புதன், 22 ஜூன், 2011

அகற்றப்படவேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பே, ராணுவம் அல்ல

இராணுவமல்ல, தமிழ் மக்களே, தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை விரட்ட வேண்டும்!
வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
TNA-Press-600(1)அண்மையில் அளவெட்டியில் நடைபெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூட்டமொன்றில் இராணுவத்தினர் புகுந்து குழப்பம் விளைவித்ததாக, தமிழ் ஊடகங்களில் பெரும் எடுப்பில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்த விவகாரம் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களும் அகற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கையொன்றையும்  விடுத்துள்ளது.

வடக்கில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சிச்சபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தது போல இச்சம்பவத்தை கூட்டமைப்பினர் கொண்டாடி வருவது ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல. ஆனால் அதற்கும் அப்பால் சென்று, வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் எனக் கோருவது தமிழ் கூட்டமைப்பினரின் உள் நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.

புலிகளுடனான 30 வருட யுத்தம் முடிவடைந்து வெறுமனே 2 வருடங்கள் மட்டுமே கடந்துள்ள ஒரு சூழலில், வடக்கு கிழக்கின் பாதுகாப்பு என்பது இன்னமும் ஒரு பெரிய விடயமாக இருக்கையில், 

ஒரு சிறிய சம்பவத்தை வைத்துக் கொண்டு இராணுவத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற பெரிய கோரிக்கையை சாதாரணமாக எழுப்புவது, கூட்டமைப்பினரின் உள்ளாந்த நோக்கங்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளது. வடக்கு கிழக்கின் பாதுகாப்பு என்ற அடிப்படையில், அங்கு தவிர்க்க முடியாமல் ஒரு குறிப்பிட்ட காலம் இராணுவப் பிரசன்னம் இருக்கப்போவது தெளிவான ஒரு யதார்த்த நிலவரமாகும். இந்தச் சூழ்நிலையில் புலிகள் மேற்கொண்ட யுத்த்தின் தொடர்ச்சி போல, இராணுவத்துடன் தொடர்ந்தும் கூட்டமைப்பினர் மோதல் நிலைமையை உருவாக்கி வருவது, புலிகளின் கால நிலைமையை மீண்டும் கொண்டு வருவதற்கான கூட்டமைப்பினரின் திட்டமிட்ட செயல் என்ற கருத்து, அரச மட்டத்தில் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.

அளவெட்டியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை கூர்ந்து நோக்குகையில், இது தமிழ் கூட்டமைப்பினரின் திட்டமிட்ட ஒரு செயல்பாடு என்பது தெளிவாகிறது. அதாவது பாதுகாப்பு படையினரின் சீற்றத்தை முன்கூட்டியே கணித்து, பாதுகாப்பு படையினரின் அனுமதியைப்பெறாமல் கூட்டமைப்பினர் கூட்டத்தை நடாத்த முற்பட்டுள்ளனர் 

அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில், அரசியல் கூட்டமொன்றை நடாத்துவதற்கு பொலிசாரின் அனுமதியைப் பெறவேண்டுமென்ற சாதாரண விடயம் கூட்டமைப்பினருக்கு விளங்காத ஒன்றல்ல. இருந்தும் வேண்டுமென்றே கூட்டமைப்பினர் அனுமதியின்றிக் கூட்டத்தை நடாத்தியுள்ளனர். அனுமதி பெறுமாறு படைத்தரப்பால் எடுத்துக் கூறப்பட்டும் “நீ சொல்றதைச் சொல்லு, நான் செய்யிறதைச் செய்வேன்” என்ற பாணியில் கூட்டமைப்பின் அதி மேதாவிகள் நடந்து கொண்டுள்ளனர்.

ஆனால் அளவெட்டி சம்பவம் நடந்து, அனுமதி பெறாமல் கூட்டம் நடாத்திய விடயம் அம்பலத்துக்கு வந்து தமது தரப்பில் தவறு என்பதைக் கண்டதும், கூட்டமைப்பினர் இப்பொழுது கதையை மாற்ற முயல்கின்றனர். முதலில், பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட தமது கூட்டத்தில் இராணுவம் புகுந்து அராஜகம் புரிந்ததாகச் சொன்ன கூட்டமைப்பினர், பின்னர் சுமார் 20 பேர் மட்டும் கலந்து கொண்ட தமது கட்சி ஆதரவாளர்களின் ‘கலந்துரையாடலின்’ போது இராணுவம் அத்துமீறி புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக இப்பொழுது கூறுகின்றனர். அதாவது கட்சி உறுப்பினர்களின் சிறிய கலந்துரையாடல்களுக்கு பொலிஸ் அனுமதி தேவையில்லை என்ற வாதத்தை நிலைநாட்டவே, கூட்டமைப்பின் சட்டத்தரணி மூளைகள் இவ்வாறான வாதங்களை முன்வைக்கின்றன.

இதை எழுதும் போது, கடந்த பொதுத்தேர்தலின் போது நான் சந்தித்த டக்ளஸ் தேவானந்தாவுடன் முன்னர் ஒன்றாக வேலை செய்து, தற்பொழுது சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் அணியில் இருக்கும் ஒருவர் சொன்ன ஒரு கருத்து ஞாகத்துக்கு வருகின்றது. அவர் சொன்ன கருத்தின் பிரகாரம், கூட்டமைப்பினர் எவ்வாறு மக்களின் வாக்குகளை சுலபமாகக் கொள்ளையடிக்கின்றனா என்பதை இங்கு தெரிவிப்பது அவசியம். அவர் என்னிடம் கூறுகையில், “

அண்ணை தேவா (டக்ளஸ் தேவானந்தா) என்னதான் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பல சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தாலும், நாம் வந்து தமிழ் தேசியம் பற்றி உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் கூறியதும், முழு வோட்டுகளும் எமக்குத்தான் விழும்” என அவர் மிகச் சாதாரணமாகக் கூறினார்.

தமிழ் தேசியம் என்ற அபினியை ஊட்டி, எப்படி தமிழ் மக்களின் வாக்ககளை மட்டுமின்றி, வாழ்க்கையையே சூறையாடலாம் என்பது புலிகளுக்கு மட்டுமின்றி அவர்களது பினாமிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் நன்கு கைவந்த கலையாகும் என்பதையே அவரது கூற்று எடுத்தியம்புகின்றது. அதற்காக அவர்கள் தொடர்ச்சியாக அரசை வசைபாடி வருவது மட்டுமின்றி, இடையிடையே இராணுவத்துடனும் ‘சொறிந்து’ பாhர்க்கிறார்கள். அதிலும் விரைவில் உள்ளுராட்சித் தேர்தல் வரவிருப்பதால், இந்த அளவெட்டி சம்பவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் பல அளவெட்டி சம்பவங்களை தயக்கமின்றி உருவாக்குவார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நாம் இராணுவத்தின் செயல்பாட்டையும்  கண்டிக்கத்தான் வேண்டும். கூட்டமைப்பினர் அனுமதி பெறாமல் சட்டத்தை மீறி கூட்டம் நடாத்தினால், அதைக் கையாளவேண்டிய பொறுப்பு பொலிசாரின் கடமையாகும். அதைவிடுத்து பொலிசாருக்குரிய சிவில் கடமைகளில் இராணுவம் தலையிடுவது மக்களின் அவநம்பிக்கையைப் பெறுவதுடன், வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவுற்றும் இராணுவ நிர்வாகமே நடைபெறுகிறது என்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஐ.தே.க என்பனவற்றின் விசமப் பிரச்சாரத்துக்கும் அது எண்ணெய் ஊற்றுவதாக அமையும். அத்துடன் இராணுவம் பொலிசாரின் கடமைகளில் தலையிடுவதால், இரு பகுதியினருக்குமிடையில் தேவையில்லாத முரண்பாடுகளும் தோன்றும்.

உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுபோன்ற நிலைமைகளை  உருவாக்கி, அதை ஊதிப் பொரிதுபடுத்தி இலாபமீட்டலாம் என் எதிர்பார்த்திருந்த தமிழ் கூட்டமைப்பினருக்கு, இராணுவத்தின் செயலானது ‘ஜாக்பொட்’ பரிசு விழுந்தமாதிரி அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர்மீது விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இலங்கை இராணுவ உயரதிகாரிகள் தெரிவத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான முறையில் தீர்வு காண்பதில் எப்போதுமே நாட்டமில்லாத தமிழ் தலைமைகள், இப்படியான சம்பவங்களை வைத்தே கடந்த 60 வருடங்களாகத் தமிழ் மக்கள் மேல் தமது அரசியல் சவாரியைச் செய்து வந்துள்ளனர். புலிகளுக்கும் அப்போதைய ஐ.தே.க. அரசுக்கும் இடையில் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, 1987ல் இந்தியா தலையிட்டு யுத்தத்தை நிறுத்தியதுடன், இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலம் இணைந்த மாகாணசபை நிர்வாகத்தை உருவாக்கி, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வைக் கொண்டுவந்தது. முதலில் அதை ஏற்றுக்கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி, பின்னர் அந்த ஒப்பந்தம் காலத்துக்கு ஏற்றது அல்ல என நிராகரித்தது. இந்த நிராகரிப்புக்குப் பின்னணியில் புலிகள் இருந்தமை இரகசியமானதல்ல. பின்னர் சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தின் போது (2000ம் ஆண்டில்), இதுவரை முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் எல்லாவற்றையும்விட சிறப்பான ஒரு தீர்வுத் திட்டத்தை (ஏறத்தாழ சமஸ்டி அடிப்படையிலான) அவரது அரசாங்கம் முன்வைத்தது. அந்தத் தீர்வுத் திட்டம் தயாரிப்பதில்கூட பங்குபற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணி, பின்னர் அதிலிருந்து பின்வாங்கி, இனவாத ஐ.தே.கவுடனும் ஜே.வி.பியுடனும் கூட்டுச்சேர்ந்து அதை எதிர்த்தது. அதற்கும் புலிகளே பின்னணியில் இருந்து செயல்பட்டனர்.

இவ்வாறெல்லாம் செயற்பட்ட தமிழ் தலைமைகள், சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்க்கமாட்டா என்று பிரச்சாரம் வேறு செய்கிறார்கள். அவர்களது இந்த அப்பட்டமான பொய்ப்பிரச்சாரத்தை தமிழ் பொதுமக்களும் நம்புவதுதான் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் இவ்வாறு நம்புவதால்தான், தாம் எப்படியும் நடந்துகொள்ள முடியும் என்ற துணிச்சல், இந்த கூட்டமைப்பு மோசடிக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ளது.

இன்றும்கூட, இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக அரசுடன் பேச்சுவார்த்தையில் தமிழ் கூட்டமைப்பு ஈடுபட்டாலும், அதை எப்படியாவது குழப்ப வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றது. (மாட்டுக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவது போல, மாகாணசபைக்கு உரிய அதிகாரங்களைக் கோருவதற்குப் பதிலாக, வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டும் என கூட்டமைப்பு கோர ஆரம்பித்திருப்பது, பேச்சுவார்த்தையைக் குழப்பும் எண்ணத்துடன்தான்) தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு காணப்பட வேண்டும் என இதுவரை எந்தத் திட்டத்தையும் முன்வைக்காத தமிழ் கூட்டமைப்பு, அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், தீர்வுகாண மறுக்கிறது என்றும் மொட்டையாகப் பிரச்சாரம் செய்வதிலேயே நேரத்தைச் செலவிடுகிறது. இந்தப் போலிச் செயல்பாட்டின் மூலம், உண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாகத் துரோகம் செய்து வருகிறது என்பதே உண்மையாகும்.

இன்னொரு பக்கத்தில், நாட்டுக்கு பெரும் அழிவை ஏற்படுத்திய 30 வருடப்போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசைப் பாராட்டுவதற்குப் பதிலாக, ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த ஆலோசனைக்குழுவின் கபட நோக்கம் கொண்ட ‘மனித உரிமை மீறல்’ பற்றிய அறிக்கையை ஆதரித்ததின் மூலமும், தமிழக முதலமைச்சர் சட்டசபையில் நிறைவேற்றிய ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கையை  ஆதரித்ததின் மூலமும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது தேசத்துரோக நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
ஏகாதிபத்திய சக்திகளினதும், தமிழக விஸ்தரிப்புவாத சக்திகளினதும் நோக்கங்களை எவ்வித தயக்கங்களும் இன்றி வெளிப்படையாக ஆதரித்ததின் மூலம், தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னைய தமிழ் தலைமைகள் பின்பற்றிய அதே முதலாளித்துவப் பிற்போக்குப் பாதையிலேயே மாற்றமின்றித் தொடர்கிறது என்பது தெளிவாகிறது. அவர்கள் ஏககாலத்தில் தமிழினத் துரோகிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் செயற்படுகின்றனர். இவ்வாறான போக்கு தமிழ் மக்களை மேலும் மேலும் படுகுழிக்குள்ளேயே தள்ளிவிடும்.

எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு காலத்துக்குக்காலம் போடும் வேசங்களைக்கண்டு தமிழ் மக்கள் ஏமாறுவதையும், அவர்களுக்கு ஆதரவு வழங்குவதையும் நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் சுற்றிச்சுற்றி ஒரு பிரயோசனமும் அற்ற சுப்பற்றை கொல்லைக்குள் சுற்றுவதை இனியாவது ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப்போட்ட கதையாகவே அது போய்முடியும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

வருங்காலத்தில் இராணுவமோ பொலிசரோ அல்ல, மாறாக தமிழ் மக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்
.
http://thenee.com/
அகற்றப்படவேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பே, ராணுவம் அல்ல  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக