திங்கள், 6 ஜூன், 2011

அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை,அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை : அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்ற விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

30 வருட கால யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டதையடுத்து யுத்த பிரதேசமாகிய வடபகுதியில் வடக்கின் வசந்தம் என்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பொலிவு பெற்று வரும் இந்தப் பிரதேசத்தினுள் தமது சொந்தக் கிராமங்களில் தமது குடும்பத்தினர் உறவினர்களுடன் இணைந்து வாழப் போகின்ற புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்கள் சமூகத்தில் பயனுள்ளவர்களாகவும் சமூகத்தையும் நாட்டையும் வளப்படுத்தக் கூடியவர்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த நிலையங்களில் உள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் முடிவடைந்ததும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு விடுவார்கள்” என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்களில் புனர்வாழ்வுப் பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினரை விடுதலை செய்வதற்காக வவுனியாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த வைபவத்தில் புனர்வாழ்வு பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினர் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமாகிய நாமல் ராஜபக்ச புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, புனர்வாழ்வு அமைச்சின் செலயாளர் ஏ.திசாநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சதீஸ்குமார், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிஷோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் 900 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என புனர்வாழ்வு அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வைபவம் நடைபெற்ற மண்டபத்திற்குக் குறைந்த எண்ணிக்கையானர்வர்களே அழைத்து வரப்பட்டிருந்தார்கள். விடுதலைக்காகத் தெரிவு செய்யப்படட்டவர்களின் குடும்ப உறவினர்களிடம் விடுதலைக்குரிய கையெழுத்துக்கள் ஏற்கனவே பெறப்பட்டதையடுத்து அவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக வருகை தந்திருந்த பலருக்குச் சொந்தமான இளைஞர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து அழைத்து வரப்படாதிருந்ததைக் கண்டதும் பம்பைமடு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய புனர்வாழ்வு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தமது உறவினர்கள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.
இவ்வாறு சென்ற பலரும் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக அழுது குளறி சத்தமிட்டு தமது கணவன்மார்களும் பிள்ளைகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரினர். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் இது குறித்து விடுதலை செய்யப்படுவதற்கான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்குச் சென்று புனர்வாழ்வு அமைச்சரிடம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இதனையடுத்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்திற்கு வருகை தந்த பலரும் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் தமது கணவன்மாரையும் பிள்ளைகளையும் ஏற்கனவே அறிவித்தபடி விடுதலை செய்ய வேண்டும் என்று அங்கு கடமையில் இருந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினரிடம் அழுது குளறி கோரிக்கை விடுத்தனர். ஆயினும் நிகழ்வு முடிவடைந்ததும் இவர்கள் அமைச்சரைச் சந்தித்து தமது குறைகளைத் தெரிவிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் தெரிவித்ததாவது: இன்று 900 பேரை விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டபோதிலும் அந்த எண்ணிக்கையிலும் குறைந்த எண்ணிக்கையான சுமார் 300 பேர் வரையில் தான் விடுதலை செய்யப்படுவார்கள் என வதந்தி பரவியிருந்தது. இதனால் புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களின் உறவினர்கள் குழப்படைந்திருந்தார்கள். அவர்கள் அவ்வாறு குழப்படைய வேண்டியதில்லை. ஏனென்றால் அறிவித்தவாறு 900 பேரை நாங்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்தக் காரணத்தைக்கொண்டும் பயிற்சி முடிந்தவர்களை நாங்கள் புனர்வாழ்வு நிலையங்களில் வைத்திருக்கப் போவதில்லை.
தெரிந்தோ தெரியாமலோ முன்னர் தவறான வழிகளில் சென்றிருந்தவர்களில் மூன்று பிள்ளைகளுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தந்தையரான இளைஞர்களை கடந்த முறை நாங்கள் விடுதலை செய்தோம். இன்றைய தினம் 2 பிள்ளைகளுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தந்தையரான இளைஞர்களை நாங்கள் விடுதலை செய்கின்றோம். இவ்வாறு செய்வதனால் திருமணமாகாதவர்களை நாங்கள் விடுதலை செய்யமாட்டோம் என்று கருத வேண்டாம். அவர்களும் அடுத்தடுத்த முறைகளில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.
புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பெரும் தொகை பணத்தை மாதந்தோறும் செலவு செய்து வந்துள்ளது. புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்வாதாரத்திற்கான தொழில் பயிற்சிகளோடு பள்ளிப் படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் தமது படிப்பைத் தொடர்வதற்கான சந்தர்ப்பத்தையும் எற்படுத்தியிருந்தோம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பலர் இப்போது பல்கலைக்கழகத்தில் தமது கல்வியைத் தொடர்கின்றார்கள். இதேபோன்று விடுதலை பெற்று செல்பவர்களும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக இரண்டரை லட்சம் ரூபா வரையிலான கடனுதவிகளையும் நாங்கள் குறைந்த வட்டியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் இந்தக் கடனுக்கு முதல் வருடம் அவர்கள் வட்டி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன் மிகவும் குறைந்த வட்டி வீதத்திற்கே இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன.
எனவே பயிற்சி முடிந்து வீடுகளுக்குச் செல்பவர்களை நாங்கள் கைவிடமாட்டோம். அவர்களுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. ஆகவே விடுதலை பெற்று செல்பவர்களும் விடுதலையானவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்பவர்களும் இந்த நாடு எங்கள் நாடு இது பிரிக்கப்பட முடியாதது என்பதை மனதில் கொண்டு நாட்டினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்காகச் செயற்பட வேண்டும். பல தீய சக்திகள் உங்களை தவறான வழிகளில் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவத்றகாகக் காத்திருக்கின்றன. அந்தச் சக்திகளின் வலையில் நீங்கள் வீழ்ந்து விடக்கூடாது. என தெரிவித்தார் அமைச்சர் சந்திரசிறி கஜதீர.
இந்த நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இளைஞர் விவகாரம் மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா உட்பட பலரும் உரையாற்றினார்கள். நாடகம் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக