சனி, 4 ஜூன், 2011

இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-திக்விஜய்

டெல்லி: கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. ஆனால், தனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இப்போது பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது. ராம்தேவின் போராட்டத்துக்கு பந்தல் அமைப்பதில் ஆரம்பித்து, உண்ணாவிரத மையத்துக்கு ஆட்களைக் கூட்டி வருவது வரை எல்லா வேலைகளையும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தான் பார்த்து வருகின்றனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது, இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியே ஆர்எஸ்எஸ் தான். உண்ணாவிரத்ததில் எங்கும் எதிலும் ஆர்எஸ்எஸ் மயமாகவே உள்ளது.

பாபா யோகா கற்றுக் கொடுத்தால் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால், அரசியல் செய்தால்.. முதலில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்.

முதலில் அவர் ஒழுங்காக யோகா சொல்லித் தருகிறாரா என்பதிலேயே சந்தேகம் உள்ளது. அவரது யோகா முறைக்கு பல யோகா விற்பன்னர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையும் நாம் மறக்கக் கூடாது.

இந்த உண்ணாவிரதத்துக்கு எவ்வளவு ஏற்பாடுகள் பாருங்கள், எவ்வளவு செலவு.. இந்த உண்ணாவிரத்தில் ஆடம்பரமே முன் நிற்கிறது. கிட்டத்தட்ட 'இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்'. இதனால் என்ன பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கிறோம் என்பது கூட அவருக்கு சரியாகத் தெரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

அன்னா ஹசாரே போன்ற உண்மையிலேயே மக்களுக்காக பாடுபடும் தலைவர்கள், ராம்தேவுடனான தொடர்பை துண்டிக்குக் கொள்ள வேண்டும் என்றார்.

ராம்தேவ் உண்ணாவிரதம் நடத்தலையே..மத்திய அரசு:

இதற்கிடையே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வாங்கவில்லை என்றும், அவர் யோகா கிளாஸ் நடத்தவே அனுமதி வாங்கியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் யோகாவுக்கு அனுமதி வாங்கிவிட்டு உண்ணாவிரதம் நடத்துவது ஏன் என்று கேட்டு டெல்லி போலீஸ் மூலம் ராம்தேவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ராம்தேவுடன் கேட்டதற்கு, யோகா என்றால் என்ன என்று போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். அகிம்சை, உண்மையை சொல்வது, திருடாமல் இருப்பதும் யோகாதான் என்றார்.

அதே நேரத்தில் ராம்தேவின் உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய, அவரது தரப்புடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு:

இந் நிலையில் ராம்தேவ் விவகாரம், கறுப்புப் பணப் பிரச்சனையில் மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து விளக்கமளித்தார்.

40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது மன்மோகன் சிங் சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயண விவரங்கள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கினார்.

பின்வாங்கும் அன்னா ஹசாரே:

இந் நிலையில் ராம்தேவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது குறித்து நாளை டெல்லிக்கு வந்த பின்னரே முடிவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

காஸ்ட்லி உண்ணாவிரதம்-மேதா பட்கர்:

இந் நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்கு அயராது உண்ணாவிரதப் போராட்டங்கள் பல நடத்திய சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டம் அதிக செலவிலான ஒன்று. இதுபோன்று செலவு பிடிக்கும் போராட்டங்கள், போராட்டத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. நாம் ஊழலை எதிர்க்கிறோம். ஆனால் பல கோடிகளை செலவழித்து, இதுபோன்ற அதிக செலவாகும் போராட்டம் நடத்தப்படுகிறது.

பாபா ராம்தேவ் போராட்டம் வெறும் கூட்டத்தை திரட்டும் ஒன்றாக முடிந்து விடும் ஆபத்து இருக்கிறது. முதலாளித்துவ கொள்கைதான் கறுப்பு பணத்துக்கு காரணம் என்றார்.

English summary
Stepping up his attack on Baba Ramdev, Congress General Secretary Digvijay Singh alleged that RSS was behind the yoga guru's indefinite fast. Frowning upon the protest action by the Baba, Singh agreed with a questioner that the Yoga guru was playing politics. "If you want to teach yoga, I have no problem, but if you want to do politics, then join the fray".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக