புதன், 13 ஜூலை, 2011

தண்டனை சட்டம் 16-18 வயது பெண் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது தண்டிக்க கூடிய

மதுரை : இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375 ன்படி 16-18 வயது பெண் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது தண்டிக்க கூடிய குற்றம் ஆகாது என்பதை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்க கோரிய மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை வக்கீல் ஜெயருத்ரன் தாக்கல் செய்த பொது நல மனு: சமீபகாலமாக 16-18 வயது பெண்களை ஆண்கள், கடத்தி உடலுறவு கொண்டு, அவர்களை நடுத்தெருவில் விடுவது அதிகரித்து வருகிறது. கோர்ட்டுகளில் இத்தகைய வழக்குகள் அதிகளவில் தாக்கலாகின்றன. காதல் என்ற போர்வையில் இச்சம்பவங்கள் நிகழ்கின்றன. ஏராளமான பெண்கள், ஏற்கனவே திருமணம் ஆனவர், வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோரை நம்பி ஏமாறுகின்றனர். அத்தகைய வழக்குகளில் பெண்கள், "என் சம்மதத்துடன் உறவு கொண்டதாக' கூறினால் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. அந்த வயது பெண்களின் சம்மதம் இருந்தாலும் கூட, உறவு கொள்வது அடிப்படை உரிமையை மீறிய செயல்.

இந்திய தண்டனை சட்டம் 361, 366, 372 பிரிவுகளில் மைனர் பெண்கள் என 18 வயதுக்கு உட்பட்டவர்களை குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக 375 வது பிரிவில் 16-18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சம்மதத்துடன் உடலுறவு கொள்வாரேயானால், தண்டிக்க கூடிய குற்றம் இல்லை என கூறப்படுகிறது. அந்த வயதில் பெண்கள் வழிதவறுவது இயற்கை கோளாறு. அவர்களை பாதுகாப்பது சட்டத்தின் பொறுப்பு. 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள், திருமணம் செய்ய கூடாது என வலியுறுத்தும் போது, உடலுறவு கொள்வதை எப்படி அனுமதிப்பது? இந்த வகையில் பிறக்கும் குழந்தைகளை குப்பை தொட்டிகளில் வீசும் நிலையுள்ளது. அதை சட்டம் எப்படி அனுமதிக்கிறது.

பெண்களை பாதுகாக்கும் கடமை அரசுக்குண்டு. 375 வது பிரிவில் மைனர் பெண் சம்மதத்துடன் ஒருவர் உடலுறவு கொள்வது தண்டிக்க கூடிய குற்றம் ஆகாது என்பதை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் நேரில் ஆஜரானார். மனு குறித்து பதிலளிக்க மத்திய சட்டம், நீதித்துறை செயலாளர், பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளர், தமிழக அரசு தலைமை செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக