செவ்வாய், 7 ஜூன், 2011

ரவுடிகள் லிஸ்ட் தயார்: போலீஸ் அதிரடி,என்கவுண்டர்களை எதிர்பார்க்கலாம்

சென்னை உட்பட முக்கிய நகரங்களில் ரவுடிகள் லிஸ்ட் தயார்: போலீஸ் அதிரடி
rowdiesதமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், சட்டம் - ஒழுங்கு நிலையை சீரமைக்க, ரவுடிக்கும்பல்கள், கூலிப் படையினர் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோரையும், அவர்கள் பின்னணியையும் ஆய்ந்து பட்டியலிட்டு, அவர்களை, "உள்ளே' அனுப்பும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த கொலைகள், கொள்ளைகள், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ரவுடிகள் நடத்திய அராஜகம் ஆகியவற்றை, ஒவ்வொரு முறையும் பட்டியலிடப்பட்ட போதும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று தெரிவித்து வந்தது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெரும்பான்மை இடங்களை பிடித்து அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதற்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையில் தான், காவல் துறை தலைமைப் பொறுப்பாளரான டி.ஜி.பி., முதல் உதவி கமிஷனர்கள் வரை மாற்றப்பட்டு, காவல் துறையில் புத்துணர்ச்சியும், புதுமையும் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், அரசியல் கட்சி சிபாரிசுகள், காவல் துறை செயல்பாட்டில் இருக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.மேலும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றால், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள், அரசியல் பின்புலத்துடன் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கி வைக்க வேண்டியது கட்டாயம் என்பதை உணர்ந்த அரசு, அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, முக்கிய நகரங்களில் ரவுடிகள், வாரன்ட் இருந்தும் வெளியில் இருப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை பிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தேர்தலின் போது, அடாவடி செயல்களில் ஈடுபடாமல் இருக்க, அவர்களிடம் இருந்து உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ரவுடிகள் பட்டியலைத் தயாரிக்க, போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்த புதிய பட்டியல், பழைய பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தாலும், புதிதாக மேலும் பலரது பெயர் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.புதிய பட்டியலில் உள்ளவர்கள், தற்போது இருக்கும் இடம், அவர்கள் என்ன செய்கின்றனர், திருந்தி வாழ்வதாக உறுதியளித்துள்ளவர்களின் தற்போதைய நிலை என்ன, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்று விசாரிக்கப்படுகிறது.மேலும், ரவுடிகள் பட்டியலில் முக்கியமானவர்கள் எங்குள்ளனர், அவர்களுடைய முகவரி உண்மை தானா, கட்சி செல்வாக்கு உள்ளதா, கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் மீதுள்ள வழக்குகள், எந்தெந்தமுக்கிய நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்றுள்ளனர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெறலாம் என கருதப்படுகிறது.சென்னையில் புதிய கமிஷனராக திரிபாதி பதவியேற்றதும், அடுத்த சில தினங்களில், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, சென்னை மாநர நுண்ணறிவுப் பிரிவு போலீசார், புதிய பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏ பிளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளின் கீழ், 40க்கும் மேற்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 2,000 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 430க்கும் மேற்பட்டோர், "ஹிட் லிஸ்ட்' ரவுடிகளாக இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில், ஏற்கனவே சிறையில் உள்ளவர்கள் தவிர, வெளியில் இருந்து கொண்டு, குறிப்பாக சென்னைக்கு வெளியில் இருந்து கொண்டு, அவ்வப்போது நகருக்குள் வந்து தங்கள் சமூக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை பிடித்து, அவர்களை, " உள்ளே' அனுப்பவும், போலீசார் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.இதே போல், மாநிலம் முழுவதும் உள்ள சமூக விரோதக் கும்பல்களை களையெடுக்க, போலீஸ் தலைமையகம் முடிவெடுத்துள்ளது. இதற்கிடையில், பட்டியல் தயாரிப்பதையும், நடவடிக்கை எடுப்பதையும் அறிந்த முக்கிய ரவுடிகள் சிலர், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு, வெளி மாநிலங்களில் இருப்பவர்களையும் அவர்கள் நடவடிக்கைகளையும் கண்காணிக்க உள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், ஒளிவு மறைவு மற்றும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், தமிழக போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு கிடைப்பதுடன், சட்டம் - ஒழுங்கை பாதுகாத்த பெருமையும் கிடைக்கும்.
என்கவுண்டர்களை எதிர்பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக