வியாழன், 2 ஜூன், 2011

தயாநிதி மீது விரைவில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல்

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் புதிதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி மாறன் மீது, சி.பி.ஐ., விசாரணை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அந்த காலத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றச்சாட்டு என்ன : தயாநிதி மாறன், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் தயாநிதி மாறன், காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், சன் டைரக்ட் கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, டெகல்கா ஆங்கில வார இதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மாறன் இதை மறுத்தார். இது தொடர்பாக, "மானநஷ்ட வழக்கு தொடர, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும்' தெரிவித்தார்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்திவந்த, சிவா குழும சேர்மன் சி.சிவசங்கரன், கடந்த மாதம் மத்தியில், சி.பி.ஐ., வசம் அளித்த புகாரில், "தான் நடத்தி வந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு தயாநிதி மாறன் தான் காரணம்' என, குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தனது நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்க தாமதம் செய்து வந்த தயாநிதி மாறன், வெளிநாட்டு கம்பெனிக்கு விற்றதும், அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கீடு அளித்தார் என குற்றம்சாட்டியுள்ளார். சிவசங்கரனின் புகார் குறித்து முழுமையான வாக்குமூலத்தை பெற, அடுத்த வாரம் அவரிடம் சி.பி.ஐ., நேரடியாக விசாரிக்க இருக்கிறது. அதன் அடிப்படையில், தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என தெரிகிறது.

பொது நல மனு: இந்நிலையில், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, பொது நல மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பிரபல வக்கீலும், லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு சாதகமாக தயாநிதி மாறன் செயல்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதார, ஆவணங்கள் உள்ளன. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. தயாநிதி மாறன், ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தினார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்தன. அதே ஆண்டு, மே மாதம், மலேசியாவின் மேக்சிஸ் கம்பெனி, ஏர்செல்லின் 74 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், ரூ.599.01 கோடி முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டி டி எச்' நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம்.இது குறித்து வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுப்பு: இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. உண்மையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

தயாநிதி ராஜினாமா ஜெயலலிதா வலியுறுத்தல் : ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் தயாநிதி மாறன், உடனே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, தன் மீதான ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்' என்று, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள், "மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஊழல் புகார் விவகாரம் குறித்தும், இதில், பிரதமர் எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா கூறியதாவது:என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பிரதமருக்கு நன்றாகத் தெரியும். அவர், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். அமைச்சரவையில் இருந்து, உடனடியாக தயாநிதி மாறனை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இதை செய்வார் என நம்புகிறேன். தயாநிதிமாறன், அமைச்சரவையில் இருந்து விலகி, தன் மீதான ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக