ஞாயிறு, 1 மே, 2011

ரசிகர் மன்றங்களைக் கலைத்தார் அஜித்

தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார் நடிகர் அஜித். தனிப்பட்ட கருத்துகளுக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது எனது எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை என ரசிகர் மன்ற கலைப்புக்கு காரணமும் தெரிவித்துள்ளார்.  அவரது 40-வது பிறந்தநாள் மே 1-ஆம் தேதி வருகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  இத்தனை நாள் திரைப் பயணத்தில் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த அனைவருக்கும் நன்றி. என்னை நீண்ட நாள்களாகவே சிந்திக்க வைத்த கருத்தை சொல்ல இது உகந்த நேரம் என நினைக்கிறேன். நான் என்றுமே ரசிகர்களை சுயநலத்துக்காகப் பயன்படுத்தியதில்லை. என் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை.  என் படங்களின் தரம் குறித்து அவர்களுக்கு விமர்சிக்க உரிமை உண்டு. என் படத்தை ரசிக்கும் அனைவரும் என் ரசிகர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். ரசிகர்களில் நான் வித்தியாசங்களை பார்ப்பதில்லை. கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இயங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தைப் பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ண ஒட்டத்துக்கு உகந்ததாக இல்லை.  சமுதாய பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து.  அதனால் இன்று முதல் என் தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறி வரும் காலக்கட்டத்தில் பொது மக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதனால் திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொது மக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கௌரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் எனது உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே என் பிறந்த நாள் பரிசாகும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்.  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு "பெப்ஸி' அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா'வில் கலந்து கொண்ட அஜித், திரைப்பட அமைப்புகள் தன்னிச்சையாக செயல்படுவது குறித்து வெளிப்படையாகப் பேசினார்.  ""ஒவ்வொரு பாராட்டு விழாவின் போதும் கலந்து கொள்ளுமாறு சிலர் மிரட்டுகிறார்கள். கலந்து கொள்ளவில்லை என்றால் தமிழன் இல்லை என்று பச்சை குத்துகிறார்கள். அரசியலுக்கு வரவும் விட மாட்டர்கள். வந்தாலும் மிரட்டுகிறார்கள்'' என விழாவில் அவர் பேசிய பேச்சுக்கு வார்த்தைக்கு வார்த்தைக்கு அரங்கம் அதிரும் கைத்தட்டல். ரஜினியே எழுந்து நின்று கைத்தட்டும் அளவுக்கு அவர் பேச்சு அமைந்தது. அதன் பின் பொது விழாக்களில் கலந்து கொள்வதை அஜித் தவிர்த்து வந்தார். இப்போது தன் 50-வது படமான "மங்காத்தா' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக