புதன், 29 ஜூன், 2011

Sai டிரஸ்ட் சொத்து விவரம் நவம்பரில் வெளியாகும்: சீனிவாசன் தகவல்

சாய் டிரஸ்ட் சொத்து முழு விவரம் நவம்பரில் வெளியாகும்: தேசிய தலைவர் சீனிவாசன் தகவல்

பெங்களூரு:""சாய்பாபா டிரஸ்ட் சொத்தின் முழு விவரங்கள் வரும் நவம்பர் மாதம் ஆண்டறிக்கையில் வெளியிடப்படும். புதிய திட்டங்கள் வகுக்க மாணவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படும்,'' என, ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட் தேசிய தலைவர் சீனிவாசன் கூறினார்.

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட் தேசிய தலைவர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:சாய்பாபா இருந்த போது, டிரஸ்ட் எப்படி இயங்கியதோ, அதே போன்று தொடந்து செயல்பட்டு வருகிறது.சத்ய சாய்பாபா டிரஸ்ட் மூலம் இயங்கி வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பொது மருத்துவமனை, மொபைல் மருத்துவமனைகள் மூலம், அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், பல லட்சக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.புட்டபர்த்தி, அனந்தப்பூர், மாதுனஹள்ளி, ஒயிட்பீல்டு ஆகிய இடங்களில் டிரஸ்ட் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஜாதி,மதம், இன வேறுபாடின்றி, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கிராமப்புற கல்வி திட்டங்களுக்கு, பல உதவிகள் செய்து வருகிறோம். 750 கிராமங்களுக்கு குடி தண்ணீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.சாய் டிரஸ்ட் பணம் எஸ்.பி.ஐ., வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. மாதச்சம்பளம், செலவுக்குத் தேவையான பணம் எடுக்க டிரஸ்டிகள் மூன்று பேருக்கு அதிகாரம் உள்ளது. இதில், இருவர் கையெழுத்திட்டு தான் பணத்தை எடுக்க முடியும்.டிரஸ்ட் சார்பில் பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விரைவில் திறப்பு விழா நடத்தப்படும். மருத்துவமனைக்கு பல புதிய கருவிகள் வாங்கவுள்ளோம். ஒயிட் பீல்டு மருத்துவமனையில் டாக்டர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது; விரைவில் சரி செய்யப்படும். புதிய டாக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர்.

சாய் பாபா தங்கியிருந்த அறையில் இருந்த பணம், தங்க, வெள்ளி நகைகள் மொத்த மதிப்பீடு செய்யப்படவில்லை. இதற்கு வருமான வரித்துறையில் நாங்களாகவே, 9.75 கோடி ரூபாய் செலுத்தி உள்ளோம். மதிப்பீடு முடிந்து மேலும் வரி செலுத்த வேண்டும் என்றாலும், செலுத்துவதற்கு தயாராக உள்ளோம்.சாய் பாபா நினைவு மண்டபம் கட்டுவதற்கு பக்தர்கள் வழங்கிய, 35 லட்ச ரூபாயை, பெங்களூரிலுள்ள சங்கர் நாராயணன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு காரில் எடுத்துச் செல்லும் போது, போலீசார் பறிமுதல் செய்தனர். இது டிரஸ்டுக்குரிய பணம் கிடையாது; பக்தர்கள் வழங்கியது.கடந்த சில நாட்களுக்கு முன், பஸ்சில் கோடி கோடியாக சாக்குப் பையில் பணம் கிடைத்தது என்றும், சாய்பாபா ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு சென்றதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் பதிவாகவில்லை. இந்த பணம், எந்த பஸ்சிலிருந்து பிடிபட்டது என்று புகார் கூறுபவர்கள் தெரிவிக்க வேண்டும். இது, முழுக்க முழுக்க வதந்தி.சாய் பாபா, தன் பெயரில் எந்த வங்கியிலும் அக்கவுன்ட் வைத்துக் கொள்ளவில்லை. எனவே, அவர் தன் அறையில் பணத்தை வைத்திருந்தார்.திருப்பதி தேவஸ்தானம் ஒரு மதத்துக்கு மட்டும் சொந்தமாகும். ஆனால், இது பொது டிரஸ்ட். இதில் எந்த மதத்துக்கும் சம்பந்தம் கிடையாது.சாய் டிரஸ்டை அரசு எடுத்துக் கொள்ளும் என கூறப்படுவதில் உண்மை கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை. அரசு கேட்கும் தகவல்களை கொடுத்து வருகிறோம். அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.

டிரஸ்டின் அனைத்து கணக்குகளையும் சரியாக வைத்துள்ளோம். இதில் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை. யாரும் தவறு செய்யவில்லை. பக்தர்கள் வழங்கும் பணம் முறையாக வங்கியில் டிபாசிட் செய்யப்படுகிறது. முறைகேடாக பணம் கையாளப்படுகிறது என்பதை டிரஸ்ட் மறுக்கிறது.யஜூர் மந்திரில் பணம் இருந்தது குறித்து டிரஸ்ட் உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது. டிரஸ்ட் பணம் எதையும் போலீசார் கைப்பற்றவில்லை.சாய் டிரஸ்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் முறையாக செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சொத்து, இங்கு படித்த மாணவர்களுக்குத் தான் சொந்தம் என, சாய் பாபா அடிக்கடி கூறுவார். எனவே, மாணவர்களுக்கு கவுரவம் கொடுக்கும் வகையில், பல புதிய திட்டங்கள் வகுத்துக் கொடுக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை டிரஸ்ட் கொடுக்கும்.சாய் டிரஸ்ட்டின் மொத்த சொத்து மதிப்பு, வரவு-செலவு பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. இது குறித்து, வரும் நவம்பரில் வெளியிட உள்ள ஆண்டறிக்கையில் தெளிவாகக் கூறுவோம்.டிரஸ்டிகள் அனைவருக்கும் தனிப்பட்ட பணிகள் இருப்பதால், ஒன்றாக வந்து உங்களை சந்திக்க முடியவில்லை. நாங்கள் பொதுநல சேவையாகத் தான் இந்த பணியை செய்து வருகின்றோம்.இவ்வாறு சீனிவாசன் கூறினார்.பேட்டியின் போது பேராசிரியரும், மூத்த உறுப்பினருமான அனந்தநாராயணன், கவுன்சில் மேனேஜ்மென்ட் உறுப்பினர் நாகாநந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

சாய்பாபா அறக்கட்டளை விவகாரம் :கவர்னரை சந்தித்தார் முதல்வர் கிரண்:சாய் அறக்கட்டளை மீது, ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மனை சந்தித்து பேசினார்.ஆந்திராவின் புட்டபர்த்தி சாய்பாபா அறக்கட்டளையிலிருந்து, பல லட்ச ரூபாய் பணம் கடத்தி செல்லப்பட்டது குறித்தும், அறக்கட்டளையின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும், விளக்கம் அளிக்கும் படி ஆந்திர அரசு, அறக்கட்டளை நிர்வாகிகளை கேட்டுள்ளது.ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மனை நேற்று சந்தித்து, சாய்பாபா அறக்கட்டளை விவகாரம் தொடர்பாகவும், தெலுங்கானா விவகாரத்தை காரணம் காட்டி, போலீஸ் தேர்வில் எழுந்துள்ள பிரச்னை குறித்தும், புதிய டி.ஜி.பி.,நியமனம் குறித்தும் விவாதித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக