செவ்வாய், 21 ஜூன், 2011

திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி,இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில்

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதையடுத்து அவரை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.

இன்று மாலை 4.35 மணிக்கு அவர் கனிமொழியை சிறையில் சந்தித்துப் பேசினார். அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

அதே போல கருணாநிதியின் துணைவி ராஜாத்தியம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோரும் சிறையில் கனிமொழியை சந்தித்தனர்.

முன்னதாக காலை 8.20 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் கருணாநிதி டெல்லிக்குப் புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன் மற்றும் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆதிசங்கர், டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் காத்திருந்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக கனிமொழியின் ஜாமீன் தள்ளுபடியானவுடன் மூத்த திமுக தலைவர்களுடன் சென்னையில் தனது இல்லத்தில் கருணாநிதி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இன்று கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, தலைமை நிலையச் செயலாளர் காஜாமொகைதீன், கருணாநிதியின் டாக்டர் பிரவீன் ஆகியோர் டெல்லி சென்றனர்.

டெல்லியில் அவர் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் கருணாநிதி சந்தித்துப் பேசக் கூடும் என்று தெரிகிறது.

2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். அதன் பின்னரே கனிமொழி மீண்டும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK chief M. Karunanidhi on Tuesday left for New Delhi to meet his jailed daughter Kanimozhi, a day after the Supreme Court rejected her bail application in the 2G spectrum case. Mr. Karunanidhi left by a private airline at 8.50 a.m. and was accompanied by senior leaders Duraimurugan and K. Ponmudy among others.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக