செவ்வாய், 21 ஜூன், 2011

பல கோடி ரூபாய் பறிமுதல்: சாய்பாபா அறக்கட்டளை தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

புட்டபர்த்தியில் இருந்து பெங்களூர் சென்ற சொகுசு பஸ்சில் கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி சாய்பாபா ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கொடிகொண்டா சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் நடந்த வாகன சோதனையின்போது ரூ.35.5 லட்சம் பணத்துடன் ஒரு கார் பிடிபட்டது.

அந்த பணம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில், சாய்பாபா பயன்படுத்தி வந்த யஜுர் மந்திர் என்கிற அவரது சொந்த அறையில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்டது பின்னர் தெரிய வந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், புட்டபர்த்தியில் இருந்து பெங்களூர் செல்லும் ஒரு சொகுசு பஸ்சில் மூட்டை, மூட்டையாக பணம் கடத்தப்படுவதாக ஆந்திரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே உஷாரான போலீசார் புட்டபர்த்தியில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் கொத்தசெருவு என்ற இடத்தில் ஒரு வால்வோ சொகுசு பஸ்சை மடக்கிப் பிடித்தனர்.

அந்த பஸ்சுக்குள் ஏறி போலீசார் சோதனை போட்டபோது, 2 சாக்கு மூட்டைகளில் ரூ.1000, ரூ.500, ரூ.100 நோட்டு கட்டுகளாக, கத்தை, கத்தையாக பணம் இருந்தது தெரியவந்தது. அவை ரூ.10 கோடிவரை இருக்கும் என்று இன்னொரு தகவலும் கூறுகிறது.

தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது

சாக்கு மூட்டைகளில் பணத்தை கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் போலீசார் அனந்தபூர் கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சென்ற காரில் இருந்து ரூ.35.5 லட்சமும், ஒரு சொகுசு பஸ்சில் இருந்து பல கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக புலன் விசாரணை நடத்திய போலீசார், சாய்பாபா ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரதான் என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பணம் கடத்தப் பயன்படுத்தப்பட்ட கார் டிரைவர் ஹரீஷிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர் சீனிவாசனின் கார் டிரைவர் என்றும், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. ஜாக்கிரதையாக வா என்று கார் டிரைவர் ஹரீஷுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், அதை பார்க்காமல் சென்றதால் ஹரீஷ் பிடிபட்டதாகவும், ஹரீஷ் கூறியதை அடுத்து சேகர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ஹரீஷ் கொடுத்த தகவலின் பேரில், பெங்களூர் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஷோகன் ஷெட்டியும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஹரீஷ், சேகர், ஷோகன்செட்டி ஆகிய மூவரும் இந்துபூர் முதல் வகுப்பு மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

காண்ட்ராக்டருக்கு தர வசூலித்த பணம்...

இந்த நிலையில், சாய்பாபா பக்தர்கள் 12 பேர் நேற்று சிலமாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஒரு கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:

சாய்பாபாவின் பக்தர்களில் ஒரு பிரிவினராகிய நாங்கள் மறைந்த சத்ய சாய்பாபாவுக்காக பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் கட்டப்பட்டு வரும் புனித மகாசமாதி கட்டிடப்பணியில் நேரடியாக பங்குபெற விரும்பினோம். அதற்காக ரூ.35.5 லட்சம் நன்கொடை வசூலித்தோம்.

அந்த பணத்தை சாய்பாபா ஆசிரமத்தில் செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு கொடுத்தால், அது மகா சமாதி கட்டுமான பணிக்கு பயன்படாமல், பொது பணிகளுக்கு சென்று விடும் என்று கருதி அறக்கட்டளைக்கு கொடுக்கவில்லை.

சாய்பாபா அமர்ந்து ஆசி வழங்கிய நாற்காலியில் அந்த பணத்தை வைத்து, அவரது ஆசீர்வாதம் கிடைக்க செய்யும்படி ஆசிரமத்தின் நிர்வாகி ஒருவரை கேட்டுக்கொண்டோம். அதன்படி சாய்பாபாவின் நாற்காலியில் வைத்து ஆசீர்வதிக்கப்பட்ட அந்தப்பணம் காண்டிராக்டருக்கு வழங்க கொண்டு போகப்பட்டது.

இவ்வாறு அந்தக்கடிதத்தில் சாய்பாபாவின் பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

Up to Rs 10 cr cash has been seized from vehicles going out of Puttaparthi the abode of the Late Sathya Sai Baba. This has given credence to the speculation that gold and money were taken out much before the official opening of the personal chamber of the Godman. The chief security officer of Prashanthi Nilayam has arrested in this case.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக