செவ்வாய், 21 ஜூன், 2011

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக்கம்

சென்னை: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இன்று அதிகாலை திடீர் நில அதிர்ச்சி ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர்.

சேலம், கிருஷ்ணகிரி, ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ஈரோடு வரை இந்த நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்தனர்.

காலை 5.21 மணிக்கு ஏற்பட்ட ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாகப் பதிவானது.

இந்த நில அதிர்ச்சியால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. வாழப்பாடி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், ராசிபுரம் போன்ற பகுதிகளில் நில அதிர்ச்சி சற்று பலமாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் மிதமான அதிர்வு காணப்பட்டது. வேலூர்- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளி்ல் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த பூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் எதும் ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தின் மையம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருந்தது. அதே போல பனைமரத்துப்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உமையாள்புரம், உத்திரகவுன்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த நிலநடுக்கம் தீவிரமாக உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த 3 மாவட்டங்களிலும் தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 8.35 மணியளவில் நில அதி்ர்வு ஏற்பட்டது. வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் சரிந்து விழுந்தன.

அடுத்த சில நிமிடங்களில் 8.40 மணி்க்கும் 2வது முறையாக மீண்டும் இதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.

மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், இந்த சிறு பூகம்பத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் லேசான நிலநடுக்கம்:
இந் நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 7.34க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 எனப் பதிவானது. ஸ்ரீநகரில் இருந்து வடகிழக்கே 116 கிமீ தொலைவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
Tremor was felt in Salem, Krishnagiri districts in the wee hours of today
ஜூன் 21, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக