வெள்ளி, 6 மே, 2011

கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வரை ஜாமீன் கோர மாட்டேன் என்று கூறி வந்த திமுக எம்பி கனிமொழி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவருக்கு ஜாமீன் கோரி வாதாடினார்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் அந்தத் தொலைக்காட்சிக்கு ரூ. 124 கோடியை ஸ்வான் டெலிகாம் தந்த வழக்கில் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். அவர் கூறுகையில், கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. நிர்வாகத்தின் முழு பொருப்பையும் சரத் குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது. மேலும் அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை.

கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

அதே போல சரத்குமாரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக