ஞாயிறு, 15 மே, 2011

புத்தர் சிலையைப் பார்த்து இரு கரம் கூப்பும்போது நம்மையறியாமல் மனசுக்குள் சேர்ந்துவிட்ட அழுக்குகள்

இ ந்தியாவில் உள்ள புகழ் வாய்ந்த ஆன்மிகத் தலங்களையெல்லாம் தரிசித்து விட்ட எனக்கு பக்கத்திலேயே இருக்கும் இலங்கையில் உள்ள கதிர் காமனையும், புத்த விஹாரங்களையும் தரிசிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. போரெல்லாம் ஓய்ந்து விட்டதால் அந்த ஆசை இன்னும் அதிகமாகிவிட்டது எனக்கு.

கடந்த 30 வருடங்களாகவே துப்பாக்கி சத்தமும், பதுங்குக் குழிகளுமாகவே இருந்த வந்த இலங்கையில் அமைதியே உருவான ஆன்மிக சுற்றுலாத்தலங்கள் நிறைய இருக்கிறது என்று சொன்னால் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்கள். அவ்வளவு ஆச்சரியத்துடன்தான் ஒரு குழுவாக இலங்கைக்குப் பயணமானோம்.

இலங்கை ஒரு சிறு தீவு. இந்த நாட்டின் உணவுப் பழக்கங்கள் இலங்கையின் தென்னை மரங்கள், சுற்றுச்சூழல், வீடுகள் எல்லாமே கேரளாவை நினைவுபடுத்துகின்றன.

நாங்கள் முதலில் தரிசித்தது திருக்கேதீஸ்வரம், திருகோணமலை தலங்களை. சம்பந்தராலும், சுந்தரராலும் பாடல் பெற்ற தலங்கள் இவை. அடுத்ததாக இலங்கையின் எவர் க்ரீன் ஹீரோ கதிர்காமம் முருகனை தரிசித்தோம்.

கதிர்காமத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் திரையில் காட்சி தருகின்ற எழில்கோலம் அத்தனை பரவசம்.

யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற நல்லூர் முருகன் கோயில், சிவன் கோயில், காளிகோயில், கடல் நடுவே அமைந்த நயினா தீவில் உள்ள ஸ்ரீநாகபூஷணி அம்மன் கோயில் என்று இலங்கையின் அத்தனை ஆன்மிகத் தலங்களையும் தரிசித்துவிட்டு கண்டியில் புத்தருடைய பல் பாதுகாக்கப்பட்டுள்ள அந்த புத்தர் கோயிலை காணப் புறப்பட்டோம். ஆலயத்துக்குள் நுழையும்போதே மனசுக்குள் ஒரு அமைதி ஓடோடி வந்து ஒட்டிக் கொள்கிறது. புத்தர் சிலையைப் பார்த்து இரு கரம் கூப்பும்போது நம்மையறியாமல் மனசுக்குள் சேர்ந்துவிட்ட அழுக்குகள் கூட கண்ணீராய் பெருக்கெடுத்து வெளியே வந்துவிடுகிறது. புத்தர் சிலை அந்தளவுக்கு உயிர்ப்புடன் இருக்கிறது.

அடுத்து நாங்கள் சென்றது கோடை வாசஸ்தலமான நுவரேலியா. இராவணன் சீதையை சிறை வைத்த அசோக வனம் இங்குதான் இருக்கிறது. சீதை உட்கார்ந்திருந்தது இந்த மரத்தின் கீழே இருக்குமோ, அந்த மரத்தின் கீழ் இருக்குமோ என்று அந்த வனத்துக்குள் பேசியபடியே நடந்தது, ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது எங்களுக்கு.

பயண முடிவில் கொழும்பில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண சாரதா மிஷனுக்குச் சென்றிருந்தோம். யுத்தத்தில் பெற்றோரை இழந்த சிறுமிகள் நிறையப் பேரை தத்து எடுத்து, அவர்களுக்கு உதவி செய்து வருகிறது இந்த சாரதா மிஷன். இங்குள்ள பெண் குழந்தைகளைப் பார்க்கும்போது, இனியொரு தடவை யுத்தமே இந்த மண்ணில் வரக்கூடாது என்றுதான் தோன்றுகிறது.
தமிழ்மக்கள் வசிக்கும் இடங்களில் பாடசாலை, மருத்துவமனை, புகையிரத நிலையம் என்று தமிழ்ப் பெயர்கள்தான் காணப்படுகிறது. அங்குள்ள மக்கள் பேசும் தமிழ் வித்தியாசமாக இனிமையாக இருக்கிறது. நம்மிடம் அன்பாக விசாரிக்கிறார்கள். கொழும்பில் கடைசியாக பொன்னம்பல வாணர் கோயில் தரிசனம் செய்து விட்டு உள்ளம் முழுதும் பக்திப் பரவசத்தோடு இந்தியா திரும்பினோம்.

& பி.ராஜகுமாரி, சிதம்பரம்.
எப்படி செல்வது?
இலங்கைக்கு தற்போது கடல் வழியாக செல்ல முடியாது. ஃபிளைட்டில் சென்று வர ஒருவருக்கு 6,000/- ரூபாய் ஆகும். 4 பகல், 3 இரவு இலங்கையில் தங்கும் டூர் பேக்கேஜ் குறைந்தது 13,000 ரூபாய் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக