ஞாயிறு, 26 ஜூன், 2011

எல்லோரும் பேசும் அளவுக்கு காதலில் என்ன இருக்கிறது?

ஆதலினால் காதல் செய்வீர்....!

உள்ளே இருப்பவர்கள் எப்படா வெளியே வருவோம் என்று நினைக்கிறார்கள்...
வெளியே இருப்பவர்கள் எப்படா உள்ளே போவோம் என்று நினைக்கிறார்கள்...."

இது ஒரு வாரப்பத்திரிகையில் வெளியான நகைச்சுவைத் துணுக்கு. சிரிக்க வைத்தாலும் எல்லா காதலர்களும் அப்படி அல்ல. காதலை வரைவிலக்கணப் படுத்த எல்லோரும் முயன்றாலும் அது கைக்குள் சிக்குகிற பாடாக காணவில்லை. சங்க காலத்திலிருந்து பின் நவீனத்துவ காலம் வரை காதலை பாடாத கவிஞர்களும் இல்லை. 'காதலிக்க நேரமில்லை' , 'காதலுக்கு மரியாதை ' என்று தொடங்கி 'எங்கேயும் காதல்' வரை காதல் பற்றி வந்த படங்களின் எண்ணிக்கை எக்கச் சக்கம். ரொமாண்டிக் ஹீரோக்களுக்கும் காதலிக்கலாம் போல தோன்றுகிற ஹீரோயின்களுக்கும் தனி இடம். ' காதல் மன்னன் '(ஜெமினி- திரையிலும் நிஜத்திலும்?), 'காதல் இளவரசன்' (கமல், பிரஷாந்த்) என்று பட்டங்கள் வேறு. காதல் காட்சிகள் என்றாலே இப்பவும் மாதவன் தான் முதல் இடத்தில் என்கிறார்கள். அதே போல பக்கத்து வீட்டு பெண் இமேஜ் இருக்கிற கதாநாயகிகளுக்கும் ( கவர்ச்சி இல்லா விட்டாலும் கூட ) தனி மவுசு. ( சினேகா, அசின் ). காதல் பற்றி வந்த புத்தகங்களும் ஏராளம். மில்ஸ் அண்ட் பூன் தொடங்கி ரமணிச்சந்திரன் நாவல்கள் வரை வெளியான ரொமாண்டிக் நாவல்களும் அதிகம்.

இப்படி எல்லோரும் பேசும் அளவுக்கு காதலில் என்ன இருக்கிறது? காதலில் பல வகை. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்ணோடு கண்ணினை கலந்தற்றே என்று வருவது இன்ஸ்டன்ட் காதல். நவீன பாஷையில் சொல்லப் போனால் கண்டவுடன் மூளைக்குள் மின்குமிழ் எரியும். மனதிற்குள் மணி ஒலிக்கும். பிரிதிவிராஜ் இற்கு ஜோதிகாவைக் கண்டதும் நடந்தது மாதிரி. ( படத்தில் தான்....குடும்பத்தில் குழப்பம் உண்டு பண்ணி விடாதீர்கள் !) சிலருக்கு எக்ஸ்ட்ராவாக வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி கூட பறக்கும். ( கொலரா அறிகுறி?).

இதெல்லாம் சற்று மிகைப்படுத்தப் பட்டது போல தோன்றுகிறது. முதல் பார்வையில் ஒரு சின்ன ஈர்ப்பு ( atraction ) வரலாம். ஆனால் காதல்? பலருக்கும் கொஞ்சம் பொதுவான சந்திப்புகள் நடந்தபின்பே காதல் வருகிறது. பார்க்காத காதல், பேசாத காதல் என்று சினிமாவின் சுவாரசியமான பூச் சுற்றல்களைத் தாண்டி, படிப்பு, மதம், ஏன் ராசி, நட்சத்திரம், இதெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு அதன் பின் தைரியமாக காதலில் விழுபவர்களும் இருக்கிறார்கள். காதலிக்க அப்போது தான் தொடங்கி இருப்பவர்களை இலகுவில் கண்டுபிடித்து விடலாம். ஒவ்வொரு குறுந்தகவல் வரும் போதும் அழைப்பு வரும் போதும் முகம் பரவசம் அடையும். தனியே சென்று கதைப்பார்கள். கூட்டம் இருந்தால் ஒற்றை வார்த்தைகளில் கதைப்பார்கள். பெயர் ஒற்றை எழுத்தில் அலைபேசியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். யார் என்று கேட்டால் முரண்பாடான பதில்கள் வரும்.

பொதுவாகவே எல்லாக் காதலர்களும் ஆண் பெண் பேதம் இன்றி possasivness உடையவர்களாகவே இருக்கிறார்கள். தன் காதலி/காதலன் எதிர்ப் பாலாருடன் கதைப்பதை நிச்சயமாக வெறுக்கிறார்கள். தாங்கள் சொன்னதை சொன்ன நேரத்தில் முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தாமதமாக வந்தமைக்கோ அல்லது தொலைபேசியில் அழைக்கும் போது பதில் அளிக்காமைக்கோ சண்டை போடாத காதலர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

எல்லாக் குறும்புகளும் பரவசங்களும் கொஞ்ச காலத்தில் தீர்ந்து விடும். கதைக்க வேண்டிய எல்லாவற்றையும் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே கதைத்து முடித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு இதுவரை கவனித்திராத குறைகளும் பெரிதாகத் தென்படத் தொடங்குகிறது. இது சரி இது பிழை என்று சீர் தூக்கிப் பார்க்க முடிகிறது. கல்லூரிகளில் தொடங்கும் காதல் சில மாதம் பல்கலைக் கழகங்களில் தொடங்கும் காதல் சில வருடங்கள் என்று முடிந்த எத்தனையோ காதல் கதைகளை நீங்களும் கண்டிருக்கலாம். கல்யாணத்தில் முடிந்த காதலும் நிறைய உண்டு. கல்யாணத்தின் பின் முறிந்த காதலும் உண்டு. ஆறு , ஏழு வருடங்கள் விரட்டி விரட்டி காதலித்து , கல்யாணம் பண்ணி, பிறகு விவாகரத்து வரைக்கும் போகும் போது, எங்கு தப்பு நேர்ந்தது என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு கவிதை ( இதுவும் இரு வார இதழில் இருந்து )

"எல்லா காதலர்களும் ஒரு நாள் அழுகிறார்கள்...
சிலர் பிரிந்ததற்காக.....
சிலர் சேர்ந்ததற்காக....."


திருமணம் வரை காத்திருக்காமலும் கருத்து வேறுபாடுகளால் பிரிகிறார்கள். அப்படிப் பிரியும் போது அது வரை காதலித்த காலங்கள் வீணடிக்கப் பட்டு விடுகின்றன. அல்லது அடுத்த முறை விடக்கூடாத பிழையை காட்டித் தந்து விட்டு செல்கின்றன. காதலர்களில் ஒருவரின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது, அபிப்பிராய பேதங்கள் மெல்ல வளர்ந்து உருவெடுத்து ஒரு கட்டத்தில் முற்றி வெடிக்கும் போது பிரிவு நேரிடுகிறது. இன்னொரு வகைப் பிரிவு தான் மிகவும் கொடுமையானது. மதம், சாதி, பணம், ஜாதகம் போன்ற பல காரணிகளில் ஏதோ ஒன்றைக் காரணம் காட்டி பெற்றோர் அனுமதி மறுக்கும் போது தான் தாங்க முடியாத துயரத்தைச் சந்திக்க நேரிடுகிறது. சிலர் தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். S.J.சூர்யா ஒருமுறை பேட்டி ஒன்றில் சொன்னது போல சிலர் alcoholic ஆகவும் சிலர் workaholic ஆகவும் மாறுகிறார்கள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்கப் போவது இல்லை, காதலில் வெற்றி பெற்றவர்கள், தோற்றுப் போனவர்கள், எல்லோருக்கும் சேர்த்து காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் அதே அளவு நேரம், அதே அளவு மணித்துளிகள். காலம் காயங்களை மாற்றுகிறது, அல்லது அதன் தாக்கத்தை குறைக்கிறது. முடிந்து போன காதலை விட இன்னும் அழகான காதல் உங்களுக்காக எங்கேயோ காத்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே, மீண்டும் தலைப்பை படிக்கவும்.

( தலைப்புக்கு நன்றி, பாரதியார்,மற்றும் சுஜாதா!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக