சனி, 25 ஜூன், 2011

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம்


எழுதும் அனுபவத்தொடர் (2)
2. எதிர்பாராத அழைப்பு
இங்கு நான் எழுதப்போகும் வரலாறு 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் திகதி ஆரம்பிக்கின்றது. அதாவது கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள்.

18 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சரியான தகவல்களுடன் தரமுடியுமா எனச் சிலர் கருதக்கூடும். உண்மைதான். உலகம் போகிற வேகத்தையும், நடக்கும் சம்பவ வரிசைகளின் அணிவகுப்பையும் பார்த்தால், நேற்று நடந்ததையே நாம் இன்று மறந்துவிடுகிற காலமிது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் துயரமான இந்த வரலாற்றுச் சம்பவங்கள் என்றுமே மறக்கக் கூடியவை அல்ல. அதுமாத்திரமின்றி தமிழ் சமூகத்தில் எனக்கு மட்டுமின்றி மேலும் பலருக்கு நிகழ்ந்த இந்த அவலங்கள் என்றோ ஒருநாள் வரலாற்றின் பக்கங்களில் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக, முடியுமானவரை அவற்றின் குறிப்புகளை ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்தேன். எனவே சில வேளைகளில் ஒருசில சம்பவங்கள் மறந்துவிட்டிருந்தாலும், அவற்றக்குப் பதிலாக இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை ஒருபோதும் புகுத்தமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

அது ஒரு வியாழக்கிழமை. நேரம் பிற்பகல் 3 மணியிருக்கும்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில,; ஆரியகுளம் சந்திக்கு சமீபமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எதிராக, நான் நிர்வகிக்கும் யாழ் புத்தக நிலையத்திலிருந்து, மிக அருகாமையில் அத்தியடி புது வீதியில் அமைந்திருந்த எனது வீட்டுக்கு மதிய உணவிற்காகச் சென்றேன்.

இந்த இடத்தில் இந்த யாழ் புத்தக நிலையம் பற்றியும் சிறிது சுருக்கமாகச் சொல்லிவிடுவது அவசியமானது. இந்தப் புத்தகக்கடை 1963ல் உருவானது. இது வெறும் வியாபார நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்றல்ல. 1963ல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏறபட்ட போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் அந்தப்பிளவு தோன்றியது. சோவியத் சார்பு – சீன சார்பு என ஏற்பட்ட அந்தப்பிளவில், சீன சார்பான கட்சி அணியினரின் பிரச்சார வெளியீடுகளை விநியோகிக்கவும், ‘கோஸி சூடியன்’ என அழைக்கப்படும், சீன சர்வதேச புத்தக வர்த்தக நிறுவனம் அனுப்பும் நூல்களை விநியோகிக்கவுமே இந்தப் புத்தக நிலையம் அமைக்கப்பட்டது.

எமது சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு, 1972ல் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் கட்சி வேலைகளைச் செய்வதற்காக வரும்படி கட்சி என்னை அழைத்தது. எனவே 1966ம் ஆண்டுமுதல் வன்னிப்பிரதேசத்தில் விவசாயிகள் மத்தியில் நான் மேற்கொண்டிருந்த கட்சி – வெகுஜன வேலைகளை ஏனைய தோழர்களிடம் ஒப்படைத்துவிட்டு, யாழ்ப்பாணம் வந்து வேலைகளைப் பொறுப்பெடுத்தேன். அந்த வேலைகளில் ஒன்று இந்த யாழ் புத்தக நிலையத்தை நிர்வகிப்பதாகும். பின்னர் நாம் உருவாக்கிய ‘நொதேர்ண் பிறின்ரேர்ஸ்’ அச்சகத்தையும் நானே நிர்வகித்தேன்.

இதுதவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1975ல் நிறுவப்பட்ட பின்னர், பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் முற்போக்கான அரசியல் - கலாச்சார வேலைகளை முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த, அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், அதன் அருகில் ஒரு புத்தகக் கடையை அமைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற நான் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் சேர்.பொன்.இராமநாதன் வீதியில், குமாரசாமி வீதி தொடங்கும் இடத்துக்கு அண்மையில், 196ம் இலக்கக் கட்டிடத்தில் ‘யூனிவேர்சல் றேட்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்தேன்.

அந்த இடத்தை எனக்கு பெற்று உதவியர், அப்பொழுது யாழ்.பல்கலைக்கழகத்தில் கணிதபீட விரிவுரையாளராக இருந்த நண்பர் (இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் இங்கிலாந்தில் தனது கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்) ஒருவராவார்.

இந்த இரு புத்தக நிலையங்களைப் பற்றியும் எமது அச்சகத்தைப் பற்றியும் இங்கு பிரஸ்தாபிப்பதின் காரணம், இவை யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் வரலாற்றில் வேறு எந்த நிறுவனங்களையும் விட அதிக பங்களிப்பு செய்ததுடன், நான் எழுதுகின்ற இந்த வரலாற்றுத் தொடருடன் அவை சம்பந்தங்களையும் கொண்டிருப்பதும் ஆகும். அதுபற்றி பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்பாணத்தில் டிசம்பர் மாதம் என்பது பருவ மழைக்காலத்துள் உள்ளடங்கிய ஒன்று. சில வேளைகளில் வீசும் காற்றில் சில்லென்ற குளிர் உள்ளுற உறைந்து நிற்கும். ஆனால் இந்த டிசம்பர் பின்மாலைப்பொழுது சற்று உஸ்ணமாக இருந்தது. அது சில வேளைகளில் அன்றைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் வீசிய அரசியல் அனல்காற்றின் வெப்பத்தை உள்வாங்கி இருந்ததோ என்னவோ?

நான் மதிய உணவு அருந்தச்சென்ற அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக முன்னொருபோதும் என்வீட்டுக்கு வந்திராத இருவர் என்னைக்காண வந்திருந்தனர். ஒருவர் எனது நண்பரான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆங்கில ஆசிரியராவார். அவர் தமிழ் தேசியவாதத்தின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்றபோதிலும், குருட்டுத்தனமாக அதை ஆதரிப்பவர் அல்ல.

இன்னொருவர் எனது சொந்த ஊரான இயக்கச்சி பகுதியிலுள்ள முகாவில் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ரெலோ இயக்கத்தில் ஒரு முக்கிய போராளியாக இருந்தவர். புலிகள் 1986ல் ரெலோ இயக்கத்தை தடைசெய்தபோது, பல இடங்களில் அந்த இயக்கத்தின் போராளிகள் பலரை குற்றுயிரும் குறையுயிருமாக பகிரங்க இடங்களில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறான கொடும்செயலுக்கு உள்ளாக்கப்படுவதற்காக எமது ஊரைச்சேர்ந்த அந்த இளைஞனும் மல்லாகத்தில் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதை அறிந்த அவரது தகப்பனார் எனது உதவி கோரி என்னிடம் வந்து கண்ணீர் வடித்தார். நான் புலிகள் இயக்கத்தில் அப்பொழுது அவர்களது ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற ஒருவரை அணுகி அந்த இளைஞனை உயிர்தப்ப வைத்திருந்தேன்.

அந்த இருவருடனும் பல்வேறு விடயங்கள் குறித்து அளவளாவினோம். குறிப்பாக இந்திய அமைதிப்படை 1990ல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், புலிகள் தமிழ் பகுதிகளில் நடாத்தி வந்த நரபலி வேட்டை குறித்து விசனத்துடன் உரையாடினோம். அதன்பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்ற பின்னர் மீண்டும் யாழ் புத்தக நிலையம் செல்வதற்குத் தயாரானேன். பிறந்து 16 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த எனது மகள், எம்முடன் தங்கியிருந்த எனது மனைவியின் தகப்பனாரின் மடியில் இருந்துகொண்டு எனக்கு கைகளை அசைத்து விடை தந்தாள்.

நான் மதிய உணவிற்கு செல்லும்போது, கடையில் பொறுப்பாக தவராசா என்ற முதிய தோழர் ஒருவரை விட்டுச் சென்றிருந்தேன். இந்தத் தோழர் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் நடத்துனராக (கொண்டக்ரர்) இருந்து ஓய்வுபெற்றவர். இவரது குடும்ப வரலாறு மிகவும் சோகம் நிறைந்தது. உடுப்பிட்டியைச் சேர்ந்த இவர் உரும்பிராயில் திருமணம் செய்திருந்தார். மனைவி வாய்பேச முடியாதவர். அவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் ஆக மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் மூவருமே வாய்பேச முடியாதவாகள்.

மகன்களில் ஒருவர் யாழ்.சின்னக்கடைப் பகுதியில் கடைச்சல் பட்டடை ஒன்றில் வேலைசெய்து வந்தார். ஒருநாள் அவர் வேலைக்குச் செல்லும் வழியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் திடீர் மோதல் ஒன்று நிகழ்ந்தது. அதில் அகப்பட்டுக்கொண்ட அவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி அந்த இடத்திலேயே மரணித்தார். இன்னொரு மகன் புலிகளுக்கு எதிரான இயக்கமொன்றுடன் தொடர்புள்ளவர் எனக்கூறி, புலிகள் அவரைத் தேடிவந்தனர். ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளையில், அதை எப்படியோ அறிந்துகொண்ட புலிகள் வீடு தேடி வந்துவிட்டனர். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அவரை சாப்பாட்டுக் கோப்பையுடன் வீட்டு முற்றத்துக்கு இழுத்துவந்து, பெற்றோர் சகோதரிக்கு முன்னால் சுட்டுப் படுகொலை செய்தனர். மகன்கள் இருவரும் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியில் தோழா தவராசாவின் மனைவியும் சிறிது நாட்களில் மரணித்துவிட்டார்.

அதன்பின்னர் தவராசாவும் அவரது வாய்பேசமுடியாத மகளும் உரும்பிராயில் மிகவும் கஸ்டமான ஒரு சூழலில் வாழ்ந்துவந்தனர். கடுமையான ஆஸ்த்மா நோய் காரணமாகவும், முதுமை காரணமாகவும் அவரால் எந்தவொரு தொழிலையும் செய்ய முடியாத நிலையில், அவரது மகள் தான் கற்றிருந்த மணப்பெண் அலங்காரத் தொழிலில் இடையிடையே கிடைக்கும் வருவாயிலேயே அவர்களது வாழ்க்கை ஒருவாறு ஓடியது. அவர் தனது மன வேதனைகளை ஆற்றுவதற்காகவும், அரசியல் விவகாரங்களைக் கலந்துரையாடுவதற்காகவும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் எமது புத்தகக்கடைக்கு வந்துவிடுவார்.

இந்த நிலைமையில், அன்றும் அவரை புத்தகக்கடையில் விட்டுவிட்டே வீடு சென்றிருந்தேன். திரும்பவும் நான் புத்தகக்கடைக்கு சென்றபொழுது, எமது கடைக்கு முன்னால் இளைஞன் ஒருவன் சைக்கிளுடன் நிற்பது தெரிந்தது. தூரத்திலிருந்து நான் இதை அவதானித்தாலும், அவன் நின்ற நிலை, எதையோ அவன் எதிர்பார்த்து நின்றது போன்ற ஒரு தோற்றப்பாட்டை, எனது மனதில் உருவாக்கியது.

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக