ஞாயிறு, 5 ஜூன், 2011

Mumbai தாக்குதல் முக்கிய குற்றவாளி அல்கொய்தா தலைவர் இலியாஸ் பலி

அல்கொய்தா தலைவர்களில் ஒருவரும், மும்பை தாக்குதலில் தொடர்புடையவருமான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க தாக்குதலில் பலியானார். அவருடன் மேலும் 9 பேரும் இறந்தனர்.
அல்கொய்தா தலைவரான பின்லேடன் இறந்த பிறகு அவரது இடத்துக்கு யார் வருவார் என்ற கேள்வி எழுந்தபோது 4 அல்லது 5 பெயர்கள் பதிலாக எடுத்து வைக்கப்பட்டன. இந்த பெயர்களில் ஒன்றாக இருந்தது இலியாஸ் காஷ்மீரி. இவர் சர்வதேச அளவில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையவர் என்று கூறப்பட்டது.
அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் பாகிஸ்தான் சென்றபோது பாகிஸ்தானிடம் தீவிரவாத தலைவர்கள் 5 பெயர்கள் கொண்ட பட்டியலை கொடுத்தார். இந்த தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தரவேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார். அப்படி கொடுக்கப்பட்ட பெயர்களில் இலியாஸ் காஷ்மீரி பெயரும் இடம் பெற்று இருந்தது.
மேலும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தாஜ்மகால் ஓட்டலிலும் ரயில் நிலையத்திலும் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் இவர் முக்கிய குற்றவாளி ஆவார்.
இவர் 10 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் கைபர் என்ற இடத்தில் இருந்து தெற்கு வசீரிஸ்தானில் உள்ள வானா என்ற இடத்துக்கு சென்றார். அவர் அங்கு இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடத்துக்கு சென்றார். அந்த இடத்தின் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆள் இல்லாத விமானத்தில் இருந்து 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவற்றில் ஒன்று இலியாஸ் காஷ்மீரி தங்கி இருந்த இடத்தின் மீது விழுந்தது. இதில் 9 தீவிரவாதிகள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.
பலியானவர்களில் இலியாஸ் காஷ்மீரியும் ஒருவர் என்று பி.பி.சி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது. இதை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதி செய்யவில்லை.
பலியான 9 பேரும் பஞ்சாபி மாநிலத்தை சேர்ந்த தலீபான்கள் என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அனைவரின் உடல்களும் அந்த பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
காஷ்மீரி தடை செய்யப்பட்ட ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி அமைப்பின் தலைவராக இருந்தார். சமீபத்தில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலிலும் இவருக்கு தொடர்பு உண்டு.
இவர் இறந்து போனதாக ஏற்கனவேயும் ஒருமுறை தகவல் வெளியானது. 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு வசீரிஸ்தானில் அமெரிக்க உளவு விமானம் நடத்திய தாக்குதலில் அவர் இறந்துபோனதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஒருமாதம் கழித்து அவர் கடத்தி கொல்லப்பட்ட நிருபர் சலீம் ஷாஷாத்துக்கு பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக