ஞாயிறு, 15 மே, 2011

50 நிமிட ஆங்கிலப்பேச்சும் பக்தர் களுக்குத் தெலுங்கில்தான் கேட்டிருக்கிறது

கவான் சத்யசாயிபாபா, பரம்பொருள்; நித்யமானவர்; நிரந்தரமானவர்; நம்பிச் சரணடைந்தோரை என்றும் காக்கும் இறைவன்; சிவசக்தி ஸ்வரூபராய் உலகெங்கும் வழிபடப்படும் உன்னதத் தெய்வம்!
சுவாமி பாபாவின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் லீலைகள், மகிமை கள், உபதேசங்கள் வெளிப்படும் என்று சொல்லப்பட்டாலும், எப்போதுமே இந்த மூன்றும் சேர்ந்த அற்புதமாகத்தான் சுவாமி இருக்கிறார்.
தன்னையே நம்பி, மனமுருகிக் கரைந்துருகும் பக்தர்களை அன்புடன் அரவணைத்துக் காத்து அருள்பொழிவதும், அனுக்கிரகம் புரிவதும் அவருடைய சாசுவதமான தெய்வீக இயல்பாக இருக்கின்றன. சாயி தந்த தெய்வீக அனுபவங்களை, உலகெங்கும் உள்ள பக்தர்கள் சொல்லத் தொடங்கினால், அது ஒவ்வொன்றும் ஒரு புத்தகமாகிவிடும். நானறிந்த சுவாமியின் சில லீலைகளை, மகிமைகளை, சுவாமியின் சங்கல்பப்படி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சுவாமி சத்யசாயிபாபா ஒவ்வொருவருக்கும் தரும் அனுபவங்கள் முழுமையானவை. அவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அருள்தந்து கொண்டிருப்ப தைப்போன்ற அனுபவத்தை, சுவாமி ஒவ்வொருவருக்கும் தருகிறார். டாக்டர் சுந்தரவல்லி, ஆங்கிலப் பேராசிரியை. பல துறைப் படிப்பும் பல பட்டங்களும் பெற்றவர்; சமூகசேவகி; மனநல மருத்துவ ஆலோசகர். வைணவக் குடும்பம்; குழந்தைப்பேறு இல்லை. கணவர் சுரேஷ§க்கு அடிக்கடி வேலையில் மாற்றல் வந்துகொண்டிருந்ததால் குற்றாலம், மதுரை, கொடைக்கானல் என்று சுந்தரவல்லி, கல்லூரி கல்லூரியாக மாறிப்போய்க்கொண்டிருந்தார். அதே ரீதியில் விஜயவாடாவில், கல்லூரியின் முதல்வராக சில காலம் இருந்தார். தெலுங்கு சரியாகத் தெரியாததால், அங்கு பிரச்னையும் குழப்பமும் அவருக்கு ஏற்பட்டது. நம்பிக்கையான சிலர் மூலம், சிக்கலான நேரங்களில் சமாளித்தார்.
ஒருமுறை, சத்யசாயி சமிதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், சுவாமியின் பிறந்த நாள் தொடர்பான குரு விழாவில் பேச, சுந்தரவல்லியை அழைத்தார். இவரோ... 'சாயிபாபாவைப் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது, வரவில்லை’ என்றார். வந்தவரோ திரும்பத் திரும்ப வந்தார். புத்தகம் தந்து, 'ஆன்மிக மேன்மை பற்றித்தானே பேசப்போகிறீர்கள். உங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள் வந்து பேச வேண்டும்’ என்று வற்புறுத்தினார். சரி என்று அழைப்பை ஏற்று, அந்த சாயிசமிதி விழாவுக்கு இவர் போனபோது, தனது கல்லூரியில் பணிபுரியும் ராமகிருஷ்ணன் என்கிற பேராசிரியரை அங்கே பார்த்தார். அவர் சுந்தரவல்லியை வரவேற்று, 'மேடம், நீங்க தெலுங்குல பேசுங்க’ என்றதும், இவருக்குக் கோபம் வந்துவிட்டது. 'தெலுங்கு தெரியாதவள் எப்படித் தெலுங்கில் பேச முடியும்? வம்புல மாட்டிவிடப் பார்க்கிறீர்களா?’ என்றார். ராமகிருஷ்ணன் சொன்னார்... 'சுவாமி பாபா உங்களுக்குள்ளிருந்து பேசுவார்!’
பிறகு, கோபத்தை அடக்கிக்கொண்டு, தன் முறை வந்ததும் வழக்கம்போல் ஆங்கிலத்தில் பேசினார் சுந்தரவல்லி. சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் பேசினார். பக்தர்கள் கைத்தட்டியபடியே இருந்தனர். பேசி முடித்ததும், ராமகிருஷ்ணன் மேடைக்கு ஓடிவந்து, ''அழகாக தெலுங்கில் பேசி அசத்திவிட்டீர்களே!'' என்று பாராட்ட, குழப்பத்துடன் இவர் மறுத்து, ''இல்லை. நான் ஆங்கிலத்தில்தான் பேசினேன்'' என்றார். ராமகிருஷ்ணன் உடனே மைக்கைப் பிடித்தார்... ''சாயிராம்! சுவாமியைப் பற்றி இங்கு பேசிய மேடம் ஆங்கிலத்தில்தான் பேசினார்களாம்'' என்று சொல்ல, அவ்வளவுதான்... எல்லாரும், 'சாயிராம், சாயிராம்’ என்று எழுந்து நின்று, கைத்தட்டினார்கள். சுந்தரவல்லிக்கு அப்புறம்தான் தெரிந்தது, இவரது 50 நிமிடப் பேச்சும் பக்தர் களுக்குத் தெலுங்கில்தான் கேட்டிருக்கிறது, என்பது! முழுக்கவும் சுவாமி, இவருக்குள்ளிருந்து தெலுங்கில் பேசியிருக்கிறார். இவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அன்றிலிருந்து தெலுங்கில் இவரால் சரளமாகப் பேச முடிந்தது! சுவாமி, இவருக்குத் தந்து வரும் அனுபவங்கள் அற்புதமானவை. இப்போது புட்டபர்த்தியில் தங்கி, கணவருடன் சாயி சர்வீஸில் ஈடுபட்டு வருகிறார் சுந்தரவல்லி.
சுவாமி சத்யசாயிபாபாவின் இளம்பருவத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம், அவர் கடவுள் என்று கட்டியங் கூறுகிறது.
கேரளாவில்... கோட்டயம் அருகே ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தை... இறந்தே
பிறந்தது. நீலக்கலரிலிருந்தது குழந்தை. பெற்றோர் துக்கம் தாளாமல் அழுதனர். வேதனை, பாரமாய் அவர்களை அழுத்தியது. அழுகைக்கும் புலம்பலுக்கும் இடையே, அந்தத் தாய்க்கு மட்டும் ஒரு குரல் கேட்டது... 'புட்டபர்த்திக்கு வா! புட்டபர்த்திக்கு வா! இந்தக் குழந்தையோடு புட்டபர்த்திக்கு வா!’ என்று தெளிவாகக் கேட்டது. துக்கத்துக்கு நடுவே திகைப்பு... என்ன குரல் இது? யார் பேசுவது? இது பிரமையா? குழப்பத்தால் இப்படித் தோன்றுகிறதா? ஆனால், குரல் திரும்பத் திரும்பக் கேட்டது. அவள் தன் கணவனிடம் இதனைத் தெரிவித்தாள். ஆனால், அவனோ அவளது பரிதாபகரமான மனநிலைக்காக இன்னும் வருந்தினான். ''குழந்தை இறந்த துக்கத்தில் உன் மனம் பேதலித்துவிட்டது. இது உன் மனப்பிரமை. பேசாமல் இரு'' என்றான். இருந்தாலும், அக்கம்பக்கத்தில் புட்டபர்த்தியைப் பற்றி விசாரித்தான். ''அப்படியரு கிராமம், ஆந்திராவில் இருக்கிறது. அங்கு இளம்சாமியார் ஒருவர் இருக்கிறார்'' என்றார்கள்.
மனைவி சொன்னது சரியாக இருந்தது. அதை அவளிடம் சொன்னான். ''பார்த்தீர்களா? நான் சொன்னது சரி! இன்னமும் அந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. குழந்தையை நன்றாகத் துணியில் சுற்றி, ஒரு சூட்கேஸில் வைத்துக்கொண்டு, உடனே கிளம்புவோம்'' என்றாள். அதன்படி, இருவரும் குழந்தையை சூட்கேஸில் வைத்து எடுத்துக்கொண்டு, புட்டபர்த்திக்குப் பயணமாயினர்.

வழிகேட்டு, விசாரித்து, சுவாமி மந்திருக்குப் போய், சூட்கேஸோடும் பதைபதைக்கும் நெஞ்சோடும் உட்கார்ந்திருந்தார்கள். சுவாமி, தரிசனம் தருவதற்காக வந்தார். பலரின் கடிதங்களைப் பெற்றுக்கொண்டார். இவர்கள் பக்கமே திரும்பாமல் போய்விட்டார். இவர்களுக்கு ஒரே குழப்பம். 'இதென்ன... இங்கு இவர் வரச்சொல்லியிருந்தால், ஏன் நம்மிடம் வரவில்லை? சரி, நாளை வருவோம்’ என்று மறுநாளும் வந்து அமர்ந்தனர். அன்றும் சுவாமி, அவர்கள் பக்கம் வருவது மாதிரி தெரிய வில்லை; உடனே உள்ளே போய்விட்டார்.
''சரி, இதற்குமேல் இங்கு இருக்க வேண்டாம். இறந்த குழந்தையை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருக்க முடியும்! நமக்குக் கொடுத்து வைக்கவில்லை; கிளம்புவோம்'' என்று இருவரும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு எழுந்தனர். அப்போது ஆஸ்ரமத்திலிருந்து பக்தர் ஒருவர் வேக மாக ஓடிவந்து, ''சுவாமி உங்களை சூட்கேஸுடன் இங்கேயே இருக்கச் சொல்கிறார்'' என்று சொன்னார்.
அசந்து போனார்கள் அவர்கள். 'சுவாமிக்கு நாம் வந்திருப்பதும், இறந்த குழந்தை சூட்கேஸுக்குள் இருப்பதும் தெரிந்திருக்கிறது. இங்கு நம்மை வரச்சொன்னவரே இவர்தானே!’ என்று அதிசயித்துப் போனார்கள்.
சில நொடிகளில், ஆரஞ்சு அங்கியில் பகவான் பாபா, ஆஸ்ரமத்திலிருந்து தன் செல்ல யானை 'சாயி கீதா’வுடன் வந்தார். அதன் காதில் ஏதோ சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார். அந்தத் தம்பதி திகைப்பும் திணறலுமாக சுவாமியைத் தொழுதனர். சுவாமி, அவர்களிடம் குழந்தை இருக்கிற அந்த சூட்கேஸை எடுத்து, நிறுத்தச் சொல்ல... அப்படியே செய்தனர். யானை சாயி கீதா வந்து, வேகமாக அந்தச் சூட்கேஸின் மீது உதைவிட்டுத் தள்ளியது.
அடுத்த நிமிடம் தும்பிக்கையை சூட்கேஸின் மேல் நிறுத்தி, 'ஸ்பிரே’ செய்வதைப்போல நீர் பொழிந்தது. சூட்கேஸிலிருந்த குழந்தை, வீறிட்டு அழுதது. பெற்றோர் ஆனந்தம் தாங்காமல், கதறி அழுதனர். சுவாமி சிரித்தபடி அபய ஹஸ்தம் காட்ட, அவர்கள் சூட்கேஸிலிருந்து குழந்தையை எடுத்து சுவாமியின் திருப்பாதங்களில் இட்டனர்.
சுவாமி அந்தக் குழந்தையை அன்போடும் கருணையோடும் ஆசீர்வதித்தார். 'சாயிராம்... சாயிராம்...’ என்று பக்தர்கள் கோஷம் எழுப்பியபடி, பகவானைத் துதித்தனர்.
குருவின் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்து, அவர் சொல்லும் வார்த்தைகளை மந்திரமாகக் கொண்டால், நினைத்தது நடக்கும். அது என்ன வார்த்தை, என்ன வாக்கியம் என்ற ஆராய்ச்சியே கூடாது.
சுவாமி, கூட்டம் ஒன்றில் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்ணொருத்தி, காணாமல் போன வைரத் தோடுகளைப் பற்றிக் கேட்டாள் உடனே சுவாமி, ''ஏதாவது ஒரு பொருள் தொலைந்து
விட்டால், 'காசி கால பைரவா’ என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், காணாமல் போன பொருள் கிடைத்துவிடும்'' என்றார். உடனே அந்தப் பெண், தொடர்ந்து மனமுருகிப் பிரார்த்தனை செய்ய, அந்த வைரத் தோடு, வீட்டிலேயே ஓர் இடத்தில் கிடைத்து விட்டது. அதே நேரத்தில், சிவகாசியில் இருந்து வந்திருந்த இன்னொரு பெண்மணி, சுவாமியின் பேச்சைக் கேட்டும், அதன்படி அந்தப் பெண்ணுக்கு வைரத் தோடு கிடைத்ததை நினைத்தும் ஆச்சரியப்பட்டாள்.
பல வருடங்களாக துக்கத்தில் மூழ்கியிருந்த அவளுக்கு நம்பிக்கை வந்தது. அவளுடைய மகன், காணாமல் போய் 17 வருடங்களாகி விட்டது; எங்கு தேடியும் கிடைக்கவில்லை; அவன் போன திசையும் தெரியவில்லை. பகவானின் அன்பும் அவர் சொன்ன மந்திரமும், மகன் கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கையை அவளுக்குள் ஏற்படுத்தின. காணாமல் போன தன் மகன் கிடைக்கவேண்டும் என்கிற வேண்டுதலுடன் ஊருக்குத் திரும்பிப் போன பெண்மணி, தீவிரமாக தினமும் 'காசி கால பைரவா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு மாதமாக அவள் பிரார்த்தனை, பலத்த நம்பிக்கையுடன் தொடர்ந்தது.
ஒருநாள்... திடீரென அவர் மகன், 'அம்மா’ என்று கூப்பிட்டபடி வந்து நின்றான். மகிழ்ச்சியில் திணறினாள் அவள். மகனை உபசரித்து மகிழ்ந்தவள், 'எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டாள்.
''பல இடங்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த என்னை புட்டபர்த்திக்கு வரச்சொல்லி யாரோ அழைத்தார்கள். சரி, அங்கேயும் போவோமே என்று சென்றேன். தரிசனத்தில், பாபா என்னை அழைத்து
ஆசீர்வதித்துச் சாப்பிடவைத்து, சிவகாசிக்குச் செல்லப் பணமும் கொடுத்து, 'உடனே ஊருக்குப் போ! உன் அம்மாவிடம் போய்ச் சேர்’ என்று அனுப்பினார்'' என்று மகன் சொல்லவும், நெக்குருகினாள் அந்தத் தாய். அவள் பாபாவின் மேல் கொண்ட நம்பிக்கையே மகனை வரவழைத்தது. அவள் தனது அக்கம்பக்கத்து ஜனங்கள், உறவுக்காரர்களையெல்லாம் அழைத்து, மகன் வந்ததையும் சுவாமி எப்படி அனுப்பினார் என்பதையும் சொல்லி ஆனந்தித்தாள்! 'கடவுள் புட்டபர்த்தியில் இருக்கிறார்; வாருங்கள் தரிசிக்கலாம்’ என்று ஊர்மக்கள், உறவுமக்கள் என 180 பேரை அழைத்துக்கொண்டு, புட்டபர்த்திக்குச் சென்றாள். சுவாமியைத் தரிசித்து, அனைவரும் பேரானந்தம் அடைந்தனர்.
'வானத்து மீனை உன்னால் அளக்க முடியுமா? என் தெய்வீகத்தை உன்னால் அளக்க முடியாது’ என்கிறார் சுவாமி பாபா. அவரது மகிமைகளுக்கு, லீலைகளுக்கு எல்லையே இல்லை!
பகவான் சத்யசாயிபாபா, தன்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டு பக்தி செலுத்தும் அத்தனை பேருக்குள்ளேயும் இருக்கிறார்; அனைவருடனும் வாழ்கிறார்; அனைவரையும் வாழவைக்கிறார்! சுவாமி பாபாவின் பொற்பாத கமலங்களைப் பணிந்து, அவரின் பேரருளைப் பெறுவோம்!
ஆங்கிலப்பேச்சும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக