திங்கள், 16 மே, 2011

ஜெ.வுக்கு சோனியா அழைப்பு எதிரொலி-அமைச்சரவையிலிருந்து விலகுகிறது திமுக

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்தால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே அந்தர்பல்டி அடித்தது காங்கிரஸ்.

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை வசதியாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை போனில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சிதான். ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடைமுறைதான் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல்லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரிகிறது.

இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கூட்டணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வேண்டும் என்றே திமுகவை சீண்டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுகவுக்கு உள்ளனர்.

மேலும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு. சோனியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்திக்குகத் தெரியாததல்ல. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக தலைவரை அவர் வாழ்த்துவது என்பது சீரியஸான ஒரு விஷயம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கருத்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.
English summary
Upset with Congress chief Sonia Gandhi's courtesy call to AIADMK leader J Jayalalithaa, the DMK is considering pulling out its ministers from the Union cabinet and provide only outside support to its long-time ally at the Centre. An AIADMK statement on Saturday said Sonia had called Jaya to convey her ''best wishes'' on her electoral success. DMK seniors, including party chief M Karunanidhi, have held informal discussions for two days since Saturday and probed the option of providing outside support to Congress.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக