சனி, 28 மே, 2011

நன்றி அறிவிப்பு’, ‘கட்சிப் பணி’ என்று மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் மு.க.ஸ்டாலின்.

எதிர்பாராத  தோல்வி, காலைச் சுற்றும் ஸ்பெக்ட்ரம் வழக்கு என தி.மு.க. திக்கித் திணறிப் போய் உள்ளது. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சகஜநிலைக்கு வர சில மாதங்கள் கூட ஆகலாம். இருந்தாலும், ‘நன்றி அறிவிப்பு’, ‘கட்சிப் பணி’ என்று மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் மு.க.ஸ்டாலின்.
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்து நிற்கிறது. ‘மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்கு கிறோம், தொடர்ந்து மக்கள் பணி செய்வோம்’ என்ற வழக்கமான அறிக்கைக்குப் பதில், ‘தமிழக மக்கள் எனக்கு ஓய்வளித்து விட்டார்கள்’ என்று அவர் கூறியிருப்பதே அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை என்பதற்கு உதாரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்நிலையில், கனிமொழி கைதுப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், அவரைக் காப்பாற்றும் வேலைகளில் மட்டுமே கருணாநிதி கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

இந்நிலையில், ஆட்சி போன பிறகு, கனிமொழி விவகாரத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவதால், கட்சியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தி.மு.க. தொண் டர்கள் குழம்பிப் போனார்கள்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்று சில சீனியர் தலைவர்களிடம் பேசினோம்.

‘‘தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டதாக உணர்கிறோம். கட்சியில் என்ன நடக்கிறது என்று குழம்பிக் கொண் டிருந்தோம். அப்போதுதான் தேர்தல் தோல்வியிலிருந்து ஸ்டாலின் மீண்டார்.

‘தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டு கட்சிக்கே பிரச்னை ஏற்படும்’ என்று நினைத்தார் ஸ்டாலின். சரியான எதிர்க்கட்சியாக செயல்படாவிட்டால் மக்கள் மன்றத்திலும் விஜயகாந்த் இடம் பிடித்துவிடுவார் என்பதை தளபதி உணர்ந்தார்.

இதனால், தான் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியை மூன்று நாட்கள் வலம் வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன் பிறகே தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகம் பிறந்தது. தற்போது தன்னைச் சந்திக்க வரும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் தேர்தல் தோல்வி பற்றி தளபதி வெளிப்படையாகப் பேசுகிறார். ‘குடும்ப அரசியல்தான் தேர்தல் தோல்விக்குக் காரணம்’ என்று விமர்சிக்கும் கட்சிக்காரர்களிடம் அவர் கோபப்படுவதில்லை.

கட்சியைக் காப்பாற்ற ஸ்டாலின் எடுத்திருக்கும் அடுத்தகட்ட முயற்சி தி.மு.க.வினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிமட்டத் தொண்டனை ஊக்குவிப்பதன் மூலமே கட்சியை ஸ்திரப்படுத்த முடியும் என்று நம்புகிறார் ஸ்டாலின்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தங்கியிருந்து கிளைச் செயலாளர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசி தேர்தல் தோல்வி பற்றி ஆய்வு செய்வதோடு கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து அவர்களிடம் விவாதிப்பதன் மூலம் மறுபடியும் கட்சிப் பணிகளை முடுக்கி விட முடிவு செய்திருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் தொண்டர்கள் தரிசனத்தை தளபதி தொடங்குகிறார்’’ என்கிறார்கள் தி.மு.க. சீனியர் தலைவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக