திங்கள், 18 ஜூலை, 2011

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் ரூ.11 ஆயிரம் கோடி

ஜெனிவா, ஜூலை 17: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணம் ரூ.11,151 கோடி என சுவிஸ் நாட்டின் சென்ட்ரல் வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுவிஸ் நேஷனல் வங்கித் தலைவர் வால்டர் மையர் கூறியதாவது: சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியவர்கள் போட்டுவைத்துள்ள பணத்தின் மதிப்பை சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் குறிப்பிட்ட அளவு பணம் என மதிப்பிட்டுக் கூறியுள்ளன. ஆனால் 2010-ம் ஆண்டின் நிலவரப்படி சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டுவைத்துள்ள பணம் ரூ.11,151 கோடியாகும். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் எவ்வளவு பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்பதை சுவிஸ் வங்கிகளால் மட்டுமே சரியாகச் சொல்ல முடியும். மற்றவர்கள் கூறுவது அனுமானத்தின் அடிப்படையில்தான்.
எங்களது ஆண்டு இறுதி கணக்குப்படி சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டுவைத்துள்ள பணம் சுமார் ரூ.11,151 கோடிதான். 2009-ம் ஆண்டு இந்தியர்கள் போட்டு வைத்திருந்த பணம் ரூ.13,500 கோடி. 2008-ம் ஆண்டு இது 12,000 கோடியாக இருந்தது.
ஆனால் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் சுவிஸ் தனியார் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இதிலும் குறிப்பாக அமெரிக்காவின் லெஹ்மன் வங்கி பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானதால் அந்த நிலை ஏற்பட்டது. சுவிஸிலுள்ள பெரிய தனியார் வங்கியான யூபிஎஸ் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தது.
இதையடுத்து சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டுவைத்திருந்தவர்கள் அதை எடுத்துவிட்டனர். இவ்வாறு பணம் எடுக்க முற்பட்டோருக்கு பணத்தை கொடுப்பதை யூபிஎஸ் வங்கி நிறுத்திவிட்டது. இதை எதிர்த்து பலர் யூபிஎஸ் வங்கி மீது வழக்குத் தொடர்ந்தனர். வரி கட்டுவதைத் தவிர்க்கவே பல அமெரிக்கர்கள் அவர்களது பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருந்தனர்.
இதையடுத்து சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பற்றிய விவரத்தை வெளியிட வேண்டும் என பாரிஸிலுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பும், ஜி-20 நாடுகளின் நிதி ஒழுங்குமுறை ஆணையமும் சுவிஸ் அரசை வலியுறுத்திவந்தன.
இதைத்தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டுவைத்திருப்போர் குறித்த ரகசியம் தொடர்பான விதியை சற்றுத் தளர்த்தியது. 2 ஆண்டுகளுக்கு முன் இந்த நடவடிக்கையை சுவிஸ் அரசு எடுத்தது. ஜி-20 நாடுகளின் வற்புறுத்தலின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சுவிட்சர்லாந்த், லக்சம்பர்க் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை ஒத்துழைப்பு அளிக்காக நாடுகளாக பாரிஸிலுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு பட்டியலிட்டது. இதனாலும் விதியைத் தளர்த்தும் சூழ்நிலை ஏற்பட்டது என்றார்.
இதற்கிடையே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருந்தவர்கள், அதை எடுத்து சிங்கப்பூர் வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இப்போது பொருளாதார நிலை சீரான நிலையில் எப்போதும்போல் சுவிஸ் வங்கிகளில் முதலீடு அதிகரித்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் சுவிஸ் வங்கிகளில் இப்போது ஏராளமான அளவில் முதலீடு செய்யப்படுவதாக ஜெனிவாவில் உள்ள இந்திய பேங்கர் ஒருவர் தெரிவித்தார்.
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினர் போட்டு வைத்துள்ள பணத்துக்கு வரி விதிப்பது தொடர்பாக மற்ற நாடுகளுடன் சுவிஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால்டர் மையர் தொடர்ந்து கூறினார். இந்தியா அதுபோல் ஏதாவது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதா என்பது எனக்குத் தகவல் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக