திங்கள், 16 மே, 2011

தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றக் கூடாது: ராமதாஸ்

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை இடம் மாற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத்துக்குச் சொந்தமான சென்னை ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகத்தை நடத்துவதற்கு இடம் போதாது என்பதால்தான் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்ற யோசனை எழுந்தது.

திமுக ஆட்சியில் தமிழக மக்களின் வரிப் பணம் ரூ.1,200 கோடியை செலவிட்டு புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் வடிவமைப்பு சரியில்லை என்று கூறி தற்போது மீண்டும் கோட்டைக்கே மாற்றுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

தமிழகத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கவும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி புதிய ஆட்சிப் பயணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் தொடங்க வேண்டும்.

அதற்கு மாறாக தலைமைச் செயலகத்தை மாற்றுவது, சட்டப்பேரவைச் செயலகத்தை மாற்றுவது போன்றவை மக்களின் மனதில் எதிர்மறையாக எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே, புதிய தலைமைச் செயலகத்தை மாற்றும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
English summary
PMK founder Ramadoss has urged CM Jayalalithaa to shun the plan of shifting the secretariat back to Fort. St George

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக