ஞாயிறு, 26 ஜூன், 2011

Sai Trust பண மோசடி: புட்டபர்த்தியில் பக்தர்கள் ஆர்பாட்டம்

புட்டபர்த்தி: ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை அதன் உறுப்பினர்கள் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து சாய்பாபா ஆதரவாளர்கள் பலர் இன்று புட்டபர்த்தியல் ஆர்பாட்டம் நடத்தினர்.

சாய் அறக்ககட்டளை உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். பக்தர்களின் நன்கொடையை நல்ல காரியத்திற்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு பக்தர் தெரிவித்தார். அறக்கட்டளை செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கடந்த 17-ம் தேதி சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள அவரது தனி அறையான யஜுர் மந்திரில் சுமார் ரூ. 11. 56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் 307 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணம் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்வைத்து எண்ணப்பட்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் டெபாசிட் செய்யப்பட்டதாக அப்போது அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து கடந்த 19-ம் தேதி அனந்தபூர் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அறக்கட்டளை உறுப்பினருக்கு சொந்தமான காரில் இருந்து ரூ. 35.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கார் டிரைவர் ஹரிஷ்நந்தா ஷெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார். அறக்கட்டளை உறுப்பினரான வி. ஸ்ரீனிவாசன் தான் அந்த பணத்தை கொடுத்ததாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆசிரமத்தில் உள்ள பணம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து அறக்கட்டளை உறுப்பினரும், சாய்பாபாவின் உறவினருமான ஆர். ஜே. ரத்னாகரிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், வி. ஸ்ரீனிவாசனிடமும் விசாரித்து வருகின்றனர்.

இந்த அறக்கட்டளைக்கு ஆந்திர அரசு பல சலுகைகள் அளித்துள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் உடனே திரும்பப் பெறுமாறு பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

அறக்கட்டளை நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக சாய்பாபாவின் உறவினர் சேத்னா ராஜூ இந்த வார துவக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர் வி. ஸ்ரீனிவாசன் தான் பணம் கொடுத்ததாக கூறுவதால் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலுயுறுத்துகிறோம் என்று அவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக