வெள்ளி, 24 ஜூன், 2011

Sathya sai Trust 16 அரசு சலுகைகள் ரத்தாகிறது!

ஐதராபாத்: புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கடத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சாய்பாபா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்ப பெற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து கார், பஸ்சில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாய் அறக்கட்டளை மற்றும் ஆசிரம நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால் சாய்பாபா அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

காரில் ரூ.35 லட்சம் கடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இப்பிரச்னை தொடர்பாக தலைமை செயலாளர், நிதி மற்றும் வருமானத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். சாய்பாபா மறைவுக்கு பிறகு, புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடக்கும் சம்பவங்கள், சர்ச்சைகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கும் பட்சத்தில், சாய் அறக்கட்டளைக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசின் இந்த முடிவு, சாய் அறக்கட்டளை சார்பில் நடக்கும் மருத்துவமனை, பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு தொண்டுகளை முடக்குவதற்காக அல்ல. அறக்கட்டளையின் செயல்பாடுகளை வெளிப்படையாக்கவே இத்தகைய உத்தரவு போடப்பட்டுள்ளது. சத்யசாய் தலைமை அறக்கட்டளை, சத்யசாய் உயர்கல்வி நிறுவனம், சத்யசாய் பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாய் ரேடியோ, சர்வதேச சத்யசாய் அமைப்பு, சத்யசாய் சேவை அமைப்பு, சாய் சாதனா சமிதி ஆகியவற்றுக்கு நிதி முதல் நிர்வாகம் வரை 16 முக்கிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாட், கட்டிட வரி, வணிக வரி ஆகியவற்றில் விலக்கு, மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கருவிகளை இறக்குமதி செய்வதில் வழங்கிய சலுகைகள், குறைந்த மின்கட்டணம் போன்ற சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்து கோயில் மற்றும் அறக்கட்டளைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகள் மட்டும் திரும்ப பெறப்படுகின்றன. வரவுசெலவு கணக்கு குறித்த அறிக்கையை இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாநில அரசிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். சொத்து விவரங்களை வெளியிடுவதும் கட்டாயமாகிறது. அரசு தணிக்கை, அரசு அதிகாரிகளின் கண்காணிப்பு, ஆண்டு லாபநஷ்ட கணக்கை சமர்ப்பிப்பது, அறக்கட்டளையின் நிலம், சொத்துகள் உள்ளிட்டவற்றை அரசுக்கு தெரிவிக்காமலே விற்பது ஆகியவை தொடர்பான சலுகைகளும் திரும்ப பெறப்படுகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சாய்பாபா அறக்கட்டளை கோரிக்கையின் பேரில், 1970களில் வெங்காலராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த சலுகைகளை அறக்கட்டளைக்கு வழங்கியது. தற்போது பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் அறக்கட்டளை உள்ளது. எனவே இந்த சலுகைகள் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அறக்கட்டளையிடம் இருந்து அறிக்கை கிடைத்தபின் இந்த முடிவு அமலாகும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக