செவ்வாய், 21 ஜூன், 2011

துக்கம் தொண்டையை அடைத்தது கருணாநிதிக்கு. உயிரைக்கொடுத்து வசனங்களை

துக்கம் தொண்டையை அடைத்தது கருணாநிதிக்கு. உயிரைக்கொடுத்து வசனங்களை எழுதியிருக்கிறோம். ஆனால் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் நம்முடைய பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டார்களே. நினைக்க நினைக்க ஆத்திரம் அதிகரித்தது. மனைவி மற்றும் நண்பர்களுக்கு முன்னால் இத்தனை பெரிய அவமானம் ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
படம் முடிந்ததும் நேரே படத் தயாரிப்பாளரிடம் சென்றார். பெயர் வராமல் போனதற்குக் காரணம் கேட்டார்.
‘பிரபலமான வசனகர்த்தா என்றால் நிச்சயம் பெயர் போட்டிருப்போமே.’
பதிலைக் கேட்டதும் சீயென்று போய்விட்டது கருணாநிதிக்கு. பணம் தருகிறார்கள். உண்மைதான். ஆனால் பணத்துக்காக மட்டுமா எழுதுகிறோம்? இல்லை. புகழ் முக்கியம். வெற்றி அதைவிட. தவிரவும், என்னுடைய உழைப்பை இன்னொருவர் உறிஞ்சிக் கொழுப்பதை ஏற்கமுடியாது. இனியும் இப்படித்தான் செய்வார்கள் என்றால் இனி இங்கே வேலை
செய்வதில் அர்த்தமில்லை. திருவாரூக்கே திரும்பத் தயாரானார் கருணாநிதி.
நண்பர்கள் பலரும் கருணாநிதியைத் தடுத்தனர். வேண்டாம். சினிமாவில் இதெல்லாம் பழகிப்போன ஒன்று. வளரும் இளைஞர்கள் அத்தனைபேருக்குமே இந்தச் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எந்தச் சமாதானத்தையும் கருணாநிதியால் ஏற்கமுடியவில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்கினார்.
நண்பர்கள் விடவில்லை. நீங்கள் எதிர்ப்பது பெரிய பட நிறுவனத்தை. உங்களைப் போல பலபேருடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் அவர்கள்தான். அவர்களைப் பகைத்துக் கொண்டு போவது நல்லதல்ல; அவசரப்படாதீர்கள். சமாதான முயற்சிகளை விடாமல் செய்தனர் நண்பர்கள். அதற்கு முக்கியமான காரணம், கருணாநிதி செய்த கட்சிப்பணிகள்.(modern theaters)
கோவையில் இருந்தபோது வசனம் எழுதியது போக எஞ்சியிருக்கும் நேரத்தில் எல்லாம் திராவிடர் கழகக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவார் கருணாநிதி. குடி அரசுவில் வெளியான அவருடைய  எழுத்துக்களால் கவரப்பட்ட பலரும் அவரைத் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்ப வைப்பார்கள். இதனால் திராவிடர் கழகத் தொண்டர்கள் மத்தியில் கருணாநிதிக்கு நல்ல செல்வாக்கு. வசீகரிக்கும் பேச்சுத்திறன் கொண்ட ஒருவரை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து கருணாநிதியிடம் சமாதானம் பேசினர்.
ஆனாலும் முடிவில் மாற்றமில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் கருணாநிதி.
மனைவி சகிதம் திருவாரூருக்கு வந்திறங்கியபோது எதிர்காலம் குறித்த எந்தவிதமான பிடிமானமும் இல்லை. கைவசம் இருந்தது எழுத்து. அதுதான் மீண்டும் அவருக்குக் கைகொடுத்தது. அப்போது தேவி நாடக சபை என்ற பெயரில் புதிய நாடகக்குழு ஒன்று திருவாரூக்கு வந்திருந்தது. சில நாடகங்களும் நடத்தப்பட்டன. புதிய நாடகம் ஒன்றை நடத்தினால் வரவேற்பு கூடும்; வருமானமும் அதிகரிக்கும் என்று நினைத்தனர் நாடகக் குழுவின் நிர்வாகிகள். அப்போது அவர்களுடைய நினைவுக்கு வந்த பெயர், கருணாநிதி.
சினிமாவுக்கு வசனம் எழுதச் சென்றவர் மீண்டும் நமக்காக நாடகம் எழுதித்தருவாரா
என்ற தயக்கத்துடனே கருணாநிதியை அணுகினர். கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நிராகரித்துவிடும் நிலையில் கருணாநிதி இல்லை. தவிரவும், அப்போது அவருடைய மனைவி பத்மாவின் வயிற்றில் குழந்தை உருவாகியிருந்தது. நாடகம் எப்போது வேண்டும் என்று கேட்டார் கருணாநிதி. நாடகக் குழுவினருக்கு பலத்த மகிழ்ச்சி. எப்போது கொடுத்தாலும் போட்டுவிடலாம் என்று சொல்லிப் புறப்பட்டனர்.
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி கருணாநிதிக்குப் பிடித்தமான ஒன்று. அதையே அடிப்படையாக வைத்து புதிய நாடகம் ஒன்றை எழுதினார். இலக்கிய வாசனை கொண்ட கதை அது. நாடகமாக மாற்றும்போது அந்த வாசனை குறையாமல் இருக்க நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. எழுதிமுடித்தார். மந்திரி குமாரி என்று புதிய பெயரையும் வைத்தார்.
திருவாரூரில் மந்திரி குமாரிக்கு அரங்கேற்றம் நடந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. வசூலுக்கும் பஞ்சமில்லை. திருவாரூரை அடுத்து கும்பகோணத்திலும் மந்திரி குமாரி சக்கைபோடு போட்டாள். கருணாநிதிக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. மந்திரி குமாரியின் வெற்றிச்செய்தி சேலம் வரை கேட்டது. ஆம். சேலத்தில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் டைரியில் கருணாநிதியின் பெயர் இடம்பெற்றது. அதன் அர்த்தம் விரைவில் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்பதுதான்.
அந்த மந்திரி குமாரி திரைபடத்தை எல்லிஸ் ஆர் டங்கன் என்ற அமெரிக்கர் இயக்கி இருந்தார். அது சேலம் மாடர்ன் தியேட்டர்சில் உருவானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக