செவ்வாய், 19 ஜூலை, 2011

உலகின் மிக பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு.

:ஆந்திராவின் துமலபள்ளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனிய சுரங்கத்தில் 1.5 லட்சம் டன் வரை யுரேனியம் தாதுக்கள் இருக்கலாம் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கலாம் என அணுசக்தி துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டின் மின்சார தேவை அதிகரித்து வருவதால், அணுசக்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல  நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து, யுரேனியம் எரிபொருள் சப்ளை செய்யும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்தது. ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில்  ஏற்பட்ட அணு கசிவு விபத்துக்குப்பின் அணுசக்தி திட்டங்களை மேம்படுத்துவதில் சில நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அணு மின்சக்தியை பாதுகாப்புடன்  தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையில், இந்தியா அணுமின்சக்தி திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ரவத்பதா என்ற இடத்தில் புதிய  அணுமின் உலை அமைப்பதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் அணுசக்தி துறை செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி பேசியதாவது:
ஆந்திர மாநிலம் துமலபள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் சுரங்கத்தில் 49 ஆயிரம் டன் யுரேனியம் தாதுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம்,  அங்கு அதைவிட 3 மடங்கு அளவுக்கு அதிகமாக யுரேனியம் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் டன் யுரேனியம் தாது அங்கு இருந்தால், அது
உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கும். இந்த அளவு யுரேனியம் இருந்தால், 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள அணுமின் நிலையத்துக்கு 40  ஆண்டுகளுக்கு எரிபொருள் சப்ளை செய்ய முடியும். புதிய சுரங்கத்தில் யுரேனியம் வெட்டி எடுக்கும் பணி இன்னும் 6 மாதத்தில் தொடங்கும்.
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சுரங்கத்தையும் சேர்த்து கணக்கிட்டால் 1.7 லட்சம் டன்  யுரேனியம் தாதுக்கள் நம் நாட்டில் உள்ளது. இதன் மூலம் யுரேனியம் எரிபொருள் தேவைக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும். பிரான்ஸ் மற்றும்  கஜகஸ்தானிலிருந்து நாம் தற்போது யுரேனியம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஒப்பந்தம் நீண்ட காலத்துக்கு இல்லை.
220 மெகா வாட் திறனுள்ள அணுமின் நிலையத்துக்கு ஆண்டுக்கு 45 டன் யுரேனியமும் 700 மெகாவாட் திறனுள்ள அணுமின் நிலையமாக இருந்தால் ஆண்டுக்கு 100 டன்  யுரேனியமும் தேவை. ஆனால் நம் நாட்டில் 1.7 லட்சம் டன் அளவுக்கு யுரேனியம் தாது உள்ளது. இதை வைத்து நாம் அதிக அளவில் மின்உற்பத்தி செய்ய முடியும்.  இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக