திங்கள், 20 ஜூன், 2011

சரிவிலிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டிய தேவை கூட்டமைப்பினருக்கு

பொல்லைக் கொடுத்து கூட்டமைப்பினர் அடிவாங்க முயன்றனரா?
-எஸ்.எஸ்.குகநாதன்.
தமிழ்க் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் இராணுவத்தினர் குளப்பம் விளைவித்ததாக பல்வேறு ஊடகங்களும் கூச்சலிட்டு வருகின்றன. இராணுவம் தாக்குதல் நடாத்தியிருந்தால் அது கண்டனத்திற்குரிதே. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமல்லை. ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவது எத்தகைய குற்றமோ அதேபோன்றதே மற்றவரை தாக்குதலுக்குத் தூண்டுவதும்.சட்டத்தரணிகளின் கட்சி என்று வர்ணிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்கு முன்னர் அதற்கான அனுமதியைப் பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது தெரியாமலிருக்க முடியாது.
அவசரகாலச்சட்டம் அமுலில் இருக்கும் நாடு ஒன்றில் கூட்டம் ஒன்றை நடாத்துவதென்றால் அதற்கான அனுமதியை உள்ளுர் பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சாதாரண நடைமுறை கூடவா தெரிந்திருக்கவில்லை. அல்லது இப்படியொரு சம்பவம் நடைபெறவேண்டும் என்பதற்காகவே பெறாமல் இருந்தார்களா என்பதை புரியவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு கிடைக்கவில்லை. அதேபோல, பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகள் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பினருக்கு கிடைக்கவில்லை. நடக்கவிருக்கும் தேர்தலிலும் அதேநிலை தொடரும் என்பது கூட்டமைப்பினருக்கு தெரியாததல்ல.
இந்த சரிவிலிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டிய தேவை கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது. ஆதற்காகவே இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அதற்காகவே அனுமதியைப் பெறாமல் கூட்டத்தை நடாத்த கூட்டமைப்பினர் முயன்றிருப்பதாகவே தெரிகின்றது. அதாவது பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது போல பொல்லைக் கொடுத்திருக்கின்றார்கள்.
சம்பவம் நடைபெற்றதும் கூட்டமைப்பின் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றதை அவதானிக்கலாம். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு சொந்தமான பத்திரிகை, அந்த நாளைய சுதந்திரன் பத்திரிகையையும் மிஞ்சும் வகையில் இந்தச் சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்டது.
அனுமதி பெறாமல் நடாத்தப்படும் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் மக்களை கூட்டத்திலிருந்து கலைந்துசெல்லுமாறு படையினர் கேட்டபோது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான பொலிசார் தலையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வுhக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிசார் மீதே தாக்குதல் நடாத்தபப்ட்டிருக்கின்றது.
தூக்குதல் நடாத்தப்பட்டது சரியானது என்று வாதாட நாம் தயாராக இல்லை. ஆனால் அதனை பற்றிய செய்தியை வெளியிட்ட அந்தப் பத்திரிகை அதைப்பற்றி வாய்திறக்கவில்லை. கூட்டம் நடாத்துவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என்பதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. உச்சக்கட்டமாக தமது நிர்வாக இயக்குநரான சரவணபவன் நூலிழையில் தப்பினார் என்று அவரைக் ஹீரோ ஆக்க முயன்றது.
இன்னுமொரு இணையத்தளம் தமது சகோதரர் அவரும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்தான். அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டதாக எழுதியது. ஆனால் அவரைக் கூட்டத்தில் கண்டதாக யாரும் சொல்லவில்லை.
ஆக, கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் அந்தச் சம்பவத்தில் இன்னும் பல வேண்டத்தகாத சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தேவை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால். ஆதன் மூலம்தான் அவர்கள் தமது இருப்பை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை கூட்டமைப்பினர் விரும்புவார்கள். அதற்கான சந்தர்ப்பத்தையும் அவர்களே ஏற்படுத்த முயற்சிப்பார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்கவேண்டும். அப்படியெனில்தான் அவர்களின் தோல்வியை உறுதிசெய்ய முடியும்.
-எஸ்.எஸ்.குகநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக