வெள்ளி, 6 மே, 2011

Swiss Bank கள்ளத்தனமாக, சட்டத்திற்கு விரோதமாகப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை

30 லட்சம் வருமானம் தாக்கல் செய்யும் ஒருவரின் வரி எவ்வளவாக இருக்கும்? எவ்வளவு இருந்தாலும், 30 லட்சத்திற்குமேல் இருக்க முடியாது இல்லையா. ஆனால் ரூ.50,00,00,00,00,000 (ரூ.50,000 கோடி) என்று வருமான வரி நோட்டீஸ் அனுப்பினால் எப்படி இருக்கும்?
ஹசன் ஹலி கான். இந்தக் கதையின் முதல் கதாநாயகன். பூனேயின் குதிரைப் பந்தய மைதானங்களில் எல்லோராலும் பார்க்க முடிந்த இவரைத் தான் 2006லிருந்து வருமான வரித் துறை ‘தேடிக் கொண்டிருந்தது’.
‘அப்பாவி’ ஹசன் ஹலி செய்த குற்றம், சுவிஸ் வங்கிகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து $8 பில்லியனுக்கும்மேல் வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். காரணம் – வருமான வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், ஆயுத பேரங்கள், சிக்கலான, உலகளாவிய நெட்வொர்க் – மற்றும் அது சார்ந்த டீல்கள். இது ஒரு பக்கம்.

கறுப்புப் பணத்தினை பட்டுவாடா செய்த முறை.
ஜனவரி 20, 2011. பாராளுமன்றமே அமளி துமளியானது. எல்லா பிரதான எதிர்க்கட்சிகளும் கேட்ட ஒரே கேள்வி: சுவிஸ் வங்கியில் கள்ளத்தனமாக, சட்டத்திற்கு விரோதமாகப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை, பொதுவெளியில் சொல்லுங்கள் பிரதமரே! நாட்டுக்கு நேர்மையாக சேரவேண்டிய பணத்தினை வெளிநாட்டு வங்கிகளில் ஒளித்து வைத்திருக்கும் கயவர்களின் முகமூடியினைக் கிழிப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்!
பிரதமரான மன்மோகன்சிங் சொன்ன பதில்: நாம் சுவிஸ் வங்கியுடன் ரகசியப் பரிவர்த்தனை (confidentiality agreement) செய்துள்ளதால்தான் அவர்கள் பெயர்களைத் தந்திருக்கிறார்கள். சரியான சமயத்தில் விசாரணைக்குப் பிறகு பெயர்களை வெளியிடுவோம்.
இவ்வளவு கூச்சல், குழப்பத்துக்கும் காரணம் இந்த எண். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்த்துவைத்துள்ளதாக நம்பப்படும் கறுப்புப்பணம்: $462 பில்லியன் – சுமார் 2,07,90,00,00,00,000 (இருபது இலட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரம் கோடிகள் – தகவல்: Global Corruption Barometer by Transperancy International.)
அமர்சிங் இந்தியாவின் மிக முக்கியமான தடாலடி அரசியல்வாதி. ஒரு பக்கம் அனில் அம்பானி. இன்னொரு பக்கம் அமிதாப் பச்சன் என்று போஸ் கொடுக்கும் அசாத்திய விளம்பரப் பிரியர். திடீரென அவர் மீது ரூ.400 கோடிக்கு சட்டத்துக்குப் புறம்பான வகையில் பணம் கைமாற்றியதாகக் குற்றச்சாட்டு. 600 நிறுவனங்கள். எக்கச்சக்க பினாமி இயக்குநர்கள். உ.பி காவல்துறை அமர்சிங்குக்காகத் தனியாக டிவிஷன் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் லாரி டிரைவர்கள் வருடத்திற்கு ரூ.22,500 கோடிகள் போலீஸ்காரர்களுக்கும் எக்செஸ் ஊழியர்களும் கப்பம் கட்டுகிறார்கள் என்கிறது ஒரு தகவல். லாரி டிரைவர்கள் மட்டுமே இவ்வளவு பணம் தருகிறார்கள் என்றால், மற்றத் துறைகள், அதில் புழங்கும் ஊழல்கள், லஞ்ச லாவண்யங்கள், அதிகாரிகள் – முதலாளிகள் உறவுகள் என விரியும் நெட்வொர்க்கில், இந்தியாவில் இரண்டு பொருளாதார சூழல்கள் இருக்கின்றன. நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் சொல்லப்படும் பணம். இன்னொன்று எந்த பேப்பரிலும் பதியாமல் புழங்கும் கருப்புப் பணம்.
பணம். வரி கட்டாத பணம். சட்டத்தினை ஏமாற்றிய பணம். லஞ்சப் பணம். கட்டிங். முதலாளிகள் கணக்கில் காட்டாமல் ஏமாற்றும் பணம். ட்ராபிக் போலீஸ்காரர்கள் வாங்கும் ரூ.50லிருந்து, ஹசன் அலியின் ரூ.50,000 கோடி வரை எவ்விதமான நேர்மையுமில்லாமல், வரி கட்டாமல், ஏய்த்து, மிரட்டி, ஏமாற்றிப் புழங்கும் பணம்.
அன்னியனில் விக்ரம் “ஐஞ்சு பைசா, ஐந்து கோடி பேரு, தினமும் அஞ்சஞ்சு தடவை திருடினா தப்பா” என்று கேட்டதின் பின்னிருக்கும் சுவாரஸ்யமான, அபாயமான, அசாதாரணமான கதையின் ஹீரோ – கருப்புப்பணம்.
என்னதான் இருக்கிறது கருப்புப் பணத்தில்? எப்படி உருவாகிறது? யார் தருகிறார்கள்? எவ்வாறு கைமாறுகிறது? எவ்வளவு பணம் இந்தியாவில் இந்த ரீதியில் இருக்கும்? இதற்கெல்லாம் ரஜினி ‘சிவாஜி’ பின்னணி இசையுடன் பென்ஸில் வந்து இறங்கிக் கற்றுக்கொடுக்க மாட்டார்.
ஒரு விஷயம். கருப்புப்பணத்தின் அடிப்படை புரியாமல், வெற்று கூச்சல் எழுப்புவதில் அர்த்தமில்லை. அது ஒரு தனி மேட்டர். சற்றே பெரிய மேட்டர். தனி மால். தனியே, ஆழமாக அலசியெடுத்துப் பிழிந்து பார்க்கவேண்டிய சமாசாரம்.
பார்த்துவிடலாம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக