செவ்வாய், 21 ஜூன், 2011

சாயி பாபாவின் உயில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

இறுதி விருப்பம் அடங்கிய ஆவணத்தையும் சத்திய சாயி மத்திய நம்பிக்கையகம் கண்டெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகவான் சத்திய சாயி பாபாவின் ஆச்சிரமமான பிரசாந்தி நிலையத்திலுள்ள அவரின் தனிப்பட்ட அறையான யசுர்வேத மந்திரின் கதவுகள் திறக்கப்பட்டமையை பூட்டி வைத்த பூதம் வெளிக்கிளம்பியமை போன்றதுடன் ஒப்பிட்டு இந்திய ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாரியளவு தங்கம், வெள்ளி, பணம் என்பவற்றுடன் பாபாவின் நாட்குறிப்பையும் இறுதி விருப்பம் அடங்கிய ஆவணத்தையும் சத்திய சாயி மத்திய நம்பிக்கையகம் கண்டெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையகத்திற்குள் முறுகல்களை அதிகரிக்கச் செய்யும் விதத்திலான விடயங்கள் பாபாவின் நாட்குறிப்பிலும் இறுதி விருப்ப ஆவணத்திலும் இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சாய்பாபாவின் நீண்ட கால பராமரிப்பாளர் சத்திய ஜித்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக அந்த இறுதி விருப்பம் அமைந்துள்ளதாக நம்பிக்கையகத்தின் ஒரு குழுவினர் கூறுகின்றனர். அதேசமயம் அத்தகைய இறுதி விருப்ப ஆவணம் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை மற்றைய குழுவினர் மறுத்துள்ளனர். எதிர்காலத்தில் சத்திய ஜித்தின் பங்களிப்பு தொடர்பாக ஜூன் 14, 15 இல் இடம்பெற்ற நம்பிக்கையகத்தின் இருநாள் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சத்தியஜித்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமென்பதற்க ஆதரவான நிலைப்பாட்டை நம்பிக்கையகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் இந்திய உயர்நீதிமன்ற நீதியரசருமான பி.என்.பகவதி கொண்டிருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போது மன வருத்தம் அடைந்த பகவதி நம்பிக்கையகத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அவரை சாந்தப்படுத்தி அவரின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு தூண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில சிரேஷ்ட உறப்பினர்கள் கடும் விசனமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு புட்டபர்த்தியைவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. சத்தியஜித்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதால் அவர் வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

35 வருடகாலம் சாயி பக்தராக இருந்த உறுப்பினர் ஒருவர் புட்டபத்தியிலுள்ள அவரின் அலுவலகம் வேவுபார்க்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதாகவும் அதனால் அவர் பிரசாந்தி நிலையத்தை விட்டு வெளியேறியிருக்கக்கூடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாதிரியான பூசல்களால் அதன் நிர்வாக சபை கலைக்கப்படும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. அல்லது அதிலுள்ள வயது முதிர்ந்த உறுப்பினர்கள் ஓய்வுபெறுவதற்கு இடமளிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் ஒருவருக்கு மட்டும் முழுமையான கட்டுப்பாட்டை வழங்கும் சாத்தியம் காணப்படவில்லை. நம்பிக்கையக உறுப்பினர்களுக்கு தனித்தனியே விசேட நடவடிக்கைகள் அல்லது கையாளுவதற்கான சேவைத் திட்டங்களை வழங்கக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இதன் மூலம் தனிப்பட்ட ஒருவருக்கு அதிகாரங்கள் குவிந்திருப்பதைத் தடுக்க முடியுமென வட்டாரமொன்று தெரிவித்தது.
இதேவேளை, சாயி நம்பிக்கையகத்தின் வாகனம் ஒன்றை 25 இலட்ச ரூபா பணத்துடன் கைப்பற்றியுள்ளனர். சத்திய சாயி நம்பிக்கையக வாகனத்தைக் கோட்டிகொண்டா காவலரணில் வைத்து சனிக்கிழமை இரவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த வாகனத்திலிருந்த இருவரைக் கைது செய்ததுடன் 35 இலட்ச ரூபா பணத்தையும் மீட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக