சென்னை மாணவி கர்நாடகாவில் மீட்பு
சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு புதுச்சேரி மாணவி கடத்தப்பட்டார். அவரை போலீசார் கர்நாடக மாநிலத்தில் மீட்டனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி புதுச்சேரி கொம்யூன் பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில்,
என் மகள் பிரியா (வயது 19- பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.-ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி மாலை 6.15 மணிக்கு என்னுடைய மகள் கடைசி தேர்வை முடிந்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருப்பதாக செல்போனில் கூறினார். பின்னர் இரவு 7.45 மணிக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது வேறு யாரோ ஒரு நபர் அதில் பேசினார்.
அவர் `உன் மகளை கடத்தி வைத்திருக்கிறேன். ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால்தான் உனது மகளை உயிரோடு பார்க்க முடியும்'' என்று மிரட்டினான். மீண்டும் இரவு 11.30 மணிக்கும், 8-ந் தேதி காலை 10.40 மணிக்கும் அதே ஆசாமி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். கடத்தப்பட்ட என்னுடைய மகளை மீட்டு தர வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
கடத்தப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் என்ற இடத்தில் பிரியாவை கடத்தல்காரர்கள் அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் விரைந்தனர்.
போலீசார் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் பிரியாவை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். துணைக்கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், பிரியா அடைத்து வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்து அவரை மீட்டனர்.
அப்போது போலீசாரிடம் பிரியா,சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரபுவுடன் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக் கொள்வோம்.
கடந்த 7-ந் தேதி நான் கடைசி தேர்வை முடித்துக் கொண்டு புதுச்சேரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். இந்த விவரம் பிரபுவுக்கு தெரியும். மாலை 5 மணிக்கு நான் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று பிரபுவை சந்திதேன்.
அப்போது பிரபு என்னிடம், ``எனக்கு அவசரமாக ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. உனது தந்தையை மிரட்டி பணம் பறிக்க போகிறேன்'' என்றார். இதற்கு நான் உடன்படவில்லை. `இதற்கு நீ உடந்தையாக இருக்கவில்லை என்றால், பெங்களூரில் உள்ள உன் அண்ணன் பிரேம் ஆனந்தை கொலை செய்து விடுவேன்'' என்று பிரபு மிரட்டினார். இதனால் நான் பயந்து விட்டேன்.
என்னை பிரபுவும், அவருடைய நண்பரும் மைசூருக்கு பஸ்சில் கடத்திக் கொண்டு சென்றனர். அங்கு என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து என் தந்தைக்கு போன் செய்யுமாறு துன்புறுத்தினார்கள். 9-ந்தேதி அங்கிருந்து கொள்ளேகாலுக்கு கடத்தி வந்தனர். போலீசார் எங்களை நெருங்கியதால் என்னை கொள்ளேகால் என்ற இடத்தில் விட்டு சென்று சென்றனர்’’ என்று கூறினார்
இதை தொடர்ந்து பிரியாவைக் கடத்தி சென்ற பிரபு மற்றும் அவருடைய நண்பரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்னை மாணவி கடத்தப்பட்டு மீட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக