவணபவான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2010 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்திருந்தார். இதன் பின்னர் தனது ‘உதயன்’ பத்திரிகை ஊடாக கட்டம் கட்டமாக சில தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட பல கூட்டமைப்பு தலைவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டத்தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களினாலேயே இச் செய்தி முதலில் கசியவிடப்பட்டிருந்தது. பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு கட்சிகளுக்கிடையில் முறுகல் நிலை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்தும், கூட்;டமைப்பிலிருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களையும், யாழ் மாநகர சபையில் எதிர்கட்சியிலிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற  ‘உதயன்’ பத்திரிகையூடாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களாலேயே இந்தச் செய்தி மேலும் பரவலாகப் பகிரங்கப் படுத்தப்பட்டிருந்தது. தற்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தச் செய்தியைப் பகிரங்கப்படுத்தி அங்கு குழுமியிருந்த பல  அரசியல்வாதிகளையும், தென்னிலங்கை ஊடகவியலாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆனால் இந்தச் செய்தி அரசியல் வட்டாரங்களில் அண்மைக்காலங்களில் பேசப்பட்டு வந்திருந்தபடியினால் இது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம்பற்றி கூட்டமைப்பு பிரமுகர்கள் ஊடாக ஏற்கனவே தெரியவந்திருந்த விபரங்களாவன,

திரு சரவணபவானின் தந்தையார் திரு ஈஸ்வரபாதம் பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியிருந்த ஒருவரெனவும், ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரெனவும், யாழ் நூலகத்தை எரியூட்டிய பொலிஸ் குழுவில் ஒருவரெனவும், எரியூட்டலுக்கு திட்டமிட்ட இரவு அவர்களுக்கு யாழ் ‘ரெஸ்ட் ஹவுஸ்’ல் மதுபான விருந்தளித்து உபசரித்தவரெனவும் அறியப்பட்டிருந்தது. தற்போது ஜனாதிபதி முன்னிலையில் இச் சம்பவத்தை மேலும் அம்பலப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திரு சரவணபவானின் தந்தை திரு ஈஸ்வரபாதம் ஒரு பொலிஸ் அதிகாரி எனவும், யாழ் பொதுசன நூல் நிலையம் 1981ல் எரியூட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும், நூல் நிலையத்தை எரியூட்டிய குழுவினரை தனது வீட்டில் வைத்தே உபசரித்திருந்தார் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தாரெனினும், நூலகத்தை எரியூட்ட திரு ஈஸ்வரபாதமும் நேரடியாகச் சென்றிருந்தாரா என்ற விடயத்தை தெரிவிக்கவில்லை.

சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள வட மாகாண உள்ஊராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தோல்வியடையலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயப்படத்தொடங்கியுள்ளபடியினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் பகிரங்கமாக இனவெறியூட்டும் பிரச்சாரங்களை  முன்னெடுத்து வரும் நிலையில், இச் செய்தி பகிரங்கமாகியது அவர்களுக்குப் பேரிடியாக அமையுமென்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. இது தவிர தற்போது இந்தச் சம்பவம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே அரசின் பிரச்சார வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை இது மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தெரிந்திருந்தும், ஏன் இந்த விடயம் பற்றி இதுவரையில் பாராமுகமாக இருந்தார்கள் எனவும், தூய தமிழ் தேசியவாதிகளின் கட்சியான தமிழரசுக் கட்சியில் போட்டியிட திரு சரவணபவனிற்கு ஏன் இடமளிக்கப்பட்டது எனவும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடமிருந்துவரும் கேள்விகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்கள் எனவும் விடயமறிந்த வட்டாரங்களில் வினாவப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக