சென்னை, ஜூன் 11: 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தி.மு.க.வின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுவது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஜூலை மாதம் பொதுக்குழு கூடும், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸூடனான கூட்டணியில் பாதிப்பு இல்லை என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது கருணாநிதி கூறினார். ஆனால், காங்கிரஸூடனான உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், சில தயக்கங்களே அதைத் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. கருணாநிதி தயார்: கனிமொழி கைது செய்யப்பட்டது, தேர்தல் தோல்வி உள்பட பல காரணங்களால் காங்கிரஸூடனான உறவை முறித்துக் கொள்ள கருணாநிதி தயாராக இருக்கிறாராம்.ஆனால் தி.மு.க.வின் வழக்கப்படி அவர்களாக ஒரு கட்சியோடு கூட்டணி உறவை முறித்துக் கொள்ளமாட்டார்கள். அதேவேளையில் விலகல் அறிவிப்பை கூட்டணிக் கட்சி அறிவிப்பதற்கான வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டே இருப்பார்கள். அதன் அடையாளமாகத்தான் "கூடா நட்பு' என்கிற வார்த்தை கருணாநிதியால் உபயோகிக்கப்பட்டு, அதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இரா.அன்பரசு போன்றோர் எதிர்த்து குரல் கொடுத்ததும். இதுபோன்ற குத்தல் வார்த்தைகள் இன்னும் தொடரும் என்று சொல்லப்படுகிறது. தயங்குவதற்கு காரணம்: கருணாநிதியைப் பொறுத்தவரை கூட்டணியிலிருந்து உடனடியாகக்கூட விலகத் தயாராக இருக்கிறாராம். ஆனால் தி.மு.க. எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகள்தான் கூட்டணி முறிவைத் தள்ளிப்போட வைப்பதாகச் சொல்லப்படுகிறது. மத்திய அரசின் ஆட்சிக் காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. அலைக்கற்றை ஊழல் வழக்கில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுவதால் அவர் பதவி விலகினால் அவருடைய பதவியை அடைவதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் ஆசைப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதைப்போல, அமைச்சரவையில் இருந்து விலகினால் அ.தி.மு.க. அரசால் அழகிரி மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பில் கருத்துச் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பது மத்திய அமைச்சரான மு.க.அழகிரிதான் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களாலே கூட்டணி விலகல் தள்ளிப்போகிறது என்கின்றனர். காங்கிரஸின் போக்கில் தி.மு.க.வினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகவேத் தெரிகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மூலம், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று அறிக்கை விடச் செய்ததே தி.மு.க. தலைமைதான் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.விடம் இருந்து பணம் பெற்றபோதும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தி.மு.க. பெரும் பணம் செலவழித்தபோதும் இப்போது கசப்பது ஏன்? வைகோவைத் தோற்கடித்தாக வேண்டும் என்பதைத் தென் மண்டல பொறுப்பாளர் மு.க.அழகிரி ஒரு கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு செலவழித்திருக்காவிட்டால், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாக்கூர் வெற்றி பெற்றிருக்க முடியுமா? இப்போது அவர்களெல்லாம் யோக்கியர் போலவும் நாம் எல்லாம் ஊழல் பேர்வழிகள் போலவும் பேசுகிறார்களே, இது என்ன நாடகம்? நாம் காங்கிரûஸத் தோலுரித்து காட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பல மூத்த தி.மு.க. தலைவர்களே வலியுறுத்தியதாகத் தெரிகிறது.கனிமொழி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த முடிவுக்காகத்தான் தி.மு.க. தரப்பில் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் காங்கிரஸூடனான உறவை தி.மு.க. முறித்துக் கொள்ளும். மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக