புதன், 22 ஜூன், 2011

“நான் என்ன தவறு செய்தேன். இவர்களுடன் கூட்டு சேர்ந்த பாவத்தைத் தவிர... கலைஞர் டி.வி. நிர்வாகி

கூடா நட்பு கேடாய் முடியும்

திகார் சிறையில் இருக்கும் ஷரத்குமாருக்கு மிகச்சரியாக பொருந்தும்.

கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னது யாருக்கு பொருந்துகிறதோ,இல்லையோ திகார் சிறையில் இருக்கும் ஷரத்குமாருக்கு மிகச்சரியாக பொருந்தும்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கனிமொழி, ஆ.ராசா இருவருக்கும் ஊழலில் என்ன பங்கு இருக்கிறது என்பதை சி.பி.ஐ. சொல்லி விட்டது. கனிமொழியோடு கைது செய்யப்பட்ட, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ஷரத்குமாருக்கு என்ன தொடர்பு? யார் இந்த ஷரத்குமார்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷரத். இவரது தந்தை தொழிலதிபர். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் செட்டிலாகி விட்டார்கள். சன் டி.வி. குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுடன் டான்பாஸ்கோ பள்ளி, லயோலா கல்லூரியில் படித்தவர் ஷரத்குமார். பிறகு, கலாநிதியுடன் அமெரிக்கா சென்று நிர்வாகவியல் படிப்பு படித்தவர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், ஸ்டெர்லிங் சிவசங்கரனின் சிவா கம்ப்யூட்டர்ஸ் கம்பெனியில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

தமிழ்நாட்டில் 92-ம் ஆண்டு சன் டி.வி. தொடங்கப்பட்ட போது, ஷரத்குமாரும் முதலீடு செய்தார். பிறகு 1996-ம் ஆண்டு, ஆந்திராவில் இருக்கும் ஜெமினி டி.வி.யில் முதலீடு செய்ய விரும்புகிறார் கலாநிதி.அங்கே ஜெமினி டி.வி.யை மனோகர் பிரசாத், கிரண் ரெட்டி ஆகியோர் நடத்தி வருகின்றனர். அதில் தலா 25 சதவிகித பங்குகள் கலாநிதி பெயரிலும், ஷரத்குமார் பெயரிலும் வாங்கப்பட்டது.

பென்ஸ் கார் வாங்குவதில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில், ஜெமினி டி.வி.யில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஷரத்குமார். 2002-ம் ஆண்டு அவர் வெளியேறிய போது, அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை 80 கோடி ரூபாய். அதை ஐந்தாண்டுகளில் தருவதாகவும், அந்த கால கட்டத்தில் வேறு டி.வி.தொழில் செய்யக் கூடாது என்றும் இரு தரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் பின்னர், தான் உண்டு, தனது தொழில் உண்டு என்று கட்டடம் கட்டும் பணியில் இருந்த ஷரத்குமாரை, கலைஞர் டி.வி.க்கு அழைத்து வந்தவர் ஆற்காடு வீராசாமி. அதாவது, 2007-ம் ஆண்டு சன் டி.வி. சகோதரர்களுக்கும், அழகிரிக்கும் ஏற்பட்ட மோதலில் கலைஞர் டி.வி. தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு நிர்வாகியாக ஷரத்குமாரை அழைத்தனர். அவர் வர மறுக்கவே, கருணாநிதியே நேரடியாக போனில் அழைத்துப் பேசி, “நீ என் மகன் மாதிரி.உன்னை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’’ என்றார்.

அதன் பின்னரே, அந்த பதவிக்கு வர ஷரத்குமார் ஒப்புக்கொண்டார். இதுதான் அவர் கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனரான கதை.ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலமாக கலைஞர் டி.வி.க்கு 214கோடி ரூபாய் வந்த விவகாரத்துக்கும், ஷரத்குமாருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து சி.பி.ஐ.க்கும் தெரியும். கருணாநிதியின் குடும்பத்துக்கும் தெரியும்.
இந்த பணம் கைமாறும் போதே,ஷரத்குமார் உஷாராகி வெளியேற முற்பட்டார்.சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே ‘‘ட்ரோபிகல் புரூவரீஸ்’’என்ற பீர் தொழிற்சாலையைத் தொடங்க முடிவு செய்தார். அதற்கான உரிமத்தை அவர் கேட்ட ஒரு வாரத்தில் வழங்கப்பட்டது. மேலும், உரிமம் பெற்றதுமே, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அதை கருணாநிதி ஏற்கவில்லை.

சுமார் 150 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட அந்த பீர் தொழிற்சாலைக்கு, 75 கோடி ரூபாயை வங்கிக் கடனாக வாங்க ஷரத்குமார் விண்ணப்பம் செய்தார். பீர் தொழிற்சாலைக்கான கட்டடமும் வளரத்தொடங்கியது.இந்த நிலையில்தான், அவரை சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் இருக்கும் ஷரத்குமாரை சில நாட்களுக்கு முன்பாக,அவரது நண்பர்கள் சந்தித்தனர்.அப்போது அவர் கதறிய காட்சி,நண்பர்களை நிலைகுலையச் செய்து விட்டதாம்.

“நான் என்ன தவறு செய்தேன். இவர்களுடன் கூட்டு சேர்ந்த பாவத்தைத் தவிர... கலைஞர் டி.வி. நிர்வாகியாக அந்த அலுவலகத்தில் நான் செலவழித்த நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் கூட இல்லை.தினமும் எல்லா வேலைகளையும், உறவினர்கள் இரண்டுபேர் தான் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் யாரென்று கலைஞர் டி.வி.யில் வேலை பார்த்த அத்தனை ஊழியர்களுக்கும் தெரியும்.



சிறையில் பணம் தண்ணீராய் கரைகிறது. இங்கே சிறையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இது தவிர, இங்கே இருக்கும் என் மனைவிக்கு தினமும் செலவு, கோர்ட் செலவு என்று தினமும் ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய வங்கிக் கணக்கை சி.பி.ஐ. முடக்கி விட்டது. என் மீது கிரிமினல் வழக்கு போட்டிருப்பதால், பீர் தொழிற்சாலையின் உரிமம் ரத்தாகி விட்டது. மேலும் அதற்காக வர இருந்த வங்கிக் கடனும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் பணத்துக்கு எங்கே போவேன். பீர் தொழிற்சாலை லைசென்ஸ் வாங்கியபோது, கட்சி நிதி என்று என்னிடம் ரூ.8 கோடி வாங்கினார்கள். இப்போது அரசு லைசென்ஸை ரத்து செய்துவிட்டது. நான் கொடுத்த ரூ.8 கோடியையாவது தரச் சொல்லுங்கள்.

இதுவரை என்னைச் சந்தித்த மூன்று மத்திய அமைச்சர்களிடம்,என் நிலையைச் சொல்லிவிட்டேன்.கலைஞரிடம் யாருமே அதை சொல்லவில்லை. ஆனால், ராசாவுக்கு பணம் வருகிறது. கனிமொழிக்கும் தனியாக பணம் செலவு செய்யப்படுகிறது. நான் இங்கே இருப்பதை அவர்கள் சுத்தமாக மறந்து விட்டார்கள். இப்படியே போனால், நான் கோர்ட்டில் நடந்த உண்மைகளைச் சொல்லிவிட்டு, சாட்சியாக வெளியேற வேண்டியதுதான்.
எனக்கு நீங்கள் பத்து லட்சம் ரூபாய் கொடுங்கள். நான் பிறகு தருகிறேன். அதை டெல்லியில் என் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்று நண்பர்களின் கைகளை பிடித்துக் கொண்டு, கதறி அழுதிருக்கிறார் ஷரத்குமார் உடனே, நண்பர்களும் கண்ணீரில் கரைய, வெளியே வந்ததும் அவர்களிடம் இருந்த மூன்று லட்சத்தைக் கொடுத்துவிட்டு வந்தார்களாம்.

‘‘கனிமொழிக்கும் கலைஞர் டி.வி. நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, ஷரத்குமார்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்’’ என கனிமொழியின் வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடியதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவும்.கருணாநிதி,குடும்பத்திற்காய் யாரை வேண்டுமானாலும் காவு கொடுப்பார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக