திங்கள், 30 மே, 2011

கூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு

சென்னை:""கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:ம.தி.மு.க., துவக்கி 18 ஆண்டுகளில் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என, பல தேர்தலை சந்தித்துள்ளோம். ம.தி.மு.க., தனியாகவும், கூட்டணியும் அமைத்து போட்டியிட்டுள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்த போது, கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.ம.தி.மு.க., கூட்டணி வேண்டுமென அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அழைப்பு விடுத்தன. இதற்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். பல சமரசங்களை செய்து கொண்டு, கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்.

கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தான் கூட்டணியை விட்டு வெளியேற்றின. நாங்களாக வெளியேறவில்லை. வெற்றி, தோல்வி எங்களுக்கு கிடைத்தாலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அது என்றும் தொடரும். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக எங்கள் மீது பழி சுமத்தினர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலை நாங்கள் சந்திக்காததால், அப்பழியிலிருந்து விடுபட்டுள்ளோம்.அ.தி.மு.க.,வின் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என அறிவித்து, சர்வதேச கோர்ட்டில் விசாரிக்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு, பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என, அ.தி.மு.க., அரசு வலியுறுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை களைந்து விட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய தலைமைச் செயலக கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க., தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு மக்களுக்காக, தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு வைகோ பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக