வியாழன், 2 ஜூன், 2011

பொலிஸ் மா அதிபர் இராஜிநாமா


இலங்கையின் காவல்துறை தலைவர் மஹிந்த பாலசூரிய தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னார் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 250 பேர் காயமடைந்த நிலையில், நாட்டின் தலைமை காவல்துறை அதிகாரியான மஹிந்த பாலசூரிய தான் ஓய்வு பெறும் காலத்துக்கு முன்னரே விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி கோரியுள்ளார்.

தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து பரந்துபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருந்த ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து இந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த ஓய்வூதியத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தலைநகர் கொழும்புக்கு வெளியே இருக்கும் சுதந்திர வர்த்தக வலையத்தில் இடம்பெற்ற இந்த மோதல்கள் அதனால் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் அடுத்தே நாட்டின் தலைமை காவல்துறை அதிகாரியான மஹிந்த பாலசூரிய பதவி விலக முன்வந்துள்ளார்.

இந்த மோதலில் 15 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று அரசு கூறுகிறது.

காவல்துறை தலைவரின் பதவி விலகலைத்தவிர, இந்த வன்முறைகள் தொடர்பில் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவார்.

இந்த மோதல்களில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம் என்று அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் இயக்குநருக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தனியார் செய்தி சேவை ஒன்று கூறுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று ஹாங் காங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக