புதன், 1 ஜூன், 2011

வறுமையில் தற்கொலைசெய்யும் மக்களின் உயிர்களை புலம்பெயர் பணச்சேகரிப்பு காக்குமா?

வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நேற்று முன்தினம் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் புலிகள் இயக்க முன்னாள் பெண் உறுப்பினரான 21வயதுடைய லாவண்யா எனும் யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட இந்த புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினரான லாவண்யாவை அவளின் தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பம் கடந்த வன்னி இடப்பெயர்வின் பின்னர் மிகவும் வறிய நிலையில் சீவியம் நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை பாடசாலைக்கு போகும் நான்கு தம்பிகள். தாய்தான் கூலிவேலை செய்து குடும்பப் பொறுப்பை பார்க்க வேண்டிய நிலைமை.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை. மிகச்சிறிய குடிசையிலேயே அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்ப கஸ்டம், வீடு இல்லை இவ்வாறே மன விறக்தியும் வறுமையும் நிறைந்ததாய் வாழும் வளரும் காலத்தில் வாழ்க்கை நடத்திய லாண்யாவிற்கு தந்தையின் கண்டிப்பு மனமுடைந்து போயிருந்த இவளை இலகுவாக தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது.

யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டு இரு வருடங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில், சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் புலி உறுப்பினர்களும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரால் ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட்டுவரும் நிதியினில் கொஞ்சத்தையேனும் இவ்வாறான மக்களுக்கு கொடுத்து உதவாமல் புலிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட நிதியினை அதற்குப் பொறுப்பாக செயற்பட்ட பலர் சொகுசாக செலவுசெய்து வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறானோர் மனசு வைத்தால் எந்த வழியிலும் அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையச் செய்யலாம். அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதைவிட புலம்பெயர் நாடுகளில் உள்ள நிதியினை இவ்வாறான மக்களைச் சென்றடையவாவது ஏதும் வழிவகைகளை செய்வதற்கு புலம்பெயர் நாடுகளில் நிதிசேகரிப்போர் முன்வருவார்களா? அல்லது புலம்பெயர் தமிழர்கள் முன்வந்து இவ்வாறான குடும்பங்களின் துயர் போக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய அத்தியாவசிய கேள்வியாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக