சனி, 25 ஜூன், 2011

காத்தான்குடியில் மதவாதிகளால் பெண்கள் தாக்கப்பட்டார்கள்

காத்தான்குடி: பள்ளிப்பெண்கள் தடுத்துவைப்பு
- B.B.C
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில், செவ்வாய்க்கிழமை , காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் பள்ளிப் பெண்கள், தனியார் இணைய மையம் ஒன்றில் ஆபாச படத்தைப்பார்த்ததாகக் கூறி, காத்தான்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து, அவர்களை தடுத்து வைத்து தாக்கியதாகவும், பின்னர் அவர்களை காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள் வந்தன.

இது குறித்து காவல்துறைக்காகப் பேசவல்ல அதிகாரி ப்ரஷாந்த் ஜெயக்கொடி அவர்களைத் தொடர்பு கொண்டு பிபிசி தமிழோசை கேட்டபோது, அவர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மட்டக்களப்பு காவலர்கள் மீட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், அவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், வழக்கு ஒன்று பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களைத் தேடிவருவதாகவும் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் நடந்த இச்சம்பவம்குறித்து, காத்தான்குடியைச் சேர்ந்தவரும், இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத் துணை அமைச்சருமான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களைத் தமிழோசை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தப் பிரச்சினையில்உண்மையில் பெண்கள் தாக்கப்பட்டார்களா என்பது தனக்குத் தெரியாது, ஆனால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இந்த பெண்களிடம் கேள்விகள் கேட்டதாகவும், இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தாம் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

உண்மையில் பெண்கள் அந்த மாதிரி காரியங்களில் ஈடுபட்டாலும், அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது, காவல்துறை அதிகாரிகள்தானே தவிர மற்றவர்கள் அல்ல, தனி நபர்கள் இந்த விஷயத்தில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
ஆனால் இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையாகப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக