சனி, 23 ஜூலை, 2011

கூலிப்படை மூலம் மின்சாரம் பாய்ச்சி கணவரை கொலை செய்த மனைவி

சென்னையில் கூலிப்படையை ஏவி, மின்சாரத்தைப் பாய்ச்சி கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

சென்னை வடபழனி வ.உ.சி. 1வது குறுக்குத் தெருவில் உள்ள குட்வில் கார்டன் அபார்ட்மெண்டில் வசித்தவர் பிரசன்னா (வயது 42). இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். ஐஸ்வர்யா பிளஸ்-1 படித்து வருகிறார். ஆகாஷ் 8ம் வகுப்பு படிக்கிறார்.

பிரசன்னாவும், உமா மகேஸ்வரியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், பிரசன்னாவுக்கு தொழில் சரியாக அமையவில்லை. முதலில் வடபழனியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டது. அதன்பிறகு ஜிம்நடத்தினார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து தனது சொத்துக்களையெல்லாம் விற்றார். மேலும் மது, பெண்களோடு உல்லாசம் என கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானார் பிரசன்னா. இதனால் கடந்த 10 வருடங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்தது.

இந் நிலையில் நேற்று அதிகாலை பிரசன்னா வீட்டு வாசல் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே மின்சாரம் பாய்ந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. கையும், காது பகுதியும் மின்சார வயர்களால் இணைக்கப்பட்டிருந்தன. வயரின் ஒருபகுதியில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை நடத்தியபோது, முதலில் எனது கணவர் மின்சாரம் தாக்கியதால் இறந்தார் என்று உமா மகேஸ்வரி கூறினார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கூலிப்படை மூலம் நான்தான் கணவரை கொலை செய்தேன் என்று உமா மகேஸ்வரியே வாக்குமூலம் தந்தார்.

தனது கணவர் மிகவும் காம வெறிபிடித்தவர் என்றும், இளம் பெண்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு தவறான போக்கில் போனதாகவும், சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்டதாகவும், கடைசியாக மிஞ்சியது தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுதான் என்றும், அதையும் விற்றுத் தருமாறு கொடுமைப்படுத்தியதால் கூலிப்படையை ஏவி கணவரை நானே தீர்த்துக் கட்டிவிட்டேன் என்றும் உமா மகேஸ்வரி கூறினார்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் தாம்பரத்தைச் சேர்ந்த சம்பத், கூலிப்படையைச் சேர்ந்த கோவிந்தராஜ், அப்பு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நள்ளிரவில் பிரசன்னா போதை மயக்கத்தில் அசந்து தூங்கியபோது கூலிப்படையினருக்கு உமா மகேஸ்வரி கதவை திறந்துவிட்டுள்ளார். அவர்கள் வீட்டுக்குள் புகுந்து பிரசன்னாவை முதலில் அடித்து உதைத்து, மயக்கப்படுத்திவிட்டு, அவரை வீட்டுக்கு வெளியே கொண்டு சென்று மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் தனது மகன், மகளோடு வீட்டுக்குள் உள்ள ஒரு அறைக்குள் உமா மகேஸ்வரி படுத்துக் கொண்டார்.

இந்த படுகொலை சம்பவம் வடபழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட கூலிப்படையினர் 3 பேரையும் போலீசார் பிரசன்னாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் போலீசார் முன்னிலையில், பிரசன்னாவை மின்சாரம் பாய்ச்சி கொன்றது எப்படி என்று நடித்து காட்டினர். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக